இளமை புதுமை

பற…பற… சைக்கிளில் பற…

செய்திப்பிரிவு

சைக்கிள் பயன்பாடு உலகம் முழுவதும் சிறிது சிறிதாக அதிகரித்துவருகிறது. உடல்நலன் சார்ந்த தேவைக்களுக்காகவாவது சைக்கிள் பக்கம் தங்கள் பார்வையைப் பலரும் திருப்பத் தொடங்கியிருக்கிறார்கள்.

ஆனால், 25 ஆண்டுகளுக்கு முன்புவரை சைக்கிள் என்பது ஒவ்வொருவருடைய வாழ்க்கையோடும் பின்னிப் பிணைந்த வாகனமாக இருந்தது. சந்துபொந்துகளில் எல்லாம் விரைந்து செல்லும் வாகனம் சைக்கிள். சைக்கிள்களுக்குச் சிக்னல் எல்லாம் ஒரு பொருட்டே அல்ல. மீண்டும் கவனம் பெறத் தொடங்கியிருக்கும் சைக்கிள் பற்றிச் சில அறியப்படாத தகவல்கள்:

# சைக்கிளைப் பயன்படுத்துபவர்களில் 25 சதவீதத்தினர் வீட்டிலிருந்து 2 கி.மீ. தொலைவுக்கே அவற்றை ஓட்டுகிறார்கள்.

# வாரத்துக்கு 3 மணி நேரமோ 30 கிலோ மீட்டரோ சைக்கிள் பயணம் மேற்கொண்டால், இதயம் தொடர்பான நோய்களைத் தள்ளிவைக்கலாம்.

# உலகில் சுமார் 100 கோடி சைக்கிள்கள் பயன்படுத்தப்படுகின்றன. ஆண்டுதோறும் 10 கோடி சைக்கிள்கள் தயாரிக்கப்படுகின்றன.

# சைக்கிளைக் கண்டுபிடிக்கும் முயற்சி நீண்ட காலத்துக்கு முன்னரே தொடங்கிவிட்டது. பொ.ஆ. (கி.பி.) 1490-ல் லியனார்டோ டாவின்சி சைக்கிள் மாதிரியான ஒரு வாகனத்தை வரைந்திருக்கிறார்.

# டி சிவ்ராக் எனும் பிரெஞ்சுக்காரர் பொ.ஆ. 1790-ல் சைக்கிளை முதலில் வடிவமைத்தார். இதில் பெடலோ, ஹேண்டில் பாரோ இருந்திருக்கவில்லை. ஆனால் பார்ப்பதற்கு சைக்கிள் போலவே இருந்துள்ளது.

# ‘பை சைக்கிள்’ என்னும் சொல் பிரான்ஸில் 1860-ல்புழக்கத்துக்கு வந்தது.

# 1962-ல் நவீன சைக்கிள் பயன்பாடு அதிகரிக்கத் தொடங்கியது. இப்போது மின்சக்தி மூலமாக இயங்குகிற சைக்கிள்கள் சந்தையில் கிடைக்கின்றன.

# குறிப்பிட்ட தொலைவை காரில் கடப்பதற்குத் தேவைப்படும் ஆக்ஸிஜனின் அளவில் பாதியிருந்தால் போதும், அதே தூரத்தை சைக்கிளில் கடந்துவிடலாம்.

# சைக்கிளில் செல்ல இந்தியாவில் பொதுவாக ஹெல்மட் அணியப்படுவதில்லை. ஆனால், ஆஸ்திரேலியாவில் சைக்கிளுக்கும் ஹெல்மட் கட்டாயம்.

# தினமும் 16 கிலோ மீட்டர் தொலைவுக்கு சைக்கிளை ஓட்டினால் 360 கலோரிகளை எரித்துவிடலாம். கார் வெளிப்படுத்தும் 5 கிலோ கார்பன் டை ஆக்சைடு உமிழ்வைக் கட்டுப்படுத்தலாம்.

SCROLL FOR NEXT