இளமை புதுமை

ஐ.டி. உலகம் 19: நிஜ ‘டிஜிட்டல் இந்தியா’ எப்போ வரும்?

வி.சாரதா, எம்.மணிகண்டன்

“இந்திய இளைஞர்களிடம் காணப்படும் தலையாய விவாதமே ஐபோனா? ஆண்ட்ராய்டா? விண்டோஸா? எதை வாங்குவது என்பதுதான்" - சிலிக்கான் பள்ளத்தாக்கில் மோடி இவ்வாறு குறிப்பிட்டபோது அரங்கத்தில் சிரிப்பலை எழுந்தது. தகவல் தொழில்நுட்பப் பயன்பாட்டில் இந்தியா முக்கியமான சந்தையாக வளர்ந்திருப்பதை அவர் அவ்வறு சுட்டிக்காட்டினார்.

புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதில் வளர்கிறோம். ஆனால் மென்பொருள் உற்பத்தியில் முன்னேறுவது பற்றி விவாதிக்கிறோமா?

உள்நாட்டுச் சந்தையில் பிரபலமாக உள்ள பல மென்பொருட்கள் இந்தியர்களால் வளர்த்தெடுக்கப்பட்டவை. ஆனால், அவை இந்திய நிறுவனங்களுடையவை அல்ல. இவ்வாறு நம்முடைய அறிவுச் சொத்து விற்கப்பட்டுவிடுவதால், நாம் எப்போதுமே பயன்பாட்டாளர்களாக மட்டுமே இருக்க வேண்டிய சூழல் உருவாகிறது.

ஏன் வளரவில்லை?

இந்தியா கண்டுவரும் சேவைத் துறை வளர்ச்சியில் முக்கியமான பங்கு ஐ.டி. துறையினுடையது. பல லட்சம் ஐ.டி. பட்டதாரிகளுக்கு இந்தத் துறை வேலைவாய்ப்பை வழங்கியுள்ளது.

உலகறிந்த ‘கூகுள்’ நிறுவனத்தின் தலைமை நிர்வாகி ஒரு தமிழர். அடோப் போட்டோ ஷாப் மென்பொருளின் முக்கியப் பதவியில் இந்தியர் இருக்கிறார். ஐ.பி.எம். மென்பொருட்களின் சமீபத்திய புதுமைகள் அனைத்தும் இந்தியாவில்தான் படைக்கப்படுகின்றன.

ஆனால், ‘டிஜிட்டல் இந்தியா’ போன்ற திட்டங்களுக்காக நாம் பல நிறுவனங்களின் முதலீட்டுக்குக் காத்திருக்க நேர்கிறது. "அதிவேக இணையம் மற்றும் சேமிப்பகம் போன்ற வசதிகளுக்கான செலவு இந்தியாவில் மிக மிக அதிகமாக உள்ளது. பல பெரும் நிறுவனங்களே தங்கள் ‘இண்டர்ஃபேஸ்’ வசதிகளைச் சொந்தமாக வைத்திருக்கவில்லை. வன்பொருள் (ஹார்டுவேர்) உற்பத்தி அதிகரிப்பு மற்றும் குறைந்த செலவில் இணையக் கட்டமைப்பை உறுதி செய்தல் ஆகியவற்றின் மூலமே மென்பொருள் துறையில் இந்தியா கால் பதிக்க முடியும்" என்கிறார் அறிவுசார் பணியாளர் கூட்டமைப்பைச் சேர்ந்த அருண் பிரகாஷ்.

என்ன காரணம்?

இந்தியாவிலும் பல புதிய மென்பொருட்களைப் பொறியாளர்கள் உற்பத்தி செய்கின்றனர். ஆனால் அவற்றை வளர்த்தெடுக்கப் போதுமான முதலீடு கிடைக்காததால், யார் முதலீடு செய்கிறாரோ அவர்களைப் பயன்படுத்திக் கொள்கின்றனர். மைக்ரோசாப்ட், ஃபேஸ்புக் உள்ளிட்ட நிறுவனங்கள் அவ்வாறான கண்டுபிடிப்பாளர்களைக் குறிவைத்து இயங்குகின்றன.

‘ஐடியா’ என்ற நிலையிலேயே கண்டறிந்து தேவையான கருவிகள் மற்றும் வசதிகளைக் கொடுப்பதன் மூலம் அவற்றை வளர்த்தெடுக்கின்றனர். ஒரு கட்டத்தில் செயலிகளைத் தங்கள் வசமாக்கிவிடுகின்றனர்.

"நமது ஐ.டி. துறை வெளிநாடுகளை நம்பியே இருக்கிறது. உள்ளூர்ச் சந்தையை ஊக்குவிக்க வேண்டும். மென்பொருள் காப்புரிமை பெறுவது, இணையதள வசதி உள்ளிட்ட வசதிகளை ஆர்வம் உள்ளவர்களுக்குக் கற்றுக்கொடுக்க அரசு முன்வர வேண்டும். அப்போது நம் மக்களே புதிய கண்டுபிடிப்புகளைச் செய்வார்கள்.

ஆனால் துரதிர்ஷ்டவசமாக, நம் மக்களின் புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவிப்பதற்கு அரசு எதுவுமே செய்வதில்லை. ஐ.டி. மாணவர்களின் இறுதியாண்டுக் கண்டுபிடிப்புகள் (புராஜெக்ட்டுகள்) எதுவும் தொடர்ந்து வளர்த்தெடுக்கப் படுவதில்லை.

இந்நிலையில், அவர்களை ஐ.டி. நிறுவனங்கள் கண்டறிந்து பயன்படுத்திக் கொள்கின்றன. நமது கண்டுபிடிப்புகளை வளர்த்தெடுப்பதில் அரசு கவனம் செலுத்தினால் உண்மையான டிஜிட்டல் இந்தியா கனவு நனவாகும்" என்கிறார் யுனீக் டெவலப்பர்ஸ் புராடக்ட்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் இயக்குநர் வெல்கின்.

அரசு செய்யுமா?

டிஜிட்டல் பயன்பாட்டாளர்களாக உள்ள இந்தியர்களை, டிஜிட்டல் கண்டுபிடிப்பாளர்களாகவும் வளர்ப்பதன் மூலம் ஐ.டி. பணியாளர்களுக்கான வேலைவாய்ப்பை அதிகரிக்கும். சர்வதேச வேலைவாய்ப்புகள் குறைந்திருக்கும் சூழலில், இது காலத்தின் தேவையும்கூட.

ஐ.டி. நிறுவனங்களின் கூட்டமைப்பான நாஸ்காம், "டிஜிட்டல் இந்தியா திட்டம் அரசின் முக்கியமான முடிவுகளில் ஒன்றாகும். பெருமளவிலான மக்கள் நலத்திட்டங்களை உருவாக்குவதற்கும் வழங்குவதற்கும் இது உதவும். இந்தியப் பொருளாதாரத்தை வலுப் பெறச் செய்வதில் இதற்கு முக்கியப் பங்கு இருக்கும்" என்று குறிப்பிடுகிறது.

SCROLL FOR NEXT