உலகத்தின் பலவிதமான சவால்களை எதிர்கொண்டு வீரத் திருமகன்கள் பலர் வெற்றிவாகை சூடியிருக்கிறார்கள். ஆனால், எப்பேர்ப்பட்ட பராக்கிரமசாலியும் எதிர்கொள்ளத் திணறும் விஷயம் காதல். காதலுக்கு முன்னால் மாமலையும் சிறு கடுகுதான். எஸ்.எம்.எஸ்., வாட்ஸ் அப், மின்னஞ்சல், மெசஞ்சர் எனக் காதலைச் சொல்ல புதுப் புது வழிகள் கண்டுபிடிக்கப்பட்டாலும், வீராதி வீரன்களுக்கும் பழைய தயக்கம் போகவே இல்லை.
பழைய சினிமாக்களில் வசனம் வழியாகச் சுற்றிச் சுற்றிக் காதலைச் சூசகமாகச் சொல்வதெல்லாம் இன்றைக்கு எடுபடாது. நேரடியாக, எளிதாக விஷயத்தைச் சொல்ல வேண்டும். அதற்குப் பல வழிகளை நம்மூர் பையன்கள் கண்டுபிடித்தாலும் ‘பல்பு’ வாங்கிப் பாழாய்ப் போவதும் உண்டு. ஜப்பானில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் காதலைச் சொல்ல ரொம்பப் புதிய, எளிதான முறையைக் கண்டுபிடித்துவைத்திருக்கிறார்கள்.
பட்டன் காதல்
தாங்கள் விரும்பும் பெண் முன்னால் சென்று தங்கள் சட்டையின் இரண்டாம் பட்டனைக் கழற்றிக் காண்பிக்க வேண்டும். இப்படிச் செய்தால், ‘உன்னை எனக்குப் பிடித்திருக்கிறது. காதலிக்க விரும்புகிறேன்’ என்று அர்த்தமாம். அந்தப் பெண்ணுக்கும் பிடித்திருந்தால், தனது சட்டையின் இரண்டாம் பட்டனைக் கழற்றித் தன் சம்மதத்தைச் சொல்வார். இரண்டாம் பட்டன்தான் இதயத்துக்கு அருகில் இருக்கிறது. தன் மனத்தைத் திறந்து காண்பிப்பதற்குச் சமமானது இந்த இரண்டாம் பட்டன் விஷயம். காதலிக்காக நெஞ்சைப் பிளந்து இதயத்தைத் தர வேண்டிய அவசியம் இல்லை. பட்டனைத் திறந்து காண்பித்தால் போதும்.
சாக்லெட் காதல்
அதுபோல் ஜப்பானில் பெண்கள் தங்கள் காதலைத் தெரியப்படுத்த இன்னொரு விநோதமான வழியையும் கடைப்பிடிக்கிறார்கள். பிடித்த ஆண்களுக்கு நம்மூர் பெண்கள் மீன் குழம்பு சமைத்துத் தருவதைப் போன்றதுதான் அது.
ஆனால், இது கொஞ்சம் நவீன முறை. பொதுவாக அங்கே ஒரு பெண் தன் நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் கடை சாக்லெட்டைத் தந்துவிட்டு, வீட்டில் தயாரித்த சாக்லெட்டை மறைத்து எடுத்துக்கொண்டு சென்றால் அது காதல்தான். ஹோம் மேடு சாக்லெட்டைப் பரிசாகப் பெறுபவர் அதிர்ஷ்டசாலி. அவர் இந்தக் காதலை ஏற்றுக்கொண்டால் இரண்டாவது பட்டனைக் கழற்றிக் காண்பிக்கலாம்!
காதல் கரண்டி
இங்கிலாந்தில் வேல்ஸ் பகுதியில் காதலைச் சொல்ல அந்தக் காலத்தில் விநோதமான வழக்கம் இருந்திருக்கிறது. ஓர் ஆணுக்கு ஒரு பெண்ணைப் பிடித்துவிட்டால் உடனே அவன், மர உளி, சுத்தியல், ரம்பம் எல்லாம் வாங்க வேண்டியிருக்கும்! காதலைச் சொல்ல உடனடியாக ஒரு தச்சு வேலை செய்தாக வேண்டும். செய்யப்போகும் பொருள் காதல் கரண்டி (Love spoon). கரண்டி என்றதும் நாம் பயன்படுத்தும் தேநீர்க் கரண்டி என்று நினைத்துக்கொள்ள வேண்டாம். அழகிய வேலைப்பாடுகள் கொண்ட காதல் கரண்டி அது. தானே செய்த இந்தக் கரண்டியை தான் விரும்பும் பெண்ணிடம் கொடுக்க வேண்டும். இப்படிக் கொடுத்தால் அந்தப் பெண்ணைத் தனக்குப் பிடித்திருக்கிறது; அவளைக் காதலிக்க விரும்புகிறேன் என்று அர்த்தம். இந்த வழக்கம் வேல்ஸில் இப்போது நடைமுறையில் இல்லை. ஆனால், அந்தக் காதல் கரண்டி இப்போதும் அலங்காரப் பொருளாக நடைமுறையில் இருக்கிறது.