ஆன்லைன் உலகில் ஏற்கெனவே நிறைய மெசேஜ் செயலிகள் உலவிக்கொண்டிருக்கும் நிலையில், 2020-ம் ஆண்டின் இறுதியில் ஒரு புதிய மெசேஜ் செயலி அறிமுகமாகியிருக்கிறது. ஹாங்க் (Honk) என்கிற இந்தப் புதிய செயலியில் இளைஞர்களை ஈர்க்கும் வகையில் பல புதுமையான அரட்டை அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.
நம் எல்லோருடைய மொபைலிலும் அவசியமான செயலிகள் இருக்கின்றனவோ இல்லையோ, வாட்ஸ்அப் கண்டிப்பாக இருக்கும். அது போன்ற ஒரு செயலிதான் ஹாங்க். ஆனால், வாட்ஸ்அப்பைவிட இதிலுள்ள அம்சங்கள் ஈர்க்கும் வகையில் அமைந்துள்ளன. ஹாங்க் செயலியில் உள்ள குறிப்பிட்ட அம்சம் என்னவென்றால், இதில் தகவல்களை அனுப்புவதற்கான ‘சென்ட்’ பட்டனே கிடையாது. வாட்ஸ்அப்பில் இருப்பதுபோல் தகவல்களின் வரலாறும் இருக்காது. இந்தச் செயலியில் தகவல்களைப் பகிர்ந்து, அவை படிக்கப்பட்டவுனே மாயமாக மறைந்துவிடும்.
தகவல்கள் மறைந்தால், அரட்டையை எப்படித் தொடர முடியும் என்கிற சந்தேகம் எழலாம். ஆனால், இந்தச் செயலியில், ‘லைவ் டைப்பிங்’ வசதி உள்ளது. அதாவது, ஒருவர் தகவல்களை டைப் செய்யும்போதே மறுமுனையில் உள்ளவர்களால், அதை உடனடியாகப் படிக்க முடியும். டைப் செய்யும்போதே தகவல்களைப் படிக்க முடிவதால், அரட்டையில் தடை ஏற்படுவதற்கான வாய்ப்பில்லாமல் போகிறது. ஏற்கெனவே படிக்கப்பட்ட தகவல்கள் மட்டும் தானாக மறைந்துபோகின்றன. ஆனால், இதில் வளவளவென தகவல்களை டைப் செய்ய முடியாது. அதிகபட்சமாக 160 வார்த்தைகளைத்தான் டைப் செய்ய முடியும்.
ஏற்கெனவே புழக்கத்தில் இருந்த ஐ.ஆர்.சி., இன்ஸ்டெண்ட் மெசேஜ் பாணியில் இந்தச் செயலி வடிவமைக்கப்பட்டு, நவீன மெசேஜ் செயலியாக வெளிவந்துள்ளது ஹாங்க். நண்பர்கள் அரட்டையில் இல்லாதபோது, தகவல்களை அனுப்பும் வசதியும் இதில் உள்ளது. இமோஜிகளைப் பயன்படுத்தி தகவல்களை அனுப்பவும் செய்யலாம். மொபைலில் உள்ள படங்களை தகவல்களுடன் நண்பர்களுக்கு பகிர்ந்துகொள்ளவும் முடியும். தற்போது ஐபோனில் மட்டுமே இந்தச் செயலி அறிமுகமாகியுள்ளது. அதிகமானவர்கள் பயன்படுத்தும் ஆண்ட்ராய்டு வடிவம் விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.