இளமை புதுமை

செல்ஃபி எடுக்க ஓர் மியூசியம்!

செய்திப்பிரிவு

அருங்காட்சியகங்கள் தெரியும். தந்திரக் கலை அருங்காட்சியகங்களைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? சென்னையிலேயே அப்படி ஓர் அருங்காட்சியகம் உள்ளது. அதுதான் ‘கிளிக் ஆர்ட் அருங்காட்சியகம்’. இது 3டி தந்திரக்கலை அருங்காட்சியகம். அதென்ன தந்திரக் கலை?

தந்திரக் கலைக்கு இரண்டாயிரம் ஆண்டு வரலாறு உண்டு. மறுமலர்ச்சிக் காலத்தில் தோன்றிய இந்தக் கலையை பிரஞ்சு மொழியில் ‘தோம்பே லோயில்’ (‘Tompe-l’oeil’) என்றழைக்கிறார்கள். ‘கண் கட்டுவித்தை’யைத்தான் அப்படி அழைக்கிறார்கள். இரு பரிமாணத்தில் வரையப்பட்டிருக்கும் ஓர் ஓவியத்தை முப்பரிமாண ஓவியமாக மாற்றிக்காட்டும் மாய வித்தைதான் இந்தத் தந்திரக்கலை. கிரேக்க, ரோமானிய காலத்தில் உருவான இந்தத் தந்திரக்கலை, படிப்படியாக ஐரோப்பாவிலும் வளர்ந்தது.

உலகம் முழுவதும் பல நாடுகளில் இந்தத் தந்திரக்கலை அருங்காட்சியகங்கள் உள்ளன. ஹாங்காங், சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளின் நான்கு தந்திரக்கலை அருங்காட்சியகங்களை அடிப்படையாகக்கொண்டு சென்னையில் ‘கிளிக்ஆர்ட்’ அருங்காட்சியகத்தை உருவாக்கியவர் ஓவியர் ஸ்ரீதர்.

சென்னை ஈ.சி.ஆர். சாலை ஈஞ்சம்பாக்கத்தில் அமைந்துள்ள இந்த அருங்காட்சியகத்தில் விதம்விதமான தந்திரக்கலை ஓவியங்கள் இடம்பெற்றுள்ளன. இந்த ஓவியங்களில் பெரும்பாலானவை நகைச்சுவை உணர்வுடன் படைக்கப்பட்டவையே. செல்ஃபி எடுக்கும் சிம்பன்சி, வெனிஸ் படகுப் பயணம், புருஸ்லீயிடம் அடி வாங்குவது, ஆதாமிடம் ஆப்பிள் வாங்குவது, ஆஸ்கர் விருது பொம்மையிடமே ஆஸ்கர் விருது வாங்குவது, பொம்மலாட்டம் ஆடுவது எனப் பல சுவாரசியமான ஓவியங்கள் இந்த அருங்காட்சியகத்தில் இடம்பெற்றுள்ளன.

இந்த அருங்காட்சியகத்துக்குச் சென்றால், விதவிதமான 3டி தந்திரகலை ஓவியங்களுடன் அழகான செல்ஃபி எடுத்துக்கொண்டு திரும்பலாம். இந்த ஓவியங்களுடன் படம் எடுத்துக்கொள்பவர் ஓவியங்களின் ஒரு பகுதியாக மாறிவிடும் மாயம் நடப்பதுதான்

இதில் சிறப்பு. இந்த அருங்காட்சியகத்துக்கு நுழைவு கட்டணம் உண்டு.

SCROLL FOR NEXT