ஐ.டி. நிறுவனத்தில் காலடி எடுத்து வைக்கத் துடிக்கும் ஒவ்வொரு இளைஞரும் அதற்கான படிப்புகளைப் படித்து, தேவைப்படும் தகுதிகளை வளர்த்துக்கொண்டு, நிறுவனம் நடத்தும் தேர்வுகளில் வெற்றி பெற்று, பின்னர் புராஜெக்ட் விஷயங்கள் தொடர்பான பயிற்சிகளைப் பெற்று என இவ்வளவு கட்டங்களையும் தாண்டி பதவி உயர்வு என்று வரும்போது அங்கேயும் வைக்கப்படுகிறது ஒரு ‘செக்!'
இப்போது பதவி உயர்வு உள்ளிட்ட விஷயங்களுக்கும் தனியாகப் பயிற்சிகள் மேற்கொண்டு சில தேர்வுகளில் தேர்ச்சி பெற வேண்டும் என்ற புதிய விதி கட்டாயமாக்கப்பட்டுள்ளதுதான் அந்த ‘செக்'.
“இந்தக் கட்டாயப் பயிற்சிகளால் வேலைத் திறன் மேம்படுவதில்லை” என்கிறார் ஜெயப்பிரியா என்ற ஐ.டி. ஊழியர். அவர் மேலும் கூறும்போது, “எங்கள் நிறுவனத்தில் சி, ஜாவா உள்ளிட்ட பல பயிற்சிகளை முடித்திருந்தால்தான் பணியில் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள். முதல் தடவை ஆன்லைனில் தேர்வு எழுதும் போது தோல்வியுற்றாலும், சரியான பதில்களைக் குறித்து வைத்து அடுத்த முறை தேர்ச்சி பெற்றுவிடுவோம். தற்போது, எங்கள் துறை சார்ந்த தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றால்தான் பதவி உயர்வுக்கு தகுதியானவர்கள் என்று கூறுகின்றனர். இதன் மூலம் பணி அனுபவத்துக்கு எந்த மதிப்பும் இல்லை என்றாகிறது” என்று தெரிவித்தார்.
சென்னை போரூரில் செயல்படும் ஐ.டி. நிறுவன ஊழியர் கண்ணன் கூறும்போது, “எங்கள் நிறுவனத்தில் பதவி உயர்வுக்கு இ-லேர்னிங் பயிற்சிகள் கட்டாயம். இவற்றுக்காகத் தனியாக நேரம் அளிக்கப்பட மாட்டாது. மேலும் இந்தப் பயிற்சிகள் எங்களின் அன்றாடப் பணிகளை வேகமாக முடிப்பதற்கு உதவியாக இல்லை. ஆனால் பதவி உயர்வுக்கு அவசியம் என்கிறார்கள்.
ஒரு முறை பெண் ஊழியர் ஒருவருக்குப் பதவி உயர்வு வழங்க முடிவு செய்துவிட்ட நிர்வாகம் அவரை தேர்வு எழுதச் சொன்னது. ஆனால் அவர் இரண்டு முறை முயற்சி செய்து, இரண்டிலும் தோல்வியுற்றார். பின்னர் தேர்ச்சி பெற்ற ஒருவரின் உதவியுடன் நிர்வாகமே அந்தப் பெண்ணுக்குத் தேர்வெழுத உதவிசெய்து பதவி உயர்வு அளித்தது. இந்தத் தேர்வுகள் வளர்ச்சிக்குத் தடையாகத்தான் உள்ளன” என்கிறார்.
தேர்வுகள் கட்டாயமாக்கப்படுவதன் பின்னணி, பதவி உயர்வை தாமதப்படுத்துவதுதான் என்கிறார் ஐ.டி. பணியாளர் தினேஷ். அவர் கூறும்போது, “எங்கள் நிறுவனத்தில் பதவி உயர்வுக்கான அனுபவம் 18 மாதங்கள் என்று இருந்தது. அந்த நிலை மாறி தற்போது மூன்று வருடங்கள் வரை பதவி உயர்வு கிடையாது என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 3 வருடம் உழைத்தாலும் இ-லேர்னிங் பயிற்சிகள் கட்டாயமாக்கப் பட்டுள்ளன” என்றார்.
அறிவுசார் பணியாளர்கள் கூட்டமைப்பைச் சேர்ந்த அருண் கூறும்போது, “ஐடி ஊழியர்களுக்கு வழங்கப்படும் பயிற்சிகளை, நிறுவனம் சார்ந்தவை, புராஜெக்ட் சார்ந்த பயிற்சிகள், துறை சார்ந்த பயிற்சிகள் என விரிவாக வகைப்படுத்தலாம். உதாரணத்துக்கு ஒருவர் வெளிநாட்டு சுகாதாரத் திட்டம் சார்ந்த புராஜெக்டில் பணிபுரிந்துவந்தால், அது தொடர்பான பயிற்சி மேற்கொள்ள வேண்டும். இது போன்ற பயிற்சி வேறு புராஜெக்ட் சென்றாலோ, வேறு நிறுவனத்துக்கு மாறினாலோ பயன்படாது.
இந்தப் பயிற்சிகளை முடித்தவர்கள்தான் பதவி உயர்வுக்குத் தகுதியானவர்கள் என்பது தேவையற்ற கட்டுப்பாடு. ஐ.டி. நிறுவனங்கள் சில தற்போது தங்கள் ‘பெல் கர்வ்' திட்டத்தைக் கைவிட்டு வருகின்றனர்.
‘பெல் கர்வ்' முறை கடைப்பிடிக்கப்படும்போது, ஒரு குறிப்பிட்ட சதவீதத்தினர் குறைந்த அளவு திறன் கொண்டவர்களாக இருந்தால், அவர்களை நிறுவனம் பணி நீக்கம் செய்தால், அதற்கான விளக்கத்தை நிறுவனம் அந்த ஊழியர்களுக்குக் கொடுக்க வேண்டியிருந்தது. ஆனால், இப்போது அவர்கள் இ-லேர்னிங் பயிற்சிகள், தேர்வுகள் என்ற புதிய கட்டுப்பாடு விதித்து எத்தனை பேரை வேண்டுமானாலும் நியாயமான விளக்கமில்லாமல் வெளியேற்ற வாய்ப்புண்டு” என்றார்.