ஐஸ்வர்யா தர் 
இளமை புதுமை

காட்டுயிர் நாயகி!

மிது கார்த்தி

காடுகளையும் காட்டுயிர்களையும் ஒளிப்படம் எடுக்க வேண்டுமென்றால், தைரியமும் பொறுமையும் மெனக்கெடலும் தேவை. ஆண்களுக்கான துறையாக மட்டுமே பார்க்கப்பட்டுவந்த காட்டுயிர் ஒளிப்படத் துறையில் தற்போது பெண்களும் சாதிக்கத் தொடங்கிவிட்டார்கள். மும்பையைச் சேர்ந்த ஐஸ்வர்யா ஸ்ரீதர் (23), இத்துறையில் புகழ்பெறத் தொடங்கியிருக்கிறார்.

லண்டனில் உள்ள இயற்கை வரலாற்று அருங்காட்சியகம் ஒவ்வோர் ஆண்டும் சிறந்த காட்டுயிர் ஒளிப்படத்தைத் தேர்வுசெய்வது வழக்கம். இந்தச் சர்வதேசப் போட்டியில் உலகம் முழுவதும் 80-க்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து 50,000 ஒளிப்படங்கள் இந்த ஆண்டு அனுப்பப்பட்டிருந்தன. அவற்றிலிருந்து 100 படங்கள் பரிந்துரைப் பட்டியலில் இடம்பெற்றிருந்தன. இவற்றில் ஐஸ்வர்யாவின் ‘லைட்ஸ் ஆஃப் பேஷன்’ என்கிற ஒளிப்படம் விருதைத் தட்டிச்சென்றது.

காட்டில் அசைந்தாடும் மின்மினிப்பூச்சிகள் சுற்றும் மரம் ஒன்றில் இரவு வேளையில் ஒளியைப் பாய்ச்சி, ஐஸ்வர்யா எடுத்த ஒளிப்படம், அவருக்கு விருதைத் தேடி தந்தது. இந்த விருதுக்குத் தேர்வுசெய்யப்படும் முதல் இந்தியப் பெண் ஐஸ்வர்யா.

அங்கமாக மாறிய கலை

சிறுவயதிலிருந்தே ஒளிப்படக் கலையில் தீராத ஆர்வம் கொண்டிருந்த ஐஸ்வர்யா, கல்லூரியில் காட்சித் தொடர்பியல் படித்ததன் மூலம் ஒளிப்பதிவில் தனித்துவம் பெற்றார். படித்த படிப்புக்குப் பல வேலைகள் இவருக்குக் கிடைக்க, அவற்றையெல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு, கேமராவைத் தூக்கிக்கொண்டு காடுகளுக்குள் செல்லத் தொடங்கினார். இயற்கைச் சூழலையும் காட்டுயிர்களையும் தன் கேமராவுக்குள் அடக்கிவிடுவதில் வல்லவர் ஐஸ்வர்யா.

காட்டுப் பகுதியில் இருட்டு என்பது, தைரியமானவர்களைக்கூட அசைத்துப் பார்த்துவிடும். ஆனால் ஐஸ்வர்யா, எந்தப் பயமுமின்றி காடுகளில் முகாமிட்டு ஒளிப்படங்களை எடுப்பதைத் தன் வாழ்க்கையின் ஓர் அங்கமாகவே மாற்றிக்கொண்டிருக்கிறார். குறிப்பாக மேற்குத் தொடர்ச்சி மலைக்காடுகளில் பயணம் மேற்கொண்டு ஆயிரக்கணக்கான காட்டுயிர்களைப் படம்பிடித்திருக்கிறார்.

காடுகளையும் காட்டுயிர்களையும் படம்பிடிப்பதில் மட்டுமல்ல, அவற்றைப் பற்றிக் கவிதை எழுதுவதிலும் கைதேர்ந்தவர் ஐஸ்வர்யா. இதுவரை 200-க்கும் மேற்பட்ட கவிதைகளை எழுதியிருக்கிறார்.

லண்டன் விருது மட்டுமன்றி, ஏராளமான இந்திய விருதுகளையும் அங்கீகாரங்களையும் அவர் பெற்றுள்ளார். நீர்நிலைப் பாதுகாப்பு சார்ந்த முயற்சிகளுக்காக இளவரசி டயானா அறக்கட்டளை வழங்கும் டயானா விருதையும் ஐஸ்வர்யா கடந்த ஆண்டில் பெற்றார்.

ஐஸ்வர்யா ஸ்ரீதரின் ஒளிப்படங்களை ரசிக்க: https://www.aishwaryasridhar.com/home

SCROLL FOR NEXT