தீபாவளி அன்று குழந்தைகளுக்குப் புதுத் துணி, இனிப்பு, பட்டாசு மீது ஈர்ப்பு இருக்கும். பெரியவர்களுக்கோ பண்பாடு, குடும்ப மகிழ்ச்சியின் மீது ஆர்வம். இளைஞர்களோ, இரண்டிலுமே அடங்கமாட்டார்கள். அவர்களுடைய தீபாவளி உலகமே தனிதான்.
ஷாப்பிங் அலப்பறை
என்னதான் வருஷத்துல பலமுறை துணி எடுத்தாலும்கூடத் தீபாவளிக்குத் துணி எடுத்து, அதை அணிந்துப் பார்க்குற அனுபவமே தனி சுகம்தான். சிறு வயதில் தீபாவளிக்காக அப்பா, அம்மா எடுத்துத்கொடுத்த துணியை நாள் முழுவதும் அணிந்துகொண்ட இளைஞர்கள், பதின் பருவத்தைத் தொட்டுவிட்டால் போதும், தனி ஆவர்த்தனம் செய்யத் தொடங்கிவிடுவார்கள்.
எவ்வளவு முடியுமோ, அந்த அளவுக்கு அம்மா, அப்பாவிடம் பணத்தை வாங்கிக்கொண்டு ஐந்தாறு நண்பர்களுடன் சேர்ந்துகொண்டு ஷாப்பிங் செல்லவே இளைஞர்கள் விரும்புவார்கள். துணி தனக்குப் பிடிக்கிறதோ இல்லையோ, நண்பனுக்குப் பிடித்திருந்தால் போதும், கண்ணை மூடிக்கொண்டு வாங்கிவிடுவார்கள். ஒவ்வொரு நண்பனுக்கும் ஒவ்வொரு முறை என இரண்டு வாரத்துக்குள் 5 முறையாவது ஷாப்பிங் சென்று என்ஜாய் செய்வது தீபாவளிக்கு மட்டுமே சாத்தியம்.
இட்லி குருமா
சிறு வயதில் தீபாவளியன்று அதிகாலையில் எழுந்து பட்டாசு கண்ணில் விழித்தவர்கள் எல்லாம், கொஞ்சம் பெரியவர்கள் ஆனதும் தலைகீழாக மாறிவிடுகிறார்கள். தீபாவளிக்கு முதல் நாள் இரவு நண்பர்களுடன் சேர்ந்து பஜார்களைச் சுற்றிவிட்டோ, அரட்டையடித்துவிட்டோ லேட்டாகத்தான் தூங்கவே வருவார்கள். தீபாவளி அன்று அம்மா திட்டி எழுப்பும்வரை தூங்கிக்கொண்டே இருப்பார்கள். ஊரே புதுத் துணியைப் போட்டுக்கொண்டு பட்டாசு கொளுத்தும்போதுதான், நம்மாள் தலைக்கு எண்ணெய் வைத்துவிட்டு பல்லைத் துலக்கிக்கொண்டிருப்பான்.
வருஷம் முழுவதும் இட்லி குருமாவை ஒரு பிடிபிடித்திருந்தாலும், தீபாவளி அன்று மணக்க மணக்க கறி குருமா, வடை, பலகாரங்களுடன் இட்லி சாப்பிடும் சுகம் வருமா? அதை ஒரு பிடிபிடித்துவிட்டு, புதுத் துணியை அணிந்துகொண்டு நண்பர்களுடன் ஒவ்வொரு தெருவாகப் போய் ஃபிலிம் காட்டிவிட்டுவரும் அனுபவத்தைத் தீபாவளிக்கு மட்டுமே அனுபவிக்க முடியும். அத்துடன், தீபாவளி அன்று நைட் ஷோவில் புதுப்படத்தை நண்பர்களுடன் சேர்ந்து பார்த்தால்தான் தீபாவளியே முடிந்த மாதிரி இருக்கும்!