ஆன்லைனில் ‘கேம்’ செயலிகளுக்கு அடுத்தபடியாக இளைஞர்களைச் சுண்டியிழுப்பவை ‘டேட்டிங்’ செயலிகள். முன்பின் தெரியாதவர்களிடம் மணிக்கணக்கில் அரட்டை அடிக்க உதவுகின்றன இந்தச் செயலிகள். இதில் எதிர்பாலினத்தவரைக் கவரும் வகையில் புதிய டிரெண்டுகள் உருவாவது வாடிக்கை. அந்த வகையில் தற்போது டேட்டிங் செயலிகளில் பெண்களைக் கவர தாடி எனும் உத்தியை ஆண்கள் பயன்படுத்தத் தொடங்கியிருக்கிறார்கள்.
ஆண்களின் இந்த உத்தியைப் பற்றி டிண்டர் செயலி விலாவாரியாக விளக்கியுள்ளது (வேறெங்க இதையெல்லாம் விளக்குவாங்க?). தாடி வைத்துக் கவரும் உத்தியை ஆங்கிலத்தில் ‘பியர்டுபெய்ட்டிங்’ (Beard Baiting) என்கிறார்கள். ஆஸ்திரேலியாவில் தொடங்கிய இந்தப் போக்கு தற்போது உலகம் முழுவதும் இளைஞர்கள் மத்தியில் தாடியைப் போலவே வேகமாக வளர்ந்துவருகிறது.
இவ்வளவு மேட்சிங்கா?
ஆஸ்திரேலியாவில் தாடி வைத்த இளைஞர் ஒருவர் தன்னையே விதவிதமாக ஒளிப்படமெடுத்து அதை ‘டேட்டிங்’ செயலியில் பதிவேற்றியிருக்கிறார். எதிர்பாராத விதமாக அவற்றுக்கு 68.1 சதவீதப் பெண்களின் மேட்சிங்கை செயலி காட்டியுள்ளது. ஆனால், தாடி இல்லாத ஒளிப்படங்களுக்கு 31.9 சதவீதம் மேட்சிங் மட்டுமே கிடைத்தது.
அந்த இளைஞரின் ஒளிப்படங்களுக்குக் கிடைத்த வரவேற்பைப் பார்த்த மற்ற இளைஞர்களும் தாடியுடன் கூடிய ஒளிப்படங்களைப் பகிர, அது இளைஞர்கள் மத்தியில் டிரெண்ட் ஆனது. இதையடுத்து டேட்டிங் செயலியில் களமாடும் இளைஞர்கள் பலர், தங்கள் புரொபைல் படத்தைத் தாடியுடன் இருக்கும்படி மாற்றுவதில் ஆர்வம் காட்டத் தொடங்கிவிட்டார்கள். ஆஸ்திரேலியாவில் தொடங்கிய இந்த ‘பியர்டுபெய்ட்டிங்’ ஒவ்வொரு நாடாக டிரெண்டாகி, தற்போது இந்திய இளைஞர்களையும் தாடி வளர்க்கச் செய்துவிட்டது.
அப்படி என்னதான்பா காரணம்?
அதெல்லாம் சரி, தாடி வைத்த இளைஞர்களைப் பெண்களுக்குப் பிடிப்பதற்கு அப்படி என்னதான் காரணம்? தாடி வைத்திருக்கும் ஆண்களை முதிர்ச்சி அடைந்தவர்களாகவும் நேர்மையானவர்களாகவும் ஃபிட்டானவர்களாகவும் பெண்கள் பார்ப்பதே காரணம் என்று ஓர் ஆய்வு முடிவு கூறுகிறது (எந்த ஊர் ஆய்வு என்றெல்லாம் கேட்டு ஆராய்ச்சி செய்யக் கூடாது).
இது போதாதா ஆண்கள் தாடியுடன் திரிவதற்கு? கிளீன் ஷேவ் செய்துகொண்டு காட்சியளிக்கும் சாக்லெட் பையன், அமுல் பேபி பையன்களையே பெண்கள் விரும்புவார்கள் என்கிற தலைமுறை தலைமுறையாக நம்பப்பட்டுவரும் எடுத்துக்காட்டுகள் காலாவதியாகிவருகின்றன. பெண்களைக் கவர பல்வேறு விஷயங்களைச் செய்துவந்த இளைஞர்களுக்கு, தற்போது இந்தத் தாடி டிரெண்ட் புதிய பாதையைத் திறந்துவிட்டிருக்கிறது.