இளமை புதுமை

ஹாட்ரிக் ஸ்வேதா!

வா.ரவிக்குமார்

சுபி ஸ்வேதாவுக்கு இரண்டு பெருமைகள். ஒன்று, உலக அளவிலும் ஆசிய அளவிலும் நடக்கும் ஸ்கேட்டிங் போட்டிகளில் இந்தியா சார்பாகப் பங்கெடுத்துப் பல வெற்றிகளைக் குவித்துவருவது. இரண்டு, தன்னுடைய தம்பியையும் தன்னைவிட அதிவேக மாரத்தான் ஸ்கேட்டிங் நட்சத்திரமாக உருவாக்கியிருப்பது.

ஸ்பெயினின் பார்சிலோனாவில் கடந்த ஆண்டு நடைபெற்ற வேர்ல்டு ரோலர் ஸ்கேட்டிங்கில் இந்தியாவின் சார்பாகப் பங்கெடுத்தவர் சுபி ஸ்வேதா. 2018இல் நடைபெற்ற ஆசியப் போட்டியில் ஆறாம் இடத்தில் வந்தவரும்கூட. அண்மையில் விசாகப்பட்டினத்தில் நடந்த தேசிய அளவிலான போட்டியில் இரண்டு தங்கப் பதக்கங்களை சுபி ஸ்வேதா வென்றுள்ளார். 100 மீட்டர் பிரிவில் தொடர்ச்சியாக மூன்றாம் ஆண்டாகத் தங்கப் பதக்கம் வென்று சாதனையையும் படைத்துள்ளார் இந்த இளம் பெண்.

அம்மாவே ஆதாரம்

பயிற்சியாளர்கள் ராஜா, சத்யமூர்த்தி, விமல், நந்தகுமார் ஆகியோரின் வழிகாட்டுதல் இல்லையென்றால் தன்னால் இந்த அளவுக்குச் சாதித்திருக்க முடியாது என்கிறார் சுபி ஸ்வேதா. “விளையாட்டு உலகில் எனக்கு மிகப் பெரிய உத்வேகமாகத் திகழ்பவர் குத்துச்சண்டை வீரர் மேரி கோம். என் வெற்றிக்குப் பின்னணியில் என்னுடைய பயிற்சியாளர்கள் இருந்தாலும், என் வெற்றியின் ஆதார ஸ்ருதி என்னுடைய அம்மாதான். நான் பயிற்சி எடுக்கும் நாளிலிருந்து வெற்றிகளைக் குவித்துவரும் நாள்வரை எனக்கு மிகப் பெரிய உந்துசக்தியாக இருப்பவரும் அவரே” என்று நெகிழ்கிறார் சுபி ஸ்வேதா.

துவளாமல் ஹாட்ரிக்

விசாகப்பட்டினத்தில் நடந்த தேசிய ஸ்கேட்டிங் போட்டியில் மறக்க முடியாத அனுபவத்தை எதிர்கொண்டார். “பல்வேறு பிரிவுகளில் காலிறுதி, அரையிறுதிப் போட்டிகளில் வென்று இறுதிப் போட்டியில் ஸ்கேட்டிங் செய்தேன். அதிலும் நான் வெற்றிக்கோட்டைத் தொடுவதற்குச் சிறிது தொலைவு முன்பாகவே விழுந்து, மிக மோசமாகக் காயமடைந்தேன். அந்தப் போட்டியை முழுமையாக முடிக்காமலேயே வெளியேறினேன்.

அதற்கு அடுத்த நாள் நடக்கவிருந்த போட்டி எனக்கு மிகவும் முக்கியமானது. ஏற்கெனவே தொடர்ந்து இரண்டு ஆண்டுகள் 100 மீட்டர் ஸ்கேட்டிங்கில் தங்கப் பதக்கம் வென்றிருக்கிறேன். இந்த ஆண்டும் வென்றால் ஹாட்ரிக் அடித்த பெருமை கிடைக்கும் என்ற நிலை. ஆனால், அடுத்த நாள் என்னால் ஸ்கேட்டிங் ஷூஸ் போட்டுக்கொண்டு எழுந்து நிற்கக்கூட முடியவில்லை. முன்னோக்கி உந்தித் தள்ளும்போது கணுக்கால் மூட்டுகளில் கடுமையான வலி எடுத்தது.

ஆனாலும், வலியைப் பொறுத்துக்கொண்டு ஸ்கேட்டிங் செய்து வெற்றிபெற்றேன். இதை என்னுடைய வாழ்க்கையில் மறக்கவே முடியாது. இந்த வெற்றியின் மூலம் எனக்கு ‘ஸ்பீடு ஸ்கேட்டர்’ என்னும் பட்டமும் வசமானது” என்கிறார் சுபி ஸ்வேதா முகத்தில் புன்னகையை படரவிட்டபடி.

SCROLL FOR NEXT