இளமை புதுமை

உரக்கப் பேசிய படங்கள்

ஆதி

எல்லா ஒளிப்படங்களும் வெறுமனே ஒரு கிளிக்கில் எடுக்கப்படுவதில்லை என்றுதான் சொல்ல வேண்டும். சில உருவாக்கப்படுகின்றன. ஓவியரும் சிற்பியும் தன் படைப்புக்கு உருவம் கொடுப்பதைப் போல, காலத்தின் ஒரு பகுதியை அதற்குரிய கனத்துடன் நிலைநிறுத்திவிடுகிறார்கள் சிறந்த ஒளிப்படக் கலைஞர்கள். உணர்ச்சிகள் உறைந்து நிற்கும் அந்தப் படங்கள் காலாகாலத்துக்கும் ஆயிரம் சேதிகளைச் சொல்லிக்கொண்டே இருக்கின்றன.

“மிகவும் வலுவாகவும் மனத்தை உருக்கும் வகையிலும் இருக்கும் ஓர் உணர்ச்சி வெளிப்பாடு, நடந்த துயரத்தின் மொத்தக் கதையையும் சொல்வதுபோல இருந்தால், அது சிறந்த படம்” என்கிறார் புகழ்பெற்ற ஒளிப்படக் கலைஞர் ரகு ராய்.

மனிதர்களால் நிறைந்திருக்கும் இந்த உலகம் சக மனிதர்கள் மீது, குறிப்பாகக் குழந்தைகள் மீது எப்படிப்பட்ட கொடூரமான வன்முறையைச் செலுத்திவந்திருக்கிறது. அடுத்த மனிதனுக்கு நாம் எதைத் தந்துவருகிறோம் என்று இப்படங்கள் சொல்கின்றன.

ஒவ்வொரு பத்தாண்டுக்கும் இப்படியொரு படம் வந்து மனசாட்சியை உலுக்கத்தான் செய்கிறது. ஃபேஸ்புக், வாட்ஸ் அப் வருவதற்கு முன்பு எடுக்கப்பட்ட சில படங்கள் உலக வரலாற்றை அசைத்துப் பார்த்திருக்கின்றன. அப்படி வரலாற்றை அசைக்க முடியாத நிலையில் சில மனசாட்சிகளை அசைத்திருக்கின்றன.

காத்திருக்கும் மரணம்

சூடானில் ஏற்பட்ட பஞ்சம் காரணமாக ஊட்டச்சத்துக் குறைபாட்டால் நகர முடியாத நிலையில், இறப்பின் வாசலை நோக்கி நகர்ந்த குழந்தையைக் கொத்த நேரம் பார்த்துக்கொண்டிருக்கிறது ஒரு பிணந்தின்னிக் கழுகு. 1992-ல் இந்தப் படத்தை எடுத்தவர் கெவின் கார்ட்டர். பஞ்சம், பசி, பட்டினி தொடர்பாக உலகை உலுக்கிய படம் இது. புலிட்சர் பரிசு பெற்ற இவர், படத்தை எடுத்த கொஞ்ச காலத்தில் தற்கொலை செய்துகொண்டார்.

ஒமைராவின் துயரம்

கொலம்பியாவில் நெவாடோ டெல் ரூயிஸ் என்ற எரிமலை 1985-ல் வெடித்ததன் காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் 25,000-க்கும் மேற்பட்டோர் மடிந்தனர். அர்மெரோவில் தன்னுடைய வீட்டுக் கட்டிட இடிபாடுகள், சேற்றில் சிக்கிக்கொண்ட 13 வயதுச் சிறுமி ஒமைரா சான்செஸின் படம் இது. மூன்று நாள் போராட்டத்துக்குப் பிறகு தாழ்வெப்பநிலை, தசைஅழுகல் பிரச்சினைகளால் ஒமைரா இறந்துபோனாள்.

இயற்கைப் பேரழிவுக்கான நிவாரணப் பணிகளைச் செய்வதில் கொலம்பிய அரசின் செயல்பாடுகளுக்கு ஏற்பட்ட தோல்வியின் அடையாளமாக இப்படம் இருக்கிறது. இப்படத்தை எடுத்த ஃபிராங்க் ஃபூரியர், வேர்ல்ட் பிரெஸ் போட்டோ பிரீமியர் விருதைப் பெற்றார்.

அமெரிக்காவின் நிர்வாணம்

வியட்நாமில் அமெரிக்கா தொடுத்த போர் தொடர்பான கொடூரத்தை உலகுக்கு உணர்த்திய படம் இது. நேபாம் எனப்படும் எரியும் திரவக் குண்டு வீசப்பட்ட பிறகு எடுக்கப்பட்ட படம். அந்தப் போரில் அமெரிக்காவைத் தோற்கடித்த வியட்நாமிய தேசிய விடுதலை முன்னணியைக் குறிவைத்து தெற்கு வியட்நாமிய படைகள் தொடுத்த இந்தத் தாக்குதலில் தப்பி, தன் உடன் பிறந்தவர்களுடன் தலைதெறிக்க ஓடி வருபவள்.

சிறுமி கிம் புக் (9). எரிந்துகொண்டிருந்த உடைகளைக் கழற்றி வீசிவிட்டு அவள் வருகிறாள். 1972, ஜூன் 8-ம் தேதி இந்தப் படத்தை எடுத்தவர் அசோசியேடட் பிரஸ் நிறுவனத்தைச் சேர்ந்த நிக் உட் . இந்தப் படத்துக்குப் புலிட்சர் விருது கிடைத்தது. கிம் புக் தற்போது கனடாவில் வாழ்கிறார்.

போபாலின் கண்கள்

மத்தியப் பிரதேசத் தலைநகர் போபாலில், அமெரிக்காவைச் சேர்ந்த யூனியன் கார்பைடு தொழிற்சாலையில் ஏற்பட்ட விஷவாயுக் கசிவில் இறந்த அடையாளம் தெரியாத குழந்தையின் சடலம் புதைக்கப்படுகிறது. விஷ வாயுக் கசிவு நிகழ்ந்த நாள் 1984 டிசம்பர் 2-ம் தேதி இரவு. இந்த விபத்தில் பலருக்கும் கண் பறிபோனதால், உலகின் மிக மோசமான தொழிற்சாலை விபத்துகளின் அடையாளமாக இந்தப் படம் மாறியது.

15,000 பேர் பலியாயினர், 55 ஆயிரம் பேர் காயமடைந்தனர். இந்த விபத்து நிகழ்ந்து 30 ஆண்டுகள் முடிந்தும்கூடப் பாதிக்கப்பட்டவர்களுக்கு முறையான நிவாரண உதவி கிடைக்கவில்லை. இந்தப் படத்தை எடுத்தவர் புகழ்பெற்ற ஒளிப்படக் கலைஞர் ரகு ராய். புகழ்பெற்ற மற்றொரு ஒளிப்படக் கலைஞர் பாப்லோ பர்தலோமியுவும், இதே சம்பவத்தைப் படம் எடுத்திருக்கிறார்.

SCROLL FOR NEXT