என் வயது 18. உறவினர் ஒருவர் மூலமாக இரண்டு வருடங்களுக்கு முன்பு எனக்கு ஒருவர் அறிமுகமானார். நாங்கள் ஃபேஸ்புக் மூலமாகப் பேச ஆரம்பித்தோம். ஒரு வாரத்துக்குப் பிறகு அவர் என்னுடைய ஒளிப்படத்தைக் கேட்டார். நானும் அனுப்பி வைத்தேன். அதைப் பார்த்தவுடன் அவருக்கு என் மேல் மிகவும் ஈர்ப்பு ஏற்பட்டதாகக் கூறினார். அதற்குப் பிறகு ஒருவாரம் கழித்து என்னைக் காதலிப்பதாகச் சொன்னார். நான் மறுத்தேன். எனினும், நாட்கள் செல்லச் செல்ல எனக்கும் அவரைப் பிடித்துப்போனது. இத்தனைக்கும் அவருக்கு ஏற்கெனவே ஒரு காதல் தோல்வி அனுபவம் இருந்திருந்தது. அவரைவிட ஐந்து வயது அதிகமான பெண்ணைக் காதலித்திருந்தார்.
எங்களின் முக்கியப் பிரச்சினை சாதிதான். இதனால் மோதல் ஏற்படும் என்று கூறியும் அவர் அதைப் பற்றிக் கவலைப்படவில்லை. என் மீது பைத்தியமாக இருப்பதாகச் சொன்னார். அவர் தனது காதலைச் சொல்லி ஒரு மாதம் கழித்து நான் சம்மதம் தெரிவித்தேன். தினமும் போன் கால்கள், குறுஞ் செய்திகள் என வாழ்க்கை நன்றாகவே சென்றது. 4 மாதங்களுக்குப் பிறகு அவரே காதலை முறித்துவிட்டுச் சென்றுவிட்டார். நான் மிகவும் வருத்தமடைந்தேன். அதன் பிறகு ஒரு வருடம் என்னால் எதிலும் கவனம் செலுத்த முடியவில்லை. எப்படியோ நான் ப்ளஸ் டூ தேர்வில் தேர்ச்சி பெற்றேன். எனக்கு மருத்துவம் படிக்க வாய்ப்பு கிடைத்தது.
ஒரு வருடம் கழித்து மீண்டும் அவர் என்னுடன் பேச ஆரம்பித்தார். கடந்த 8 மாதங்களாக நாங்கள் இருவரும் பழகி வந்தோம். எப்போதும் தனது முன்னாள் காதலியைப் பற்றியே அவர் என்னிடம் பேசிவந்தார். இது எனக்குக் கஷ்டமாக இருந்தது. அதை நான் விரும்பவில்லை என்றாலும் பொறுத்துக்கொண்டேன்.
ஆனால் இப்போது வேறு ஒரு பெண்ணைத் திருமணம் செய்துகொள்ளத் தயாராகிவருகிறார். இப்படி அடிக்கடி குணம் மாறும் அவரை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. அவர் என்னை விட்டு ஏன் போனார், ஏன் திரும்பி வந்தார் என்பது பற்றி எனக்கு எதுவும் தெரியாது. ஆனால் அவர் இல்லை என்றால் ஏதோ ஒரு வெறுமை சூழ்வதுபோல் மனம் தவிக்கிறது. அவருடைய நினைவிலிருந்து நான் மீள்வதற்கு என்ன வழி?
தெருவில் வந்துபோகும் பேருந்து போல் வாழ்வில் வந்துபோகும் நபருக்குக் காதலர் என்று பெயரா? இதைக் காதல் என்று எப்படி நம்புகிறீர்கள்? ஏன் இப்படி நடந்துகொள்கிறார் என்கிற ஆய்வில் இறங்கி நேரத்தை வீணடிக்க வேண்டாம். பதின்ம வயதில் காதல் வயப்பட்டதன் விளைவுகள் என்ன? நான்கு மாதங்களில் முறிந்த காதலை எண்ணிக் கண்ணீர், படிப்பில் கவனம் செலுத்த முடியாமல், தட்டுத் தடுமாறி ப்ளஸ் டூவில் தேர்ச்சி, உயிர்த்தெழுந்த காதலால் அனுபவித்த துன்புறுத்தல், தொடர்ந்துவரும் மன உளைச்சல்கள்- இவைதான் மிஞ்சின! அவர் நினைவிலிருந்து மீள வேண்டுமா? உங்கள் எண்ணச் சங்கிலியைச் சற்றுக் கவனிப்போம்.
“அவர் இல்லையே, வெறுமையாக இருக்கிறதே, என் காதல் உண்மையானது என்பதை ஏன் அவர் புரிந்துகொள்ளவில்லை? என் தவிப்பு அவருக்குத் தெரிகிறதா? அவர் இல்லையேல் எனக்கு வாழ்வே இல்லை. எனக்கு எதுவுமே பிடிக்கவில்லை.” இப்படியே தொடர்ந்து சென்றால் அது உங்களைக் கீழே இறக்கிவிடும். சற்றே அந்தச் சங்கிலியைத் திசை திருப்புங்கள்: “என்னை அவர் விட்டுச் சென்றுவிட்டார் என்று வருத்தமாக இருக்கிறது; ஆனால் பச்சோந்தியாக நிறம் மாறியவரது காதல் உண்மையா என்ற சந்தேகம் வருகிறது.
அவரை நம்பி என் வாழ்க்கையை ஒப்படைக்க இருந்தேனே. நம்பத் தகுந்தவரே இல்லை அவர். இனி அவரைப் பற்றி நினைக்கக் கூடாது. நினைத்தால் கோபமும், அழுகையும் என்னை முடக்கிவிடும். இனிமேல் மனதுக்கினியவற்றை நினைப்பேன்” என்று நினைக்க ஆரம்பியுங்கள். காதல் பயணம் கப்பல் பயணம் மாதிரி. பாதியில், நடுக்கடலில் பயணத்தை முடிக்க எண்ணி குதிக்க முடியாது. காதலர் தள்ளிவிட்டாலும் அபாயம்தான். யோசித்து, அலசி ஆராய்ந்து தேர்ந்தெடுப்பதென்பது, 18 வயதுக்கு மீறிய விஷயம்.
என் வயது 22. நான் 11-ம் வகுப்பு படித்தபோது என் தந்தை இறந்துவிட்டார். என்னைச் சிறுவயதிலிருந்தே வீட்டை விட்டு வெளியே விடாமல் வளர்த்துவிட்டனர். விவரம் அறிந்த பின்னரும் வீட்டுக்குள்ளே இருக்கவே பிடித்தது. எப்போதிருந்து நான் பெண்களைத் தவறான கண்ணோட்டத்தில் பார்க்க ஆரம்பித்தேன் எனத் தெரியவில்லை. கல்லூரியில் சேர்ந்த இரண்டாம் ஆண்டு நண்பர்கள் வழியாக மது, சிகரெட் போன்ற பழக்கங்கள் அறிமுகமாயின. கூடவே காம எண்னங்களும் அதிகரித்தன.
ஆபாசப் படங்கள், கதைகளில் ஈர்ப்பு அதிகமானது. இப்போது எம்.பில். படித்துக்கொண்டே மெடிக்கல் ரெப் ஆகப் பணியாற்றி வருகிறேன். எனது வருவாயை நம்பியே எனது குடும்பம் உள்ளது. அக்கா கல்யாணத்துக்கு வாங்கிய கடன் தீர்க்கப்படாமலும், அடகுவைக்கப்பட்ட வீட்டுப் பத்திரம் மீட்கப்படாமலும் உள்ளன. இவ்வளவுக்கு மத்தியிலும் இப்போதும் காமரசம் ததும்பும் கதைகளைப் படிக்கவும், பாலியல்ரீதியான படங்களைப் பார்க்கவும் மனம் துடிக்கிறது. மனத்தை வேறு வழிகளில் திருப்ப முயன்றாலும் பெண்களைப் பார்த்த மாத்திரத்தில் ஏதோ ஒரு தீராத தாகம் மனத்தில் எழுகிறது. எந்தப் பெண்ணுடனும் நட்பாகப் பழக முடியவில்லை. அதீத காமம் காரணமான நடத்தையால் பல இடங்களில் அவமானப்பட்டிருக்கிறேன்.
குடும்ப நிலைமை புரிகிறது, பாலியல் உந்துதலால், செய்யும் தவறான செயலால் உடம்பு பாதிக்கப்படுகிறதே என்ற கவலையும் உள்ளது. ஆனாலும் தவறான செயலில் தொடர்ந்து ஈடுபட்டுவருகிறேன். வேலை செய்யவோ, பணம் சம்பாதிக்கவோ மனம் விரும்பவில்லை. சோம்பலாக வீட்டில் படுத்திருந்து வீணான எண்ணங்களில் மனம் சுகம் காண்கிறது. அதே நேரத்தில் இதிலிருந்து விடுபட வேண்டும் என்ற எண்ணமும் இருக்கிறது. யாரிடம் ஆலோசனை கேட்க என்பதே புரியவில்லை. என்ன செய்வதென்று தெரியாமல், வழிகாட்ட யாருமில்லாமல் இருளில் தவிக்கும் எனக்கு நீங்கள்தான் ஆலோசனை தர வேண்டும்.
22 வயதில் பல ஆண்களுக்கும் ஏற்படும் அனுபவங்கள்தான் நீங்கள் கூறியவையெல்லாம். அவை வாழ்வில் பாதகங்களை விளைவிக்காதவரை கவலைப்படத் தேவையில்லை. ஆனால் எந்தப் பெண்ணுடனும் நட்பாகப் பழக முடியாமல் இருப்பது, நாலுபேர் நடுவில் வம்பில் மாட்டிக்கொள்வது, முன்னேற ஒரு உந்துதல் இல்லாமல் வாழ்வது எல்லாமே சரியில்லை!
காம இச்சைக்கு உரிய வழியில் வடிகால் கிடைக்காத வயதில், தகாத வழியை மனம் தேடலாம். தவறு என்று சமுதாயமும் அறநெறிகளும் சுட்டிக்காட்டும் விஷயங்களை, உங்கள் மனசாட்சியும் ஏற்றுக்கொள்வதால், நீங்கள் மாற்றிக்கொள்ள நினைக்கிறீர்கள்; ஆனால் உங்களால் முடியவில்லையாதலால் உதவியை நாடியிருக்கிறீர்கள். தீர்வு உங்களிடம் தான் இருக்கிறது. கண நேர உந்துவிசையில் நடக்கும் நிகழ்வுகள் அவை. அந்தக் கண நேரத்தைக் கடந்து வந்துவிட்டால் வெற்றிதான்! தவறாக நடந்துகொண்டதால் அவமானப்பட்ட காட்சிகளைத் தெளிவாக மனதில் பதிவு செய்துகொண்டு, தினமும் நினைவுகூருங்கள்.
அப்போதுதான் மீண்டும் அந்த ஆரோக்கியமற்ற எண்ணம் வராது. ஒவ்வொரு நாளையும் சில நல்ல கருத்துகளைப் படித்துவிட்டு ஆரம்பியுங்கள். நல்ல சிந்தனை உள்ளவர்களுடன் நேரத்தைக் கழியுங்கள். தனிமையைத் தவிர்த்துவிடுங்கள். ஒரு தாத்தா பேரனுக்குச் சொன்னாராம்: “உன் மனதில் இரு ஓநாய்களுக்கிடையே ஓயாது சண்டை நடந்துகொண்டே இருக்கிறது.
ஒரு ஓநாய் தீயது-கோபம், பொறாமை, கர்வம், பேராசை, பொய் ஆகியவற்றைக் கொண்டது. மற்றொன்று நல்லது-அன்பு, அமைதி, நம்பிக்கை, பணிவு, இன்பம், உண்மை நிறைந்தது.” ஆர்வத்தை அடக்க முடியாத பேரன் கேட்டானாம், “தாத்தா, சண்டையில் எது வெல்லும்?” தாத்தா புன்முறுவலுடன் அமைதியாகத் தொடர்ந்தாராம், “எதற்கு நீ தீனி போடுகிறாயோ, அது.” நண்பரே, நீங்கள் எதற்குத் தீனி போடுகிறீர்கள் என்று தெரிகிறதா?
உளவியல் ஆலோசகர் பிருந்தா ஜெயராமனுடன் உரையாடலாம். உங்கள் கேள்விகள், எண்ணங்கள், குழப்பங்கள், உறவுச் சிக்கல்களைப் பகிர்ந்துகொள்ளுங்கள்.
முகவரி: இளமை புதுமை, தி இந்து, கஸ்தூரி மையம்,
124, வாலாஜா சாலை, சென்னை-600 002.
மின்னஞ்சல்: ilamaiputhumai@thehindutamil.co.in