ஐரோப்பாவில் உள்ள எம்டிவி நெட்வொர்க் ஆண்டுதோறும் யூரோப் மியூசிக் அவார்டுகளை அளித்துவருகிறது. இந்த ஆண்டுக்கான விருதுக்காக இந்தியாவிலிருந்து பிரபல நடிகை பிரியங்கா சோப்ரா பரிந்துரைக்கப்பட்டிருக்கிறார். உலக அளவிலான நடிப்புக்கான விருதின் உப விருதான இந்திய அளவிலான நடிப்பு என்னும் பிரிவின் கீழ் இவர் பரிந்துரைக்கப்பட்டிருக்கிறார்.
இவருடன் பாடகியும் நடிகையுமான மோனிகா டோக்ராவும் பரிந்துரைக்கப்பட்டிருக்கிறார். இவர்கள் இருவரையும் விஎச்1 தொலைக்காட்சி அலைவரிசை பரிந்துரைத்திருக்கிறது. இவர்கள் இருவர் தவிர்த்து இந்தஸ் கிரீட், யுவர் சின், த ஸ்கா வெஞ்சர்ஸ் ஆகியோரும் இவ்விருதுக்காகப் பரிந்துரைக்கப்பட்டிருக்கிறார்கள்.
இந்திய அளவிலான சிறந்த நடிப்புக்கான விருது என்னும் உப விருதில் வெல்பவரே உலகத்தின் பிற நாடுகளிலிருந்து வென்று வருபவருடன் போட்டிபோட முடியும். இறுதியில் உலக அளவில் சிறந்த நடிப்புக்காக ஆறு பேருக்கு விருது வழங்கப்படும். வரும் அக்டோபர் 25 அன்று விஎச்1 தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் யூரோப் மியூசிக் அவார்ட் ஷோவில் இறுதியாக வென்ற ஆறு பேரின் பெயர்கள் அறிவிக்கப்படும்.
2012-ல் வெளியான ‘இன் மை சிட்டி’ என்னும் தனி ஆல்பம் வழியாக பிரியங்கா சோப்ரா பாடலுக்கான உலக சந்தைக்குள் நுழைந்தார். மோனிகா டோக்ரா இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்ட அமெரிக்கவாழ் பாடகி. பிரியங்கா சோப்ரா விருதை வெல்வாரா என்பதை அறிந்துகொள்ள இன்னும் ஒரு மாதம் பொறுமைகாக்க வேண்டும்.