இளமை புதுமை

மிதக்கும் திரையரங்கம்!

மிது கார்த்தி

கரோனோ எல்லாவற்றையும் முடக்கிப் போட்டுவிட்டது. இந்தியாவில் பல தளர்வுகள் மூலம் மக்களின் இயல்பு வாழ்க்கை சிறிதுசிறிதாக திரும்பிக்கொண்டிருக்கிறது. ஆனாலும், மூடப்பட்ட திரையரங்குகள் இன்னும் மூடியே இருக்கின்றன. சமூக இடைவெளியை முழுமையாகக் கடைப்பிடிக்க வேண்டிய சூழல் திரையரங்குகளில் உள்ளது என்பதால், எல்லா நாடுகளிலும் திரையரங்குகள் செயல்படுவது சவால்தான். இந்தப் போக்குக்கு மாற்று ஒன்றைக் கண்டுபிடித்துள்ளது இஸ்ரேல் அரசு.

உலகின் பல நகரங்களும் இந்தக் கரோனா காலத்தில் ‘ட்ரைவ் இன் தியேட்டர்’ என்றழைக்கப்படும் திறந்தவெளித் திரையரங்குகளுக்கு மாறிவருகின்றன. அதே உத்தியைத்தான் இஸ்ரேல் கொஞ்சம் மாற்றி யோசித்திருக்கிறது. இஸ்ரேலின் இரண்டாம் பெரிய நகரமான டெல்-அவிவ்வில் சிறியதும் பெரியதுமான ஏரிகள் அதிகம். பொழுதுபோக்குவதற்காக மக்கள் ஏரிகளுக்கு வருவது வாடிக்கை. மக்கள் கூடுமிடங்களில் ஒன்றான ஏரிகளைத் திரையரங்குகளாக மாற்றினால் என்ன என்று டெல்-அவிவ் நகர நிர்வாகத்துக்கு யோசனை உதித்திருக்கிறது. தாமதிக்காமல் உடனே அதைச் செயல்படுத்திவிட்டார்கள். திரையரங்குகள் வருமானம் ஈட்டும்வண்ணம் இந்த யோசனையைச் செயல்படுத்தியிருக்கிறார்கள்.

முதல் கட்டமாக டெல்-அவிவ் நகரில் உள்ள யார்கோன் என்ற பூங்காவில் உள்ள ஏரியில் இந்த மிதக்கும் திரையரங்கை அமைத்திருக்கிறார்கள். இதற்காக அந்த ஏரியின் ஒரு பகுதியில் பெரிய எலெக்ட்ரானிக் திரையை நிறுவி, அதில் திரைப்படத்தைத் திரையிடுகிறார்கள். மக்கள் சினிமா பார்க்க வசதியாக 70 சிறு படகுகளைத் துடுப்புகளுடன் ஏரியில் விட்டிருக்கிறார்கள். இந்தப் படகில் பயணித்தபடி சினிமாவைக் கண்டுகளிக்கலாம். ஓரிடத்தில் நிறுத்தி சினிமாவைப் பார்க்க வேண்டுமென்றால், இரண்டு மீட்டர் இடைவெளி விட்டுப் படகை நிறுத்திப் பார்க்கலாம்.

இந்த மிதக்கும் திரையரங்கில் வார இறுதி நாள்கள் அல்லது மாதத்தின் கடைசி வாரத்தில் சினிமாக்கள் திரையிடப்படுகின்றன. யார்கோன் பூங்காவைத் தொடர்ந்து இஸ்ரேலின் மற்ற ஏரிகளிலும் மிதக்கும் திரையரங்குகளைத் திறக்கும் திட்டம் இஸ்ரேலியர்களுக்கு இருக்கிறதாம்.

SCROLL FOR NEXT