இளமை புதுமை

உறவுகள்: காதலில் யார் சிறந்த தியாகி?

பிருந்தா ஜெயராமன்

என் வயது 25. தற்போது கல்லூரி ஒன்றில் படித்துவருகிறேன். எனக்கு ஓவியம், இசை, நடனம் உள்ளிட்ட பல துறைகளில் ஆர்வம் உள்ளது. இதனால் எனக்குப் பிடித்த அனைத்துத் துறைகளிலும் கவனம் செலுத்த விரும்புகிறேன். ஆனால் என்னிடம் ஒரு பிரச்சினை இருக்கிறது. எந்தத் துறையாக இருந்தாலும் தொடக்கத்தில் சில நாட்களுக்கு அந்தத் துறைமீது எனக்கிருக்கும் ஆர்வம் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்துவிடுகிறது. பிறகு அந்தத் துறையின் மீது இருக்கும் நாட்டம் முற்றிலும் இல்லாமல் போய்விடுகிறது. பிறகு வேறு சில துறைகளைத் தேர்வுசெய்து அதில் கவனம் செலுத்த ஆரம்பித்துவிடுவேன். பின்னர் பழைய குருடி கதவைத் திறடி என்னும் கதை தான். அதிலும் ஆர்வமற்றுப்போகும். இப்படியே நான் பல துறைகளிலும் என் கவனத்தைச் செலுத்தி, பிறகு அதில் இருந்து வெளியேறிவிட்டேன்.

இதனால் எந்தத் துறை எனக்கு ஏற்ற துறை என்று தெரியாமல் தவிக்கிறேன். இதன் காரணமாக ஒரு பெண்ணான எனக்கு எதிர்காலத்தைப் பற்றிப் பயமாகவும், கவலையாகவும் உள்ளது. மனம் ஒரு துறையில் நிலையாக நில்லாமல் அலைந்துகொண்டேயிருப்பது சரிதானா இல்லையெனில் இது எதுவும் பிரச்சினையா எனத் தெரியாமல் குழம்பிப்போயிருக்கிறேன். மனம் அலைபாயும் இந்த நிலைமைக்கு என்ன காரணம் இருக்க முடியும்? எனக்கேற்ற துறையை எப்படித் தேர்ந்தெடுப்பது? இந்த அலைபாயும் தன்மையிலிருந்து நான் வெளியேற என்ன செய்ய வேண்டும்?

கல்லூரியில் உங்களுக்குப் பிடித்த துறையில் படிக்கிறீர்கள் என்று நம்புகிறேன். அலைபாயும் தன்மை கல்வி, மற்றும் புறப் பாடத் துறைகளில் (Extra-curricular activities) மட்டும்தானா? உறவுகளைப் பேணுவதில் அலைபாயும் குணம் இருந்தால், தொடர்ந்து எந்த உறவும் நிலைக்காது. உடனடியாக ஒரு உளவியல் நிபுணரைச் சந்தித்து அவர் உதவியை நாடுங்கள்.

புறப் பாடத் துறைகளில் எதையும் தொடர்ந்து செய்ய இயலாமைக்குக் காரணம், ஊக்கம் குறைவதுதான்! ஊக்கம் ஏன் குறைகிறது? எடுத்த எடுப்பிலேயே கடைசிப் படியை அடைய நினைக்கிறீர்கள். அது எப்படி சாத்தியம்?

ஒரு குழந்தை தவழ்ந்து, நின்று, நடந்த பின்தான் ஓட முடியும்! அதுபோல் பல படிகள் ஏறினால்தான் உச்சத்தை அடைய முடியும்! வெகு தொலைவில் உள்ள இலக்கைப் பார்க்காதீர்கள். அதை அடைய உதவும் முந்தைய இலக்கைக் குறிவைத்து முயலுங்கள். பெரிய பாடகி ஆக வேண்டும் என்று நினைத்தால், முதல் படி ஒரே சுரத்தில் பயிற்சி, இரண்டாவது சுரக்கோர்வைகளைப் பாடுவது, மூன்றாவது எளிய பாடல்கள், நான்காவது கீர்த்தனைகள், ஐந்தாவது ராகம், தாளம் என்று எளியதிலிருந்து கடினமானதுவரை தேர்ச்சி பெற்றால்தான், கடைசி இலக்கான பாடகி என்ற லட்சியத்தை அடைய முடியும்.

உங்கள் ஊக்கம் குறையாமலிருக்க, கடைசி இலக்கை ஆழமாகக் கற்பனையில் உருவகித்துக்கொள்வது உதவும். ஆனால் செயலில் உங்கள் நோக்கு முதல் படியில் உடனடியாக அடைய வேண்டிய இலக்கில், இருக்க வேண்டும். முதல் குறிக்கோளை விரைவில் அடைந்துவிடுவதால், ஜெயித்துவிட்ட திருப்தி கிடைக்கும். அதன் பின் அடுத்த இலக்கில் கவனம் செலுத்தலாம். இப்படி ஒவ்வொரு படியாக ஏறுவது மலைத்துப்போய் நிற்பதைத் தவிர்க்கும்!! எந்தத் துறை உங்களுக்கு உகந்தது என்று அறிய ஒரு தொழில் வழிகாட்டியிடம் (Career Guidance Counsellor) கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.

என் வயது 24. நான் வேலை செய்த நிறுவனத்தில் ஒருவனுடன் எனக்குக் காதல் ஏற்பட்டது. ஒரு நாள் நான் என் காதலைத் தெரிவித்தேன். அவன் என் வயதையும் அவனது குடும்பச் சூழலையும் இருவருடைய மன வேறுபாடுகளையும் தெளிவாக விளக்கினான். இப்போது அவனால் எந்த ஒரு முடிவும் எடுக்க முடியாது என்பதையும் தனக்கு இன்னும் தெளிவு வேண்டும் என்பதையும் எனக்குப் புரியவைத்தான்.

அவனுடைய இந்த அணுகுமுறை எனக்கு அவர் மேல் இருந்த மரியாதையையும் பாசத்தையும் அதிகமாக்கியது. எங்கள் உறவு தொடர்ந்தது. என் நண்பர்கள் என்னிடம் எந்தப் பதிலும் சொல்லாத ஒருவரிடம் தொடர்ந்து பேசாதே என என்னைப் பலமுறை எச்சரித்தார்கள். ஆனால் எனக்கு அவன் மேல் உள்ள அன்பு மரியாதை, ஈர்ப்பு எதுவுமே குறையவில்லை.

அவன் மிகவும் கடுமையாக உழைப்பவன். சீக்கிரமாக முன்னேற வேண்டும் என்ற முனைப்போடு இருப்பவன். அதனால் எப்போதும் அவனை பற்றிய அக்கறை அவனுக்கு இருந்ததே இல்லை. பல நேரங்களில் அவன் மனச் சோர்வு அடையும்போதெல்லாம் நான் அவனுக்கு ஆறுதலாக இருந்து அவனது தன்னம்பிக்கை உணர்வு குறைந்து விடாமல் பார்த்துக்கொண்டிருக்கிறேன். ஆனால் இதுவரைக்கும் ஒருமுறைகூட என்னைக் காதலிப்பதாக அவன் நேரடியாகக் கூறியதில்லை.

இப்படியே 5 ஆண்டுகள் ஆகிவிட்டன. கடந்த 6 மாதங்களுக்கு முன்பு அவன் துபாய் சென்று ஒரு வேலையில் சேர்ந்துவிட்டான். ஆனால் அங்கு உள்ள இயந்திரத்தனமான வாழ்க்கையும் தனிமையும் அவனை மிக மோசமான மன உளைச்சலுக்கு ஆளாக்கிவிட்டன. இப்போது அவன் விரக்தியின் உச்சத்துக்கே சென்றுவிட்டதைப் போல் தோன்றுகிறது.

“இனிமேல் நாம் பேசவே வேண்டாம். எனக்காகக் காத்திருந்து நீ உன் வாழ்க்கையையும் கெடுத்துக்கொள்ளாதே. நான் எப்படியோ இருந்துகொள்கிறேன். முடிந்தவரை இங்கிருந்து என் குடும்பத்திற்கு என்னால் முடிந்ததைச் செய்கிறேன். உன்னை ஏமாற்றுவதற்காக நான் பழகவில்லை. என்னை மன்னித்துவிடு. என்னால் சாகும்வரை உன்னை மறக்க இயலாது. சீக்கிரமாகச் செத்துவிடுவேன் என்று தோன்றுகிறது. ஒவ்வொரு நாளும் சென்னையில் இருந்த ஞாபகங்களே வருகின்றன” என்று என்னிடம் மிகுந்த வேதனையோடு பேசினான். அதன் பின் இரண்டு வாரங்களாக வேறு எந்தத் தொடர்பும் இல்லை. மிகுந்த வேதனையாக இருக்கிறது. யாரிடமும் சொல்லி அழக்கூட முடியவில்லை. உள்ளே நிம்மதியின்றி வெளியே சிரித்துக்கொண்டு வாழ்வில் ஒரு பிடிப்பே இல்லாமல் இருக்கிறேன். அவனை இப்படி ஒரு நிலைமையில் விட்டுவிட்டு என்னால் எப்படி வேறு ஒருவருடன் எந்தக் குற்ற உணர்ச்சியும் இல்லாமல் வாழ முடியும்? இப்போதைக்குத் திருமணம் பற்றிய எண்ணம் இல்லை. இரண்டு ஆண்டுகள் ஆகட்டும் என்று எங்கள் வீட்டில் கூறிவிட்டேன். இப்போது நான் என்ன செய்வது?

தோழியே, நீங்கள் இந்த உறவைக் காதல் என்று சொல்வதால், நான் அந்த அடிப்படையில் பதில் சொல்கிறேன். நீங்கள் இருவரும் ‘யார் சிறந்த தியாகி?' என்பதில் போட்டிபோட்டுக்கொண்டு வாழ்க்கையை வீணடித்துக் கொண்டிருக்கிறீர்கள்.

அதிலும் உங்கள் நண்பர்/ காதலர் பிறருக்காக வாழ்வதுதான் தன்னுடைய குறிக்கோள் என்று நம்புகிறார். அவர் பிறருக்காக வாழ்ந்துவிட்டுப்போகட்டும்; உங்களையும் ஏன் தன் வாழ்வோடு கோத்துவிட்டார்? விரும்பித் தியாகம் செய்பவர் ஒரு உயர்ந்த மனநிலையில் இருப்பார். புலம்பிக்கொண்டிருக்க மாட்டார்.

அவருக்குள் இரட்டை மனம் இருக்கிறது-ஒன்று தியாகம் செய் என்கிறது; மற்றொன்று, பிறருக்காகவே வாழப்போகிறாயா என்று வருந்துகிறது. மணம் முடித்துக்கொண்டால் நீங்களும் அவரது தியாகத்தில் பங்கேற்கலாமே! அவருக்கு ஒரு தெளிவு வர வேண்டும். நீங்களும் அந்தத் தெளிவை அவருக்குக் கொடுக்காமல் அவரைத் துதிபாடிக்கொண்டிருக்கிறீர்கள்.

பொறுத்தது போதும் பெண்ணே! அவருக்கு ஒரு கெடு வையுங்கள். அதற்குள் அவர் உங்களை குறிப்பிட்ட மாதத்தில்/ வருடத்தில் மணம் செய்துகொள்வேன் என்று உறுதியாகத் தெரிவிக்க வேண்டும். இல்லாவிட்டால் நீங்கள் அவர் வாழ்விலிருந்து விலகி விட வேண்டும். நடக்குமா என்றுகூடத் தெரியாமல், எவ்வளவு காலம் அவருடன் பயணித்துக் கொண்டிருப்பீர்கள்? அவர் நல்லவர்தான். ஆனால் துணிச்சல் இல்லாதவர்! காதலுக்கு வலு இருந்தால் எதிர்கொள்ளும் சோதனைகளைத் தவிடுபொடியாக்கிவிடும்.

கிளம்புங்கள் போராட! துபாயில் தனிமையில் வாடுபவருக்கு மூளைச் சலவை செய்யுங்கள். இரு தரப்புப் பெற்றோரது சம்மதத்தைப் பெற வழி தேடுங்கள். செயல்பட வேண்டிய நேரமிது. மயிலே, மயிலே என்றால் இறகு போடாது!

உளவியல் ஆலோசகர் பிருந்தா ஜெயராமனுடன் உரையாடலாம். உங்கள் கேள்விகள், எண்ணங்கள், குழப்பங்கள், உறவுச் சிக்கல்களைப் பகிர்ந்துகொள்ளுங்கள்.

முகவரி: இளமை புதுமை, தி இந்து, கஸ்தூரி மையம்,

124, வாலாஜா சாலை, சென்னை-600 002.

மின்னஞ்சல்: ilamaiputhumai@thehindutamil.co.in

SCROLL FOR NEXT