கரடு முரடான மலைகள்... அடர்ந்த மரங்களுக்கிடையே நீளும் பாதை... முதலுதவி தேவைப்படும் நேரத்தில்கூட பல கிலோமீட்டர் தொலைவுக்கு அப்பால் உள்ள மருத்துவமனைக்குத்தான் செல்ல வேண்டிய நிலைமை.
இப்படித்தான் இன்றும் இருக்கின்றன பல மலை கிராமங்கள். அந்தப் பகுதிகளில் பேருந்துகளை எதிர்பார்க்கவே முடியாது. ஏன் பேருந்துகள் இல்லை? சரியான சாலை வசதிகள் இல்லையென்பதே பதில்.
மலையைக் குடைந்து பாதையை உருவாக்கிய மாஞ்சியைப் போல, பல காலமாக மக்கள் நடந்து, நடந்து இயற்கையாகவே உருவான பாதைகள்தான் இன்று, மலையக மக்களுக்குச் சாலைகள். அந்த சாலைகளில் நோயுற்றவர்களையும், முதியவர்களையும், கர்ப்பிணி களையும் பாதுகாப்பாகக் கொண்டுசெல்ல புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது ‘ஸ்டிங்!’
“மலையகப் பாதைகள் மட்டும்தான் என்றல்ல. பாலைவனம், கடற்கரை போன்ற பகுதிகளிலும்கூட இந்த வாகனத்தைச் செலுத்த முடியும்” என்கிறார் ப்ரணவ். எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் சமீபத்தில் நடைபெற்ற ‘ஆருஷ்’ மாணவர் திருவிழாவில் இவர் தலைமையில் உருவான கார் தோற்றத்திலான ஒரு வாகனம் காட்சிக்கு வைக்கப் பட்டிருந்தது.
அதைப் பற்றி அவரிடம் கேட்டபோது, “எங்க டீம் பேரு ‘தி கான்ராட்ஸ்’. எல்லா வாகனங் களிலும் ‘கான்ராட்’ (conrod) எனும் பாகம்தான் வாகனம் இயங்கு வதற்கான அடிப்படையானது. இது இன்ஜினின் மேல்கீழ் நகர்வை வாகனத்தின் சக்கரம் சுழல்வதற்கான சக்தியாக மாற்றுவதற்கு உதவுகிறது. நாங்கள் உருவாக்கியுள்ள தயாரிப்பும் அவ்வாறு அடிப்படையான வாகனமாக இருக்க வேண்டும் என்று விரும்பினோம். சாலைகள் இல்லாத ஊர்களில்கூட போக்குவரத்து வசதியை ஏற்படுத்த வேண்டும் என்று நினைத்தோம். அதன் காரணமாகவே அந்தப் பாகத்தின் பெயரையே எங்கள் குழுவுக்கும் சூட்டிவிட்டோம்” என்றார்.
இந்தக் குழுவில் மொத்தம் 25 பேர். அனைவருமே எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் பொறியியல் பாடத்தின் வெவ்வேறு கிளைகளில் படிக்கிறார்கள். இந்தக் குழு இவர்களுடைய சீனியர் மாணவர்களால் 2008-ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது. அதற்கு அடுத்த ஆண்டில் இருந்து இவர்கள் தேசிய மற்றும் சர்வதேச அளவிலான போட்டிகளில் பங்குபெறத் தொடங்கி யிருக்கிறார்கள்.
2008 முதல் 2015-ம் ஆண்டு வரை 7 கார்களை இவர்கள் வடிவமைத்திருக்கிறார்கள். ஒவ்வோர் ஆண்டும் கார்களை அப்டேட் செய்கிறார்கள். அப்படித்தான் இந்த ஆண்டு ‘ஸ்டிங்’ காரை உருவாக்கியிருக்கிறார்கள்.
ஆட்டோமொபைல் இன்ஜினீயர் களுக்கென ‘சொஸைட்டி ஆஃப் ஆட்டோமோடிவ் இன்ஜினியர்ஸ்’ (எஸ்.ஏ.இ.) எனும் அமைப்பு அமெரிக்காவில் உள்ளது. அந்த அமைப்பு 1976-ம் ஆண்டு முதல் ‘பஜா எஸ்.ஏ.இ.’ எனும் கல்லூரிகளுக்கிடையேயான ஆட்டோமொபைல் தொழில்நுட்பப் போட்டிகளை நடத்திவருகிறது.
முதல்முறையாக தெற்கு கரோலினா மாகாணத்தில் நடைபெற்ற இந்தப் போட்டிகள் இப்போது 7 நாடுகளில் நடத்தப்படுகின்றன. அதில் இந்தியாவும் ஒரு நாடு.
2011-ம் ஆண்டு தேசிய அளவில் நடந்த போட்டியில், ‘கோ கிரீன்’ விருதையும், 2012-ம் ஆண்டில் தேசிய அளவிலான சிறந்த வாகன வடிவமைப்புக்கான விருதையும் பெற்றிருக்கிறார்கள் இந்தக் குழுவினர். இந்த ஆண்டு சில தொழில்நுட்பக் கோளாறுகளால் தேசிய அளவில் 9-வது இடமும், சர்வதேச அளவில் 30-வது இடமும்தான் கிடைத்திருக்கிறது.
“ஆனாலும் என்ன, அடுத்தடுத்து வரும் போட்டிகளில் எங்கள் வாகனம் முதல் இடம் பிடிக்கும்” என்று உற்சாகத்துடன் கூறும் ப்ரணவ் அதற்கான முயற்சிகள் நடந்துவருகின்றன என்று சொல்லி ‘தம்ஸ் அப்’ காட்டுகிறார்!