இளமை புதுமை

இந்திய மோட்டார் சைக்கிள் டைரி!

செய்திப்பிரிவு

தீபன் நம்மைப் போன்ற ஓர் ஆள்தான். அவருக்குள்ளும் இளைஞர்களுக்கே உரிய சில கனவுகள் இருந்தன. ஆனால் அவற்றைக் காட்டிலும் கேள்விகள் அதிகமாக இருந்தன.

செயல்களில் ஒரு பரபரப்பு... கண்களில் ஒரு துறுதுறு... பேச்சில் பட பட வேகம். கடந்த காலத்தையும், எதிர் காலத்தையும் கணக்கிட்டு வாழாமல், நிகழ்காலத்தில் தனக்கு எது சரியெனத் தோன்றுகிறதோ அதை மட்டுமே செய்வது... (எத்தனை பேர் மனம் புண்பட்டாலும்!), இதுதான் தீபன்!

யார் இந்த தீபன்?

‘ஒரு பயணி’. இப்படித்தான் பதில் வருகிறது தீபனிடமிருந்து. கோவையில் ஒரு நடுத்தரக் குடும்பத்தில் பிறப்பு, ப்ளஸ் டூ கணிதத்தில் 4 முறை பெயிலாகி 5-வது முறையாக பாஸ் ஆகிற அளவுக்குக் கசப்பான படிப்பு, ஓஷோ திறந்துவிட்ட கதவுகள், பண்பலை வானொலி தந்த ரேடியோ ஜாக்கி அனுபவம், இயற்கை விவசாயத்தின் மீதான காதல்... இவை அனைத்தும் சேர்ந்து இவரை ஒரு மாபெரும் பயணத்துக்குத் தயார்படுத்தியிருந்தன.

தன்னுடைய பிறந்தநாள் ஒன்றில், நண்பர் முத்துக்குமாருடன் சேர்ந்து இனிதே தொடங்கியது இவரது மோட்டார் சைக்கிள் பயணம். 22 மாநிலங்கள், 22 ஆயிரம் கி.மீ தொலைவு பயணத்தில் இவர்கள் சந்தித்த மனிதர்கள், இவர்களுக்குள் பாதிப்பை ஏற்படுத்திய சம்பவங்கள், எதையும் எதிர்பாராத சினேகம், எதையாவது எதிர்பார்த்த தருணங்கள்... இவை அனைத்தும் சேர்ந்த கலவைதான் இன்றைய தீபன்.

“கல்லூரி படிச்சு முடிக்கிற வரைக்கும் என் வாழ்க்கை என்னோட கட்டுப்பாட்டுல இல்லை. ஆனா அதுக்கப்புறம் வேலை, காதல், திருமணம்னு வந்தப்போ வாழ்க்கையின் கடிவாளம் என் கையில இருந்துச்சு” என்று ஆரம்பிக்கிறார் அவர்.

‘நான் யார்? எதுக்காக என்னுடைய வாழ்க்கை, யாருக்காக?’ இப்படிப் பல கேள்விகளைக் கேட்டுக்கொண்டே யிருந்த இவரது தேடலின் விளைவு இந்தியாவை ‘ராயல் என்ஃபீல்ட்’ பைக்கில் சுற்றிவரும் வாய்ப்பை இவருக்குத் தந்துள்ளது.

கை நிறைய சம்பளம், வசதியான வாழ்க்கை என்று இருந்த நேரத்தில், இவர் இயற்கை விவசாயம் கற்றுக்கொள்ளப் போவதாகச் சொன்னவுடன் குடும்பத்தினருக்கு அதிர்ச்சி. ஆனால் இதில் அவர் உறுதியாக இருந்திருக்கிறார். அதன் முதல் படியாக இந்தியாவைச் சுற்றிப்பார்க்க முடிவுசெய்து தன் நண்பர் முத்துக்குமாருடன் கிளம்பிவிட்டார்.

2011 ஜூலை மாசம் இந்தியாவை பைக்கில் சுற்றத் தொடங்கியிருக்கிறார்கள். “கன்னியாகுமரியிலிருந்து காஷ்மீர் வரை இந்த நாட்டின் சாலைகளின் நீள அகலங்கள் என் பைக்குக்குப் புரிய, நாங்கள் சந்தித்த ஒவ்வொரு மூன்றாவது நபரும் மனதளவில் எங்களுடன் எவ்வளவு நெருக்கமாக உள்ளார் என்பது எனக்குப் புரியத் தொடங்கியது” என்கிறார்.

இப்படி ஆரம்பித்த இவர்களின் பயணம் 2012-ம் ஆண்டு மே மாதம் முடிவுக்கு வந்தது.

“பயணம்தான் என்னோட‌ முதல் குறிக்கோள்னு சொன்னா, அந்தப் பயணத்தின் வழியே இயற்கை விவசாயிகளைச் சந்திக்கிறது என்னோட‌ இரண்டாவது இலக்காக இருந்துச்சு” என்று சொல்கிறார் தீபன்.

நிறைய இயற்கை விவசாயிகளைச் சந்தித்திருக்கிறார்கள். நிறைய கற்றுக்கொண்டார்கள். பயணம் முடிந்த பின்னர், நண்பருடன் சேர்ந்து நிலம் வாங்கி சில முயற்சிகள் செய்து பார்த்திருக்கிறார்கள். அதில் சில முயற்சிகள் வெற்றி. சில முயற்சிகள் தோல்வி. கடைசியில் இவருக்கு மொத்தம் 25 லட்சம் ரூபாய் கடனாகிவிட்டது. “அதனால என்ன? அந்தப் பரிசோதனை முயற்சிகள்ல இருந்து சில பாடங்களைக் கத்துக்கிட்டோமே” என்கிறார் இவர்.

பயணங்களின்போது எடுத்த ஒளிப்படங்களையும், அவ்வப்போது எழுதிவைத்த டயரிக் குறிப்புகளையும் ஒரு நாள் யதேச்சையாக இவர் புரட்டியபோது, இதை ஏன் புத்தகமாக்கக் கூடாது என்று நினைத்திருக்கிறார். அதை அப்படியே செயல்படுத்தவும் செய்தார். அதன் விளைவு தான் ‘பயணம் ஒண்ணு போதாது?!’ என்னும் புத்தகம்.

இந்தப் புத்தகம் கடந்த வாரம் கோவையில் வெளியிடப்பட்டது. தன்னுடைய அனுபவங்களை அலங்காரமற்ற நடையில், எளிமையாக பேச்சு வழக்கிலேயே எழுதியிருக்கிறார்.

எந்த இடத்திலும் தன்னைப் பெரிய ஆளாக காட்டிக்கொள்ள முனையாமல், தான் செய்த தவறுகள், சொன்ன பொய்கள், மற்றவர்களுக்குத் தான் ஏற்படுத்திய காயங்கள் என அனைத்தையும் கை நழுவி விழுந்த பெட்டியில் இருந்து சிதறும் நகைகளைப் போல, அதிர்வுடன் சொல்லியிருக்கிறார்.

புத்தகத்தில் மொத்தம் 70 அத்தியாயங்கள். ஒவ்வொன்றும் ஒவ்வொரு சிறுகதை போலத் தெரியும். முழுவதையும் படித்தால், ஒரு சுயசரிதையைப் படித்த நிறைவு ஏற்படும். ஒவ்வொரு பக்கத்துக்கும் 1 கிமீ., 2 கிமீ. எனப் பக்க எண் வடிவமைத்திருப்பது, தீபனுடன் நாமும் வேகமாக பைக்கில் செல்லும் உணர்வைத் தருகிறது.

“பயணம் எனக்குத் தியானம் போன்றது. பொதுவா, தியானம் ஒருவருக்கு தன்னுடைய வாழ்க்கை யின் மீதான பிடிப்பை இன்னும் இறுக்கும், அல்லது வாழ்க்கையின் மீதான பிடிப்பை இற்றுப்போகச் செய்யும். எனக்கு என்ன விதமான ஞானம் இந்தப் பயணத்தின் மூலமா கிடைச்சிருக்குன்னு இப்போ வரைக்கும் எனக்குத் தெரியாது. ஒருவேளை 2017-ம் ஆண்டு நான் மேற்கொள்ளவிருக்கும் உலகப் பயணத்தில் அதற்கான விடை கிடைக்கலாம்” என்று புதிர்போடுகிறார் கைகுலுக்கிச் சிரித்தபடி விடைதரும் தீபன்!

SCROLL FOR NEXT