புத்தாயிரத்தின் தொடக்கத்தில் கைபேசிகள் கோலோச்சத் தொடங்கிய காலத்தில் இளைஞர்கள் மத்தியில் ‘டெக்ஸ்ட் சாட்’ வெகு பிரபலம். கைபேசிகளின் பட்டன் தேயத்தேய எஸ்.எம்.எஸ். மூலம் புத்தாயிரத்து இளைஞர்கள் அரட்டையடித்து தீர்த்தனர். இதற்காகவே ‘ஸ்டூடண்ட் பேக்’ என்ற பெயரில் கட்டற்ற குறுந்தகவல் சேவையை தொலைத்தொடர்பு நிறுவனங்கள் அப்போது வாரி வழங்கின.
இந்த ‘டெக்ஸ்ட் சாட்’களில் வார்த்தைகளை நீட்டி முழக்காமல் சுருக்கமாக ‘சாட்’ செய்வது பெரும் கலை. வாக்கியங்களின் முதல் எழுத்துக்களைக் கொண்டு, அதையே ஒரு வார்த்தையாகச் சுருக்கி ‘டெக்ஸ்ட்’ செய்யாத புத்தாயிரத்து இளைஞர்கள் அப்போது மிகவும் சொற்பம். எடுத்துக்காட்டுக்கு ‘Okay’ என்பது ‘Ok’வாகி, பின்னர் ‘K’ என்று இளைஞர்களின் அரட்டையால் சுருங்கிப் போனது. ஆனால், இப்படி வார்த்தைகளைச் சுருக்கி ‘சாட்’ செய்த புத்தாயிரத்து இளைஞர்களின் காலம் மலையேறிவிட்டது. எமோஜிக்களால் உரையாடல் நிகழும் காலம் அல்லவா இது?
இப்போதைய இளைஞர்கள் எமோஜிக்கள் மூலமே வாட்ஸ்அப், மெசஞ்சர் மூலம் நீண்ட நேரம் அரட்டையடிக்கிறார்கள். தொடக்கத்தில் சிரிக்க, அழுக, கோபப்பட எனப் பல்வேறு உணர்வுகளை வெளிப்படுத்தும் பொம்மைச் சித்திரங்கள் எமொஜிக்களாக அறிமுகமாயின. இது இளைஞர்கள் மத்தியில் பரவலான வரவேற்பைப் பெறவே, அரட்டைகளில் நிரந்தர இடத்தைப் பிடித்து அரட்டைகளை வளர்த்தது.
தற்போது இந்த எமோஜி அரட்டையும் அடுத்த நிலைக்குச் சென்றுவிட்டது. பழைய திரைப்படப் பாடல்களையும் சமீபத்திய படக் காட்சிகளையும், பாடல்களையும் இணைப்பது, பிரபல ஓவியங்களைப் பின்னணியாகக் கொண்டு திரைப்படக் காட்சிகளை இணைப்பது என்ற ‘மாஷ்-அப்’ முறை பரவலாகிவிட்டதைப்போல, எமோஜிக்களும் ‘மாஷ்-அப்’ டிரெண்டுக்கு தப்பவில்லை. இப்போதெல்லாம் ‘மாஷ்-அப்’ எமோஜிக்களே அரட்டைகளில் முதன்மை இடத்தைப் பிடித்துவருகின்றன. இந்த ‘மாஷ்-அப்’ எமோஜிகளுக்கு அர்த்தம் சொல்லும் வகையில், சமூக ஊடங்களில் சேவைப் பக்கங்களும் இளைஞர்களுக்கு உதவிவருகின்றன.
ட்விட்டரில் https://twitter.com/EmojiMashupBot என்ற பக்கத்துக்குச் சென்றால், ‘மாஷ்-அப்’ எமோஜிக்கள் மூலம் அரட்டையடிக்கும் கலையையே கற்றுக்கொள்ளலாம்!