ஒரு காலத்தில் காதலிப்பதை காதலர்கள் யாரிடமும் பகிர்ந்துகொள்ள மாட்டார்கள். ஆனால், இன்றைய இணைய, சமூக ஊடகக் காலம் அப்படிப்பட்டதாக இல்லை. தற்போது, சமூக ஊடகங்களில் காதலை பிரகடனப்படுத்த வேண்டிய தேவையற்ற கட்டாயம் உருவாகியிருக்கிறது. ‘ரிலேஷன்ஷிப் ஸ்டேட்ட’ஸை ஃபேஸ்புக் போன்ற சமூக ஊடகங்களில் வெளிப்படுத்தி பெருமைப்பட்டுகொள்ள வேண்டிய ஒரு சூழலைப் பார்க்க முடிகிறது. நட்பு வட்டம், உறவினர்கள் எனத் தங்கள் சுற்றத்தாரிடம் காதலிக்கும் தகவலை வெளிப்படுத்துவதற்கான ஒரு களமாகச் சமூக ஊடகங்கள் மாறியிருக்கின்றன. ஆனால், காதலர்கள் சமூக ஊடகங்களில் காதலை வெளிப்படுத்துவதற்கு முன்பு சில விஷயங்களைக் கணக்கில் கொள்ள வேண்டும்.
இருவரின் முடிவு
காதலைச் சமூக ஊடகத்தில் வெளிப்படுத்த வேண்டும் என்பது ஒருவர் மட்டுமே எடுத்த முடிவாக இருக்கக் கூடாது. இருவரும் சேர்ந்து எடுத்த முடிவாக இருக்க வேண்டும். ஒருவேளை, நீங்கள் காதலிப்பதை சமூக ஊடகத்தில் பகிர்ந்துகொள்ள உங்கள் காதலருக்கு விருப்பமில்லை என்றால், அந்த முடிவுக்கு நீங்கள் மரியாதை கொடுத்துத்தான் ஆக வேண்டும்.
கவனம் வேண்டும்
சமூக ஊடகத்தில் பகிரும் ஒரு செய்தி காட்டுத்தீ போல் பரவக்கூடியது. இன்றையச் சூழலில் சமூக ஊடகத்தில் காதலிப்பதை வெளிப்படையாகப் பகிர்ந்துகொள்வதில் பல்வேறு சிக்கல்கள் இருக்கின்றன. நீங்கள் ஒருமுறை பகிர்ந்த தகவல், பகிர்ந்ததுதான். ஒரு நொடி, ஒரு நிமிடம் என உங்கள் மனம் மாறி, அந்தச் செய்தியை அழிப்பதற்குள், அது சென்று சேர்பவர்களின் எண்ணிக்கையை உங்களால் கணிக்க முடியாது. எப்போதும் அசைப்போடப்படும் அவலாக மாறிவிட்ட சமூக ஊடக உலகத்தில் நீங்கள் கவனமாக இருக்க வேண்டியது அவசியம்.
இது வேண்டாமே..
உங்கள் நட்புகள், உறவினர்கள் வட்டத்தில் இருப்பவர்கள் தங்கள் காதலை வெளிப்படையாகச் சமூக ஊடகத்தில் பகிர்ந்துகொள்கிறார்கள் என்ற அழுத்தத்தின் காரணமாகக்கூட, நீங்களும் சமூக ஊடகத்தில் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்ற எண்ணம் தோன்றலாம். அத்துடன், காதலர்களில் யாராவது ஒருவர் பாதுகாப்பற்று உணர்ந்தாலும் சமூக ஊடகத்தில் காதலைப் பகிர்ந்துகொள்ளுமாறு மற்றொருவரை அவர்கள் வற்புறுத்தலாம். காதலரின் வற்புறுத்தலாலோ, மற்றவர்கள் கொடுக்கும் அழுத்தத்தாலோ ஒரு போதும் சமூக ஊடகத்தில் காதலைப் பற்றிப் பகிர்ந்துகொள்ளும் முடிவை எடுக்க வேண்டாம்.
உறவினர்கள் வட்டம்
தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றிய முக்கியத் தகவலைச் சமூக ஊடகத்தில் பகிர்ந்துகொள்வதை உங்கள் நட்பு வட்டம் சாதாரணமாக எடுத்துக்கொள்ளும். ஆனால், உறவினர்கள் வட்டத்தை அப்படிச் சொல்ல முடியாது. அதனால், உங்கள் சமூக ஊடகப் பக்கங்களில் உங்கள் உறவினர்களும் இருக்கிறார்கள் என்றால், உங்கள் காதலைப் பற்றி பகிர்ந்துகொள்வது குறித்து ஒரு முறைக்கு இரண்டு முறை யோசிப்பது சிறந்தது.
நிரூபிக்க வேண்டாம்
உங்கள் காதலை யாருக்கும் நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை. யாருக்காவது உங்கள் காதலை நிரூபிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் சமூக ஊடகத்தில் பகிர்ந்துகொள்ள நினைத்தால், அது உங்கள் காதல் வாழ்க்கையில் தேவையற்ற சிக்கல்களையே உருவாக்கும்.
அவசரம் வேண்டாம்
உங்கள் காதலைப் பற்றியும், காதலரைப் பற்றியும் உறுதியாக இருக்கும்பட்சத்தில் மட்டுமே உங்கள் ரிலேஷன்ஷிப் ஸ்டேட்டஸை ஃபேஸ்புக்கில் பகிரலாம். ஒருவேளை, உங்கள் காதலைப் பற்றி உறுதியாக முடிவெடுக்காதபட்சத்தில், அதைப் பற்றி சமூக ஊடகத்தில் பகிர்ந்துகொள்ளாமல் இருப்பதுதான் நல்லது.