இந்திய இளைஞர் ஒருவரைப் பாராட்டி ஃபேஸ்புக் சி.ஓ.ஓ. ஷிரில் ஸேண்ட்பர்க், தன் ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். போபாலைச் சேர்ந்த 19 வயது ஹர்ஷ் சோங்க்ரா என்பவர்தான் அந்தப் பெருமைக்குரிய இந்தியர். மொபைல் அப்ளிகேஷன்களை உருவாக்குவதில் ஆர்வம் கொண்ட இவர் சமீபத்தில் உருவாக்கியிருக்கும் ‘my child’ என்னும் ஆப்தான் இவருக்குப் பாராட்டைப் பெற்றுத் தந்துள்ளது.
இந்த ஆப், குழந்தைகளின் வளர்ச்சிக் குறைபாடுகளைக் கண்டறிய உதவுகிறது. இப்படியொரு ஆப் உருவாக்கக் காரணம் தனக்கு ஏற்பட்ட குறைபாடுதான் என்கிறார் ஹர்ஷ். dyspraxia எனப்படும் இயக்கக் கோளாறால் பாதிக்கப்பட்டவர் ஹர்ஷ்.
அதாவது மூளையின் நரம்பு செல்களுக்கு ஏற்படும் பாதிப்பால், மூளை இடும் கட்டளை உடலின் மற்ற பகுதிகளுக்குச் சரிவரக் கடத்தப்படாது. அதனால் சிந்தனைக்கும் செயலுக்குமான ஒருங்கிணைப்பில் தாமதமோ, தடங்கலோ ஏற்படும். உதாரணமாக பென்சில் பிடித்து எழுதுவதில் சிக்கல், வார்த்தைகளைச் சரியாக உச்சரிக்க முடியாதது, மற்ற குழந்தைகளுடன் பழகுவதில் தடுமாற்றம் என்று பலவிதமான சிக்கல்கள் ஏற்படலாம்.
இந்தக் குறைபாடு குறித்துப் போதுமான விழிப்புணர்வு இல்லாததால் ஹர்ஷுக்கு இந்தக் குறைபாடு இருப்பதைக் கண்டுபிடிக்கவே ஒன்பது வயதானதாம். தனக்கு ஏற்பட்ட நிலை, மற்ற குழந்தைகளுக்கு ஏற்படக் கூடாது என்ற எண்ணத்துடன் இந்த ‘ஆப்’பைக் கண்டறிந்திருக்கிறார் ஹர்ஷ். இந்த ஆப் மூலம் முப்பதே விநாடிகளுக்குள் ஒரு குழந்தைக்கு உடலியக்கக் கோளாறு இருக்கிறதா, இல்லையா என்பதைக் கண்டறிந்துவிடலாம்.
“உங்கள் குழந்தைக்குக் குறைபாடு இருக்கலாம் என்று சுட்டிக்காட்டுவதுதான் இந்த ‘ஆப்’பின் நோக்கம். இதன் முடிவு, இறுதியானது அல்ல” என்று சொல்லும் ஹர்ஷ், பல மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் புத்தகங்களின் அடிப்படையில் இதை உருவாக்கியிருப்பதாகச் சொல்கிறார்.
இந்த ‘ஆப்’பை டவுன்லோடு செய்துகொண்டால், உங்கள் குழந்தை குறித்த சில கேள்விகள் கேட்கப்படுகின்றன. அவற்றுக்கு அளிக்கப்படுகிற பதில்களைப் பொறுத்து, அந்தக் குழந்தையின் வளர்ச்சி குறித்தும், ஏதேனும் குறைபாடு இருந்தால் அதற்கான மருத்துவ பரிந்துரைகள் குறித்தும், தகவல்கள் வரும். அதன் அடிப்படையில் மருத்துவரைச் சந்தித்து ஆலோசனை பெறலாம்.
“ஹர்ஷ் சோங்க்ராவின் பெற்றோருக்கு விழிப்புணர்வும் வசதியும் இருந்திருந்தால் ஆரம்பத்திலேயே இந்தக் குறைபாட்டைக் கண்டறிந்திருக்க முடியும். தன் பெற்றோரைப் போல மற்றவர்கள் கவலைப்படக் கூடாது என்பதற்காக ஹர்ஷ் ‘மை சைல்ட்’ ஆப் உருவாக்கியிருக்கிறார். அவருக்கு நாங்கள் டெக்னிகல் சப்போர்ட் தருவதன் மூலம் இந்த ‘ஆப்’பை மேலும் டெவலப் செய்ய முடியும்” என்று தன் ஃபேஸ்புக் பக்கத்தில் எழுதியிருக்கிறார் ஷிரில்.
மை சைல்ட் ஆப் பதிவிறக்க: https://goo.gl/nJNvuC