பாடலாசிரியரும் பாடகருமான லோகன் ‘பிளாக் பாய்ஸ்’ கானா இசைக்குழுவைக் கடந்த ஓராண்டுக்கும் மேலாக நிர்வகித்துவருகிறார். சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த இவர், தன் பகுதியில் வசிக்கும் இளைஞர்களின் திறமையை வெளியுலகத்துக்குத் தெரியப்படுத்தவும், அவர்களைச் சரியான பாதையில் வழிநடத்தவும் இந்த இசைக்குழுவை நடத்திவருகிறார். தமிழ், மலையாளம் உட்பட இதுவரை 99 திரைப்படங்களுக்கு இவர் பாடல் எழுதியிருக்கிறார்.
வடசென்னையில் ‘பிளாக் பாய்ஸ்’ இசைக்குழுவின் சார்பாக முப்பது நிகழ்ச்சிகளுக்கு மேல் நடத்தியிருக்கிறார்கள். கர்னாடக இசைப் பாடகர் டி.எம்.கிருஷ்ணாவின் ‘செபாஸ்டியன் அண்ட் சன்ஸ்’ புத்தக வெளியீட்டு விழாவில், இவர்களுடைய இசைக்குழுவின் சார்பில் இசை நிகழ்ச்சிகளை நடத்தி அசத்தியிருக்கிறார்கள். இவர்களின் இசை நிகழ்ச்சிகளுக்குப் பார்வையாளர்களிடம் மிகுந்த வரவேற்புக் கிடைத்திருக்கிறது.
“எங்களுடைய குழுவில் இப்போதைக்கு 19 திறமையான இளைஞர்கள் இருக்கிறார்கள். அந்த 19 பேரும் வடசென்னையின் வெவ்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்புவரை ஒரே பள்ளியில் ஒன்றாகப் படித்தவர்கள். இப்போது அனைவரும் கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கிறார்கள்.
இவர்கள் அனைவரிடமும் எண்ணற்ற திறமைகள் இருக்கின்றன. அவர்களுடைய திறமைகளை வெளிக்கொண்டுவருவதற்கான, ஒரு சிறிய முயற்சியாகத்தான் இந்த ‘பிளாக் பாய்ஸ்’ இசைக்குழுவைத் தொடங்கி பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் நடத்திவருகிறேன். இவர்கள் சமூகத்தில் எதிர்கொள்ளும் பிரச்சினைகளால் பாதை மாறி போய்விடக் கூடாது என்பதற்காக இவர்களைக் கவனத்துடன் வழிநடத்திவருகிறேன்” என்கிறார் லோகன்.
புதுமுகப் பாடலாசிரியர்கள் பாடல் பாடுவது, இசையமைப்பது ஆகியவற்றுடன் மட்டுமல்லாமல், இசைக்குழுவில் இருக்கும் இளைஞர்களைத் தன்னைப் போலவே பாடல்களை எழுதுவதற்கும் ஊக்கப்படுத்திவருகிறார் லோகன். இவர் ‘காலா’, ‘காஞ்சனா-2’ உள்ளிட்ட பல திரைப்படங்களில் பாடல் எழுதியுள்ளார். “பாடல்கள் பாடுவதோடு நிறுத்திக்கொள்ளாமல் பாடல்களை எழுதுவதற்கும் அவர்கள் ஆர்வத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்திவருகிறேன். இந்த முயற்சியால், எங்கள் குழுவில் இருக்கும் அனீஷ், சுனில் இருவரும் ‘மாஸ்டர்’ திரைப்படத்தில் ‘வாத்தி கமிங்’ பாடலை எழுதியிருக்கின்றனர்.
திரைப்படங்களில் பாடல்கள் எழுதுவது, இசை நிகழ்ச்சிகள் நடத்துவதோடு மட்டுமல்லாமல் சமூக அக்கறையுடன் கூடிய பாடல்களை எழுதி, ஆல்பமாகத் தயாரித்து மக்களிடம் கொண்டுசேர்ப்பதற்கான முயற்சியில் இருக்கிறோம். அதற்கான உரிய உதவிகள் கிடைக்கும்போது, விரைவில் எங்களிடமிருந்து நிறைய ஆரோக்கியமான பாடல்களை எதிர்பார்க்கலாம்” என்று நம்பிக்கையுடன் கூறுகிறார் லோகன். இவர்களுடைய ‘பிளாக் பாய்ஸ்’ என்ற யூடியூப் அலைவரிசையில் தங்களுடைய கானா பாடல் காணொலிகளை அவ்வப்போது பதிவேற்றிவருகிறார்கள்.
‘பிளாக் பாய்ஸ்’ இசைக்குழுவின் யூடியூப் அலைவரிசை: https://bit.ly/30WOBHS