இந்தப் பெருந்தொற்று காலத்தில், பல புதுமையான போக்குகளை எதிர்கொண்டுவருகிறோம். உலகம் ஊரடங்குக்குள் சென்றுவிட்ட காலத்தில், சமூக ஊடகங்கள் மட்டுமே பலருக்கும் வடிகாலாக அமைந்திருக்கின்றன. இப்போது கொஞ்சம் கொஞ்சமாக, உலகம் ஊரடங்கிலிருந்து மீண்டுவரும் நிலையில், பலரும் தங்களைப் புதுப்பித்துக்கொள்வதற்கான முயற்சிகளை எடுத்துவருகிறார்கள். அப்படியொரு முயற்சிதான் ‘ஸ்ட்ராபெர்ரி ஆடை’.
இந்த ஸ்ட்ராபெர்ரி ஆடை சமூக ஊடகங்களில் அண்மைக் காலமாக வைரலாகிவருகிறது. பெண்கள் பலரும் இந்த ஆடையை வாங்கி, அணிந்துகொண்டு தங்கள் ஒளிப்படங்களை சமூக ஊடகங்களில் பகிர்ந்துவருகிறார்கள். இதுவரை பத்தாயிரத்துக்கும் மேற்பட்டோர் #strawberrydress என்ற ஹாஷ்டாக்குடன் தங்கள் ஒளிப்படங்களைப் பகிர்ந்துள்ளார்கள். நியூயார்க்கைச் சேர்ந்த ஆடை வடிவமைப்பாளர் லிரிக்கா மத்தோஷி, இந்த ‘ஸ்ட்ராபெர்ரி மிடி டிரஸ்’ஸை வடிவமைத்திருக்கிறார். இதன் மதிப்பு 500 டாலர் (இந்திய மதிப்பில் ரூ. 37,000).
கடந்த பிப்ரவரி மாதம் இந்த ஆடையை வாங்கிய அமண்டா என்ற ஃபுளோரிடாவைச் சேர்ந்த பெண், தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த ஆடையை அணிந்து தன் ஒளிப்படத்தைப் பகிர்ந்தார். அந்தப் பதிவில் வடிவமைப்பாளர் லிரிக்கா மத்தோஷியையும் இணைத்திருந்தார். அதன்பிறகு, அவர் அந்தப் பதிவையே மறந்துவிட்டார். ஆனால், திடீரென்று சில வாரங்களுக்குமுன், அவரது ஸ்ட்ராபெர்ரி ஆடை ஒளிப்படத்துக்கு லைக்குகள் அதிகரிக்கத் தொடங்கியிருக்கின்றன.
கடந்த இரு வாரங்களில் பல பெண்கள் இந்த ஆடையை வாங்கியிருக்கிறார்கள். குவாரன்டைன் காலத்தில் வீட்டில் ‘கேஷுவல் ஆடை’களை அணிந்து பல பெண்கள் சலிப்படைந்ததுதான் அதற்குக் காரணம். தேவதைக் கதை கதாபாத்திரத்தின் தோற்றத்தை அளிக்கும் விதத்தில், இந்த ஆடை இருப்பதால்தான், தற்போது அது பிரபலமடைந்துள்ளதாகச் சொல்கிறார்கள் வடிவமைப்பாளர்கள். இந்த ஸ்ட்ராபெர்ரி ஆடை வைரல் டிரெண்டு, பெருந்தொற்றுக் காலத்திலிருந்து ஃபேஷன் உலகம் மீண்டுவருவதை உணர்த்துகிறது.