இளமை புதுமை

எம்மி விருதுகள்: கேம் ஆஃப் த்ரோன்ஸ் சாதனை

வாஹினி

அமெரிக்காவின் தொலைக்காட்சித் துறையில் சிறந்து விளங்குவோரைக் கவுரவிக்கும் பொருட்டு ஆண்டுதோறும் சிறந்த தொலைக்காட்சி தொடர்கள், அதில் இடம்பெற்ற கலைஞர்கள் ஆகியோருக்கு எம்மி விருதுகள் வழங்கப்பட்டுவருகின்றன. அகடெமி ஆஃப் டெலிவிஷன் ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ், நேஷனல் அகடெமி ஆஃப் டெலிவிஷன் ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ், இண்டர்நேஷனல் அகடெமி ஆஃப் டெலிவிஷன் ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ் ஆகிய மூன்று நிறுவனங்கள் இணைந்து இந்த விருதுகளை அளித்துவருகின்றன.

67 வது எம்மி விருதுகள் வழங்கப்படும் நிகழ்ச்சி இந்த ஆண்டு லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உற்சாகமாகவும் கோலாகலமாகவும் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் எச்பிஓ தொடரான கேம் ஆஃப் த்ரோன்ஸ் 12 விருதுகளை அள்ளியிருக்கிறது. ஓர் ஆண்டில் இத்தனை விருதுகளை மொத்தமாகப் பெற்ற தொடர் என்ற பெருமையைப் பெற்றிருக்கிறது இது.

நாடகத் தொடரின் சிறந்த நடிப்புக்கான விருதைப் பெற்றிருக்கிறார் ஆஃப்ரிக்க நடிகை வயாலோ டேவிஸ். ஒரு கறுப்பினப் பெண் இந்த விருதைப் பெறுவது இதுவே முதல் முறை. விருதைப் பெற்று அவர் வழங்கிய ஏற்புரையின் போது அனைவரும் எழுந்து நின்று கைதட்டி அவரைக் கவுரவப்படுத்தினார்கள். ஹவ் டூ கெட் அவே ஃப்ரம் எ மர்டர் என்னும் தொடரில் அவர் ஏற்று நடித்த வேடத்துக்காக இந்த விருது அவருக்கு வழங்கப்பட்டிருக்கிறது.

அமெரிக்க நடிகர் ஜான் ஹாமுக்கு இந்த விருது நிகழ்ச்சி மறக்க முடியாதது. ஏனெனில் தொலைக்காட்சித் தொடரின் உலக அளவிலான சிறந்த நடிகர் என்னும் விருதை அவர் இம்முறை பெற்றுள்ளார். இதற்கு முன்னர் ஏழு முறை போட்டியிட்டும் கிடைக்காத விருதை எட்டாவது முறை வென்றெடுத்துவிட்டார் ஜான் ஹாம். ஏஎம்சி தொலைக்காட்சி அலைவரிசையில் ஒளிபரப்பான ‘மேட் மேன்’ தொடரில் அவர் ஏற்று நடித்திருந்த விளம்பர நிறுவன அதிகாரி வேடமே அவருக்கு விருதைப் பெற்றுத் தந்திருக்கிறது.

SCROLL FOR NEXT