இளமை புதுமை

கனவுகளின் மீது ரயில்!

நவீன்

‘பெங்களூருவில் நீங்கள் தடுக்கி விழுந்தால் மரத்தின் மீது மோதுவீர்களோ இல்லையோ… ஒரு மனிதரின் மீது மோதுவீர்கள். நிச்சயம் அவர் ஒரு ஐ.டி.பணியாளராக இருப்பார்’. இது சமீபத்தில் வாட்ஸ் அப்பில் வந்த ஒரு காமெடி. ஆனால் அங்கு முன்பிருந்த அளவுக்கு மரங்கள் இல்லை என்பது டிராஜிடி.

ஒரு காலத்தில் பெங்களூருவை ‘கார்டன் சிட்டி’ என்று அழைத்து வந்தார்கள். காரணம், அத்தனை மரங்கள். காணும் இடமெல்லாம் பச்சை!

வளர்ச்சியும், நுகர்வுக் கலாசாரமும் அதிகரிக்க, இப்போது அது ஒரு மெட்ரோபாலிட்டன் நகரம். இன்று பெங்களூரு ‘சிலிக்கான் சிட்டி’. அந்த மாநகரத்தில் இன்று மரங்கள் தங்களின் இறுதி நாட்களை எண்ணிக் கொண்டிருக்கின்றன. காணும் இடமெல்லாம் கான்கிரீட் மரங்கள்!

கல்லூரியில் பட்டம் வாங்கிய கையுடன் கணினி கற்ற இளைஞர்கள் பலர் தங்கள் கனவுகளைத் துரத்தும் ஸ்டார்டிங் பாயிண்ட் ஆக இருக்கிறது பெங்களூரு.

பெருகிவரும் ஐ.டி.நிறுவனங்கள், அவற்றிடமிருந்து இன்னும் அதிக அளவில் முதலீடுகளைப் பெறுவதற்கு நிறைய வசதிகளைச் செய்து தரவேண்டிய கட்டாயத்தில் இருந்தது பெங்களூரு நிர்வாகம்.

வேகமான இந்த உலகில், வர்த்தக நிறுவனங்களின் வேகத்துக்கு ஏற்ப வேகமான போக்குவரத்து மிக அத்தியாவசியத் தேவையாக இருந்தது. அதனை நிறைவேற்ற வந்தது ‘மெட்ரோ ரயில்’. அந்த மெட்ரோ ரயில், பெங்களூரு மெட்ரோபாலிட்டனை எப்படியெல்லாம் உருமாற்றியிருக்கிறது என்பதைச் சொல்லும் படமே ‘அவர் மெட்ரோபோலிஸ்!’

மெட்ரோ ரயில் திட்டத்துக்காக வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கட்டிடங்கள் இடிக்கப்பட்டன. சாலை விரிவாக்கத்துக்காக விவசாயப் பல்கலைக்கழகத்தில் இருந்த காடு அழிக்கப்பட்டது. அரிய வகை மரங்கள் வெட்டப்பட்டன. அதனால் பல மாணவர்களின் ஆய்வு கேள்விக்குறி யானது. குடிசைகள் அகற்றப்பட்டன. இந்த நடவடிக்கைகளைத் தடுத்தவர்கள் தாக்கப்பட்டார்கள். வழக்கு தொடுத்தவர்கள் அலைக்கழிக்கப் பட்டார்கள். எதிர்க்கத் திராணியற்றவர்கள் தூக்கி வீசப்பட்டார்கள்.

“2008-ம் ஆண்டில் மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் வேகமாக நடந்து கொண்டிருந்தன. அப்போதிருந்து அதன் முக்கிய நிகழ்வுகளை நாங்கள் படம் பிடித்துவந்தோம். ஆரம்பத்தில் ஆவணப்படம் எடுக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லை. ஆனால் அதன் பிறகு நகரில் ஏற்பட்ட மாற்றங்கள் முக்கியத்துவம் வாய்ந்தவையாக இருந்தன. அவற்றையும் படம் பிடித்து தொகுத்துப் பார்த்தபோது, அது ஓர் ஆவணப் படமாக மாறியிருந்தது. 2008-ம் ஆண்டு முதல் 2013 ஆண்டு வரையில் பெங்களூருவில் ஏற்பட்ட மாற்றங்கள்தான் இந்தப் படம்” என்கிறார் இந்தப் படத்தை இயக்கியவர்களில் ஒருவரான கவுதம் சோந்தி. இன்னொருவர் உஷா ராவ்.

இந்தப் படம் பூசன், துபாய் மற்றும் ட்ராம்சோ ஆகிய சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டுள்ளது.

கடந்த வாரம் சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனமும், ஏசியன் காலேஜ் ஆஃப் ஜர்னலிசமும் இணைந்து இந்தப் படத்தைத் திரையிட்டிருந்தன.

இந்தப் படத்தைப் பார்த்த இளைஞர்கள் சிலரிடம் கருத்து கேட்டோம். அவர்களில் ஒருவர் வினிதா. இவர் பெங்களூருவில் மூன்று வருடம் வசித்தவர்.

“நிச்சயமாக, படத்தில் காட்டப்பட்ட பெங்களூருவுக்கும், நான் வசித்தபோது இருந்த பெங்களூருவுக்கும் நிறைய வேறுபாடுகள் இருக்கின்றன. அப்போது நிறைய பூங்காக்கள், மரங்கள் இருந்தன. இப்போது மாசுபாடுதான் அதிகமாக இருக்கிறது” என்றார்.

“கிராமத்து மக்களை விட, நகரத்தில் உள்ள மக்கள்தான் அரசுக்கு முக்கியமானவர்களாகத் தெரிகிறார்களா என்ற கேள்விதான் இந்தப் படத்தைப் பார்த்தபோது எனக்கு எழுந்தது” என்கிறார் சுஷ்மிதா.

இன்னொரு இளைஞரான நக்‌ஷத்ரா பான் கூறும்போது, “நான் கொல்கத்தாவிலிருந்து வருகிறேன். அங்கு நிலத்துக்குக் கீழே ரயில் செல்வதுபோல வடிவமைத்துள்ளார்கள். மக்களின் வசிப்பிடங்களை இடித்துத் தரைமட்டமாக்காமல், நிலத்துக்கு அடியில் செல்வது போல மெட்ரோ ரயிலை அமைத்திருக்கலாம். எனினும் நிச்சயமாக, இதுபோன்ற வசதிகள் எல்லாம் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவே செய்யும்” என்றார்.

ஆனால், சாப்ட்வேர் சிட்டி, மெட்ரோ ரயில் பயணம், வெஸ்டர்ன் கலாசாரம் என்ற பல கனவுகளுடன் பெங்களூருவுக்கு வரும் இளைஞர்களின் எண்ணம் இந்தப் படத்தைப் பார்த்த பிறகு மாறுமா என்று கேட்டதற்கு வேறு வேறு பதில்கள் கிடைத்தன.

“மிடில் கிளாஸ் குடும்பத்தில் இருந்து வரும் இளைஞர்கள்தான் பெங்களூரு நகரத்தின் மீது பெரும் மயக்கம் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் இந்தப் படத்தை பார்த்தால் அந்த மயக்கம் தெளியும்” என்று சுஷ்மிதா சொல்ல… “அதெல்லாம் இல்லை. இன்றைக்கு இளைஞர்கள் சென்டிமென்டானவர்கள் கிடையாது. அதனால் எப்போதும்போல் இந்த நகரத்தின் மீது அவர்களுக்கு ஒரு மோகம் இருந்துகொண்டேதான் இருக்கும்” என்றார் நக்‌ஷத்ரா பான்.

எது எப்படியோ, அடுத்த முறை சென்னையிலோ, பெங்களூருவிலோ அல்லது வேறு எங்கோ நீங்கள் மெட்ரோ ரயிலில் செல்ல நேர்ந்தால் ஒன்றை மட்டும் நினைவில் கொள்ளவும்… சாமானியர்களின் கனவுகள் மீதுதான் அந்த ரயில் ஓடிக்கொண்டிருக்கிறது!

SCROLL FOR NEXT