இளமை புதுமை

நண்பர்களுக்கு என்ன தரலாம்?

செய்திப்பிரிவு

இந்தியாவில் ஒவ்வோர் ஆண்டும் ஆகஸ்ட் முதல் ஞாயிற்றுக்கிழமையில் சர்வதேச நண்பர்கள் தினம் கொண்டாடப்படுகிறது. காதலர் நாள்போல் பல நாடுகளில் நண்பர்கள் நாளுக்கும் பரிசுகளைப் பகிர்ந்துகொள்வதை வாடிக்கையாக வைத்திருக்கிறார்கள். அந்த வகையில் என்னென்ன பரிசுகளை நண்பர்கள் பகிர்ந்துகொள்ளலாம்?

காதலர் நாளோ நண்பர்கள் நாளோ இரண்டும் சாக்லெட் இல்லாமல் தொடங்குவதில்லை. உங்கள் நெருங்கிய நண்பர்களுக்கு விதவிதமான வண்ணங்களில் சாக்லெட்டுகளை வாங்கிக்கொடுத்து, நண்பர்கள் நாளை இந்த வாரம் முழுவதும் கொண்டாடலாம்.

உங்கள் நண்பர் புத்தகப் புழுவாக இருந்தால், நல்லதொரு புத்தகத்தைப் பரிசாக வழங்கலாம். புத்தகம் வைக்கும் அலமாரியையும்கூட பரிசாகக் கொடுக்கலாம். அதைப் பார்க்கும்போதெல்லாம் உங்கள் நண்பருக்கு உங்கள் ஞாபகம் கண்டிப்பாக வரும்.

இந்த கரோனா காலத்தில் புத்தகம் எங்கே வாங்கிக்கொடுப்பது என்று என்று நினைப்பவரா நீங்கள்? அப்படியானால், இணையத்தில் நூல்களைப் படிக்க, உங்கள் நண்பருக்காக ஒரு மாத சந்தாவைச் செலுத்தி அவரை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தலாம்.

பரிசு என்றாலே பலருக்கும் நினைவுக்கு வருவது உடைகள்தான். அது அரதப் பழசான பரிசு என்றாலும், உங்கள் நண்பருக்கு வாங்கித் தரும்போது அது நினைவு அடுக்குகளில் ஞாபகத்தை கிளறிக்கொண்டேயிருக்கும் அல்லவா? ஒரு வேளை டிசர்ட் வாங்கிக்கொடுத்தால், நட்பைப் பற்றிய வாசகங்கள் இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள்.

நட்பு எப்போதும் வளர்ந்துகொண்டே இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள், பூந்தொட்டியில் பூச்செடியை வைத்து பரிசாகக் கொடுக்கலாம். பூச்செடிக்குத் தண்ணீர்விட்டு வளர்க்கும்போது, உங்கள் நட்பும் ஆழமாக வளரும்.

SCROLL FOR NEXT