தமிழின் தீவிர எழுத்தாளர்கள் இலக்கியத்தை எவ்வளவு ஆழமாக நேசிக்கிறார்களோ அதைவிட ஆழமாக அதைச் சுவாசிக்கும் இளைஞர் கூட்டம் ஒன்று உருவாகியிருக்கிறது. அவர்கள் ஆக்ஸிஜன் இல்லாத சூழலில்கூட வாழ்ந்துவிடுவார்கள். ஆனால், இலக்கியம் இல்லாத இடத்தை எட்டிக்கூடப் பார்க்க மாட்டார்கள்.
அப்படியொரு தூய இலக்கிய வாசிப்பை நடத்தியபின்பு கிடைத்த இலக்கிய இன்பத்தைப் பிறருக்கும் தர வேண்டும் என்னும் நினைப்பில் அதை எல்லோருக்கும் ஃபேஸ்புக்கிலும் இன்ஸ்டாகிராமிலும் ட்விட்டரிலும் பகிர்கிறார்கள். யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் எனும் அந்தப் பெரிய மனசு இருக்கிறதே அதற்கு மில்லியன் டாலர் லைக். அப்படியொரு பவர்ஃபுல் பகிர்வுதான் 'டெம்பிள் மங்கி' யூடியூப் அலைவரிசையின் ‘ஒரு வடையின் வரலாறு’ வீடியோ.
ரமேஷ் என்பவர் எழுதிய ‘ஒரு வடையின் வரலாறு’ என்னும் நூலைப் படித்துவிட்டு அதன் மூலம் பெற்ற கனமான இலக்கிய அனுபவத்தை எளிய சொற்களில் சுவையாக எடுத்தியம்புகிறார் இந்தக் கதைசொல்லி விஜய் வரதராஜ். ‘வடையின் வரலாறு கதை' நாமெல்லாம் அறிந்த பாட்டி வடை சுட்ட கதைதான். ஆனால், ரமேஷ் அதன் கூறுமுறையால் நவீன வாழ்வின் சிக்கல்களை அந்த வடை மீதும் பாட்டி மீதும் நரி மீதும் ஏற்றிக்கூறும் அழகு வாசகர்களைச் சொக்கவைக்கிறது. அந்தச் சொக்கலின் சுகத்தை அப்படியே ஒவ்வொரு சொல்லிலும் ஏற்றி சுவாரசியப் படுத்தியிருக்கிறார் இந்தக் கதை சொல்லி.
ஒரு வீட்டைத் திறந்து வாடிக்கையாளருக்குக் காட்டும் வீட்டுத் தரகர் போல் கதையின் ஒவ்வொரு படிமத்தையும் அக்கறையுடன் திறந்துகாட்டுகிறார் கதைசொல்லி. சுவையான மண்டித்தெரு பரோட்டாவை இழை இழையாகப் பிரித்து அதில் காரமான சால்னாவை ஊற்றிச் சாப்பிடும்போதும் கிடைக்கும் இன்பத்தைத் தந்துவிடுகிறார் கதைசொல்லி.
நவீன இலக்கியம், தற்காலச் சுற்றுச்சூழல் புரிதல் எனப் பல தளங்களில் பயணப்பட்டு ‘ஒரு வடையின் வரலாறு’ கதையின் பெருமையைக் கதைசொல்லி எடுத்துக்கூறும் விதம் அலாதியானது. இப்படி ஒவ்வொரு கதையும் சமூக ஊடகங்களில் அக்கு வேறாகவும் ஆணி வேறாகவும் பிரித்து மேயப்படும்போதும் இலக்கியம் வானை எட்டிப்பிடிக்கக்கூடும். இந்தக் காணொலி உங்கள் மூளையைப் பரபரப்பாக்கும். இலக்கிய வாசிப்பாளர்களுக்கும் இலக்கிய நேயர்களுக்கும் இது தரும் இன்பம் ஈடுஇணையற்றது.
எங்கோ இருக்கும் ஓர் எழுத்தாளர் தன் உதிரத்தையும் உயிரையும் கலந்து உணர்வுபூர்வக் கதையாக்குகிறான். அதைப் படித்த இந்தக் கதைசொல்லி அணு அணுவாகக் கதையை ரசித்து தனது அனுபவம் மற்றவருக்கும் கிடைக்க வேண்டும் என்னும் பேரார்வத்தில் அதை ஒரு வீடியோவாகப் பதிவிட்டிருக்கிறார். இந்தக் காணொலியைக் காணுங்கள்; பேரானந்தம் பெறுங்கள்.
காணொலியைக் காண: https://youtu.be/QttGI_UUf4Y