இளமை புதுமை

கண்டுபிடிப்பில் அசத்தும் மாணவி

என்.சுவாமிநாதன்

நாகர்கோவில் நகரின் டதி ஸ்கூல் சாலையில் உள்ள அந்த வீடு முழுவதும் 500-க்கும் மேற்பட்ட கோப்பைகளும் ஷீல்டுகளும் நிறைந்திருக்கின்றன.

பள்ளி, கல்லூரிகளில் பேச்சு முதல், தனி நபர் நடிப்புவரை பல போட்டிகளில் கலந்துகொண்டு பரிசுகளைக் குவித்துள்ளார் ஆனி ஸ்டெபி சிட்னி (24). நாகர்கோவில் லயோலா பொறியியல் கல்லூரியில் எம்.இ. படித்துவரும் இவர் அண்மையில் புதிய கண்டுபிடிப்பு ஒன்றையும் செய்து அசத்தியுள்ளார்.

சர்வதேச அளவிலான பொறியியல் வல்லுநர்களுக்கான மாநாடு அண்மையில் சென்னையில் நடைபெற்றது. இதில் பங்கேற்க இந்திய அளவில் 36 பொறியியல் மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டிருந்தார்கள். அவர்களில் ஆனி ஸ்டெபி சிட்னியும் ஒருவர். தொடர்ந்து இந்திய அளவில் நடந்த இந்த ஆய்வுக் கட்டுரை சமர்ப்பிக்கும் போட்டியில் ஆனி ஸ்டெபி சிட்னி முதல் இடம் பிடித்துள்ளார்.

இவரின் கண்டுபிடிப்புதான் என்ன?

கள்ள ஓட்டைக் கட்டுப்படுத்தும் கண்டுபிடிப்பை இவர் செய்துள்ளார். பொதுவாகவே தேர்தல் சமயத்துல வீடு வீடாகப் போய் பூத் சிலிப் கொடுப்பார்கள். ஆனால் இவரது கண்டுபிடிப்பில் ஒவ்வொரு வாக்காளருக்கும் தனித் தனியா ஒரு யூசர் நேம், பாஸ்வேர்ட் கொடுத்துருவார். அந்த பாஸ்வேர்ட் தெரிந்தால்தான் ஓட்டுப் போட முடியும். கம்யூட்டரில் ஜிமெயில் ஓப்பன் பண்ற மாதிரிதான். இன்று கிராமங்கள் வரைக்கும் செல்போன் போய்ச் சேர்ந்திருக்கிறது. அடித்தட்டு மக்களுக்கும் டெக்னாலஜி தெரிகிறது. அதனால் இதை புரமோட் பண்றதுகூட எளிமையான விஷயம்தானாம். இந்த முறையில ஒவ்வொரு பூத்துக்கும் ஒரு கவுண்டிங் அட்மினிஸ்ட்ரேட்டர் இருப்பார். அவர் தேர்தல் முடிந்த உடனே எந்தக் கட்சிக்கு எவ்வளவு ஓட்டு கிடைத்துள்ளது என எண்ணிச் சொல்லிவிடுவார்.

இதே போல மாவட்டத்துக்கு ஒரு அட்மினிஸ்ரேட்டர் இதை மானிட்டர் பண்ண முடியும். இந்த முறையில தேர்தல் முடிவையும் ஒரே நாளில் அறிவிக்க முடியும். அதே மாதிரி ஓட்டு போடும்போது பாஸ்வேர்டை யூஸ் பண்றதுக்கும் கால நிர்ணயம் கொடுத்துவிடுவார்கள். அதனால் வேறு யாராவது அடுத்தவரின் பாஸ்வேர்டைப் பயன்படுத்த முயன்றால் கண்டுபிடித்துவிடலாம்.

“இதனால் கள்ள ஓட்டையும் அறவே தடுத்துட முடியும். உலகம் போகுற வேகத்துல வாக்காளருக்கு ஒவ்வொரு பாஸ்வேர்ட் கொடுக்குறதும் சுலபமான விஷயம்தான்” என்று உற்சாகத்துடன் சொல்கிறார் ஆனி.

SCROLL FOR NEXT