என் வயது 22. பொறியியல் படித்துள்ளேன். என்னை யாராவது ஏதாவது தவறாகக் கூறினாலோ திட்டினாலோ மிகவும் கஷ்டப்படுவேன். எளிதில் உணர்ச்சிவசப்படக்கூடியவள். சின்ன விஷயத்தைக்கூடத் தாங்க இயலாது. அதையே நினைத்து மனதைப் போட்டுக் குழப்பிக்கொண்டே இருப்பேன்.
என் தந்தை என் மீது பாசம் இல்லாதவர். என்னிடம் ஆசையாகப் பேசியதே இல்லை. எங்கும் வெளியேயும் கூட்டிப்போக மாட்டார். என் தாய், தம்பியிடமும் அப்படித்தான் நடந்துகொள்வார். ஆனால் எங்களுக்குத் தேவையானவற்றை வாங்கித் தருவார். அத்துடன் தன் கடமை முடிந்தது என்பது போல நடந்துகொள்வார்.
அவருடைய மூன்று தங்கைகளிடமும், தாய், தந்தையிடமும் நன்றாகப் பேசுவார். அனைத்தையும் பகிர்ந்துகொள்வார். எங்களை மூன்றாம் மனிதர்கள் போல் நடத்துவார். உறவினர்கள் அனைவரும் நல்ல அந்தஸ்தில் உள்ளவர்கள். எங்களை அவ்வளவாக மதிக்க மாட்டார்கள்.
கல்லூரியில் படித்தபோது சந்தோஷமாக இருந்தேன். வழக்கம்போல் காதல் எனும் வலையில் வீழ்ந்தேன். முதலில் மறுத்தபோதும் தந்தையிடம் கிடைக்காத அன்பு கிடைத்ததால் மறுக்க முடியவில்லை. எனது படிப்பை அவர் ஊக்கப்படுத்தினார். நானும் நன்றாகப் படித்தேன். வாழ்க்கையில் ஒரு பிடிப்பை அவர் ஏற்படுத்தினார். நாங்கள் இருவரும் ஒரே சாதியைச் சேர்ந்தவர்கள்தான். அவருக்குத் தந்தை இல்லை. தாய் வருமானத்தில் குடும்பம் நடக்கிறது. அவருக்கு ஒரு தம்பியும் தங்கையும் உள்ளனர். தாயைக் கஷ்டப்படுத்தக் கூடாது என்பதால் படிக்கும்போதே மாலையில் வேலைக்குச் செல்வார். என் மீதும் அதிக பாசம் கொண்டவர்.
கல்லூரி முடித்த பின்னர், வீட்டில் எப்படித் திருமணத்துக்கு ஒப்புதல் வாங்குவது என்று ஒரே குழப்பமாக உள்ளது. என் தந்தையோ என்னை வெளியில்கூட அனுப்ப மாட்டார். என் தந்தை. ஆனால் எனக்கு வேலைக்குப் போக வேண்டும் என்ற விருப்பம் உள்ளது. அரசுத் தேர்வுகளுக்கான வகுப்புகளுக்குச் சென்றுகொண்டிருக்கிறேன்.
அவர் தனியார் நிறுவனத்தில் வேலையில் இருக்கிறார். வீட்டுக்கு வந்து பெண் கேட்பதாக ஏற்கனவே கூறியிருக்கிறார். என் தந்தையோ, அவருடைய தந்தையும் தங்கைகளும் என்ன கூறுவார்களோ அதைத் தான் செய்வார். காதலுக்கு எங்கள் வீட்டில் ஆதரவு கிடைக்குமா எனப் பயமாக உள்ளது. இன்னும் மூன்று மாதத்தில் எனக்கு வரன் பார்க்கப்போவதாகப் பேசுகிறார்கள். வீட்டில் எப்படிச் சம்மதம் வாங்குவதென்று எனக்குத் தெரியவில்லை. காதலரிடம் கூறினால் நான் பார்த்துக்கொள்கிறேன் என்கிறார். எனக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. இப்போது நான் என்ன செய்ய வேண்டும்?
தோழி, கவலைப்பட எதுவுமே இல்லையே என்று நீங்கள் கவலைப்படுவீர்கள் போலும்! உங்கள் காதலர் அதிகம் பேசாதவரானாலும், ஒரே வாக்கியத்தில் சொல்லிவிட்டார், ‘நான் பார்த்துக்கொள்கிறேன்’ என்று. அவர் தெளிவாகச் சிந்திப்பவராக, தனக்கு எது முக்கியம்/ தேவை என்று அலசிய பின்பே தீர்மானம் எடுப்பவராகத் தென்படுகிறார். உணர்ச்சி வசப்படும் உங்களை ‘பேலன்ஸ்’ செய்ய, அவர் இருப்பதால் வாழ்க்கை ஓடம் புயலே வந்தாலும் தத்தளிக்காமல் போகும். அப்பாவிடம் கிடைக்காத அன்பைக் காதலரிடம் கண்டீர்கள் என்றால் எவ்வளவு ஏங்கியிருப்பீர்கள்!
அப்பா தனக்குத் தெரிந்த விதத்தில் பாசத்தைக் காட்டியிருக்கிறார். கண்டிப்பாக இருப்பதுதான் உங்களை நல்வழிப்படுத்தும் என்று நம்பியிருப்பார் போலும்; அதனால்தான் அவரிடம் எதையும் பேச பயமும், தயக்கமும் இருக்கின்றன. வளரும்போது பாராட்டுகளே கிடைக்காமல், குறைகளே சுட்டிக்காட்டப்பட்டதால் உங்கள் சுயமதிப்பு அடிபட்டிருக்கிறது.
‘நான் சரியில்லை’ என்ற எண்ணம் மேலோங்க, அதைப் போக்க பிறருடைய பாராட்டுகளை எதிர்பார்க்க ஆரம்பித்திருக்கிறீர்கள். அதனால்தான் சின்ன விஷயத்தைக்கூடத் தாங்க இயலாது அதைப் பற்றியே எண்ணி, எண்ணிப் புழுங்குகிறீர்கள். அதாவது பிறருடைய பாராட்டை நம்பி இருக்கிறது உங்களுடைய சுயமதிப்பு!!
நீங்கள் ஒரு ஆயிரம் ரூபாய் நோட்டு என்று கற்பனை செய்துகொள்ளுங்கள். ஆயிரம் ரூபாய் நோட்டை யாராவது கசக்கினாலும் அதனுடைய மதிப்பு குறையுமா? அதுபோல உங்களுடைய உண்மையான மதிப்பு உங்களுக்குத் தெரிந்திருந்தால், யாருடைய பேச்சும் நடத்தையும் உங்களைப் பாதிக்காது! உங்களது மதிப்பை நீங்கள் உணர, உங்கள் நல்லவற்றைக் காதலரிடமும், நண்பர்களுடமும் கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள். பிறர் சொல்வதில் நியாயம் இருந்தால், உங்களை மாற்றிக் கொள்ளத் தயங்காதீர்கள்.
நான் டிப்ளமோ படித்துள்ளேன். என் தந்தை இறந்துவிட்டார். ஆகவே குடும்பச் சூழ்நிலை காரணமாகவும் வேறு வேலை கிடைக்காததாலும் மூட்டை தூக்கும் தொழில் செய்கிறேன். இது போகத் தனியாக வீடுகளுக்கு ஆர்வோ வாட்டர் சப்ளை செய்கிறேன். பள்ளிப் பருவத்தில் ஒரு பெண்ணைக் காதலித்தேன். என் காதலை அவளும் ஏற்றுக்கொண்டாள். இருவரும் வெவ்வேறு சாதியைச் சார்ந்தவர்கள். அது பற்றிப் பேசும்போது, அவள் ‘சாதி, பணம் எல்லாம் முக்கியமில்லை, நீதான் முக்கியம்’ என்று கூறினாள். ஆனால் அவள் வீட்டிலுள்ளோர் என்னை மிரட்டினார்கள். பிரச்சினை அதிகமானது. எனது படிப்பில்கூடக் கவனம் செலுத்த முடியாத சூழல் உருவானது. அவளும் நானும் ஏழு வருடங்கள் காதலித்தோம். பிறகு அவள் எம்.பி.பி.எஸ். படித்தாள்.
அப்போது அவள் ‘என்னை மறந்துவிடு’ எனச் சாதாரணமாகச் சொல்லிவிட்டாள். ஆனால் என்னால் அவளை மறக்க முடியவில்லை. ஒருமுறை போனில் அவளைத் தொடர்புகொண்டேன். அப்போது, ‘உனது தகுதி என்ன, எனது தகுதி என்ன?’ என்று கேட்டு மனதை நோகடித்துவிட்டாள். அது முதல் மனம் அதையே சிந்திக்கிறது. எந்த வேலையும் ஓடவில்லை. மனநோயால் பாதிக்கப்பட்டவன் போல் ஆகிவிட்டேன். சில வேளைகளில் தற்கொலை செய்து கொள்ளலாமா என்றுகூடத் தோன்றுகிறது. இந்த வேதனையில் இருந்து நான் எப்படி மீள்வது?
நீங்கள் கடமையுணர்வு, உழைப்பு, நேர்மை, ‘சின்சியரிட்டி’ ஆகிய உயர்ந்த குணங்கள் உள்ளவராகத் தெரிகிறீர்கள். மனமுதிர்ச்சி அடையாத வயதில் காதல் அரும்பியதால் ஏழு வருடங்களும் காதல் எனும் உணர்வின் கொந்தளிப்பில் திளைத்திருக்கிறீர்களே ஒழிய, நீங்கள் பகுத்தறிவோடு சிந்திக்கவில்லை!
உங்கள் காதலி உணர்வுகளை ஒதுக்கிவைத்துவிட்டு சிந்தித்ததால்தான் நீங்கள் இருவரும் மணம் செய்துகொண்டால் வரக்கூடிய பிரச்சினைகளை ஊகித்து, ஒத்துவராது என்று புரிந்து கொண்டுவிட்டார். அவருக்குப் புரிந்ததும் உங்களிடம் நல்ல விதமாகப் பேசி, விலகியிருக்கலாம். யோசித்துப் பாருங்கள் நீங்களும் உங்கள் காதலியும் ஒரு மணி நேரமாவது சேர்ந்து இருக்க முடியுமா? பேச என்ன இருக்கும்? படிப்புடன் சேர்ந்து, அறிவின் வீச்சு, கண்ணோட்டங்கள், நம்பிக்கைகள், பழக்க வழக்கங்கள் எல்லாமே மாறுபடும். ‘செட்’டே ஆகாத அளவுக்கு விலகிவிட்டீர்கள்.
விடலைப் பருவத்தில் வாழ்க்கைத் துணையைத் தேடிக்கொண்டால் இதுதான் நடக்கும். வளர, வளர இருவருமே மாறுவதால், எதிர்பாராத அளவுக்கு ஒத்துவராமல் போய்விடும். அவரைப் பற்றிய நினைப்பு வாட்டினால், ‘ஒருமணி நேரம்கூட சேர்ந்து இருக்க முடியாத ஒருத்தியுடன் வாழ்நாட்களை எப்படிக் கடத்த முடியும்?’ என்று சொல்லிக்கொள்ளுங்கள். ‘நல்லவேளை தப்பித்தோம்’ என்று தோன்றும்!
தற்காலிகமான ஒரு பிரச்சினைக்குத் தற்கொலையை ஒரு நிரந்தரத் தீர்வாக ஏன் கொள்கிறீர்கள்? உயிரைப் பலி கொடுக்கும் அளவுக்குக் காதலியை உயர்த்த வேண்டுமா? சில காலம் கடத்துவதுதான் கடினம். பின் இந்த நிலையைத் தாண்டி வருவீர்கள். ஒரு நாளில் எதையும் யோசிக்கவே நேரம் இல்லாதபடி, வேலைகளை அடுக்கி வைத்துக்கொள்ளுங்கள். மேலே படியுங்கள். வாழ்க்கைத் தரத்தை உயர்த்த அது உதவும். கடினமாக உழைத்த அந்த நபரை உயிர்த்தெழச் செய்யுங்கள்.
உளவியல் ஆலோசகர் பிருந்தா ஜெயராமனுடன் உரையாடலாம். உங்கள் கேள்விகள், எண்ணங்கள், குழப்பங்கள், உறவுச் சிக்கல்களைப் பகிர்ந்துகொள்ளுங்கள்.
முகவரி: இளமை புதுமை, தி இந்து, கஸ்தூரி மையம்,
124, வாலாஜா சாலை, சென்னை-600 002.
மின்னஞ்சல்: ilamaiputhumai@thehindutamil.co.in