ஜி.எஸ்.எஸ்.
“கண்ணுக்குத் தெரியாத கரோனா வீட்டில் அடைச்சு வச்சிடுச்சு. சாப்பாடு, தூக்கம்தான் வேளாவேளைக்கு நடக்குது’’ என்று அலுத்துக்கொள்பவரா நீங்கள்?
உணவு, உறக்கத்தைத் தவிர, அடைந்து கிடக்கும் நாட்களில் செய்வதற்கு ஏராளமான வேலைகள் உள்ளன. இவற்றைப் பற்றி யோசித்துச் செயல்படவில்லையென்றால் ஊரடங்கு முடிந்து வழக்கமான அலுவல்களுக்கு மாறும்போது ‘அடடா, வீட்டில் இருந்த காலத்தில், இதையெல்லாம் கவனிக்காமல் போனோமே’ என்று வருத்தப்பட நேரலாம். அப்படி என்னென்ன வேலைகளைச் செய்யலாம்? சில எடுத்துக்காட்டுகள்:
ஒரு சிறு பெட்டியில் அளவில் சிறிய ஆவணங்களைப் போட்டு வைக்கலாம். சில வீடுகளில் ஆதார் அட்டை ஒருபுறம், பான் கார்டு மறுபுறம், அலுவலக அடையாள அட்டை ஒருபுறம், ரேஷன் கார்டு இன்னொருபுறம் என்று சிதறிக்கிடக்கும். இவற்றில் எதை வேண்டுமானாலும், தேட வேண்டி வரலாம். இவற்றையெல்லாம் ஒரே பெட்டியில் போட்டு வைத்தால் தேடும் நேரம் குறையும்.
சில ஆவணங்களை நகலெடுக்கும்போது அவசரத்துக்கு உதவும் என்று கூடுதல் பிரதிகளை எடுத்து வைத்திருப்போம். ஆனால், தேவை ஏற்படும்போது அவை சட்டென்று கையில் சிக்காது. மீண்டும் பிரதி எடுப்போம். இதைத் தவிர்க்க இதுவரை எடுத்துள்ள அத்தனை நகல் பிரதிகளையும் சேமித்து, ஒரே குறிப்பிட்ட இடத்தில் வைக்கலாமே.
வங்கியில் உள்ள உங்கள் நிரந்தர வைப்புநிதி, நிறுவனப் பங்குகள் போன்றவற்றின் விவரங்களைக் கணினியில் பதிந்துவைத்துக்கொள்வது நல்லது. எவற்றிலாவது நாமினேஷன் கொடுத்திருக்கத் தவறியிருந்தால் அதைச் சரிசெய்து கொள்ள வேண்டும்.
வீட்டில் உள்ள அனைவருக்கும் ஆயுள் காப்பீடு எடுத்திருக்க வாய்ப்பு உண்டு. சிலர் ஒன்றுக்கும் மேற்பட்ட காப்பீடுகளை எடுத்திருப்பீர்கள். ஒவ்வொரு இன்சூரன்ஸ் பாலிசியின் மேலுறையிலும் நீங்கள் செலுத்த வேண்டிய பிரிமியம், அதை என்றைக்குச் செலுத்த வேண்டும், எப்போது அந்த பாலிசி முடிவுக்கு வருகிறது என்பது போன்ற விவரங்களை எழுதிவைத்தால் பின்னர் அவற்றைக் கையாளுவது, உரிய தேதிகளில் பிரீமியம் செலுத்துவது வசதியாக இருக்கும்.
சொந்த வீடு இருந்தால், அதற்கான ஆவணங்களை வரிசைப்படுத்தித் தெளிவாக வைத்துக்கொள்ளுங்கள். அவற்றுக்கான ஒரு பட்டியலையும் உருவாக்குங்கள்.
வீட்டில் அதிக நபர்கள் இருந்தால் அவர்களுடைய பாஸ்போர்ட் அளவு ஒளிப்படங்களை எல்லாம் ஒரே இடத்தில் வைத்தால் தேவைப்படும்போது தேட வேண்டிய அவசியம் இருக்காது. சொல்லப்போனால் வீட்டின் ஒவ்வோர் உறுப்பினருக்கும் ஒரு சிறு உறையை ஒதுக்கி அவரவருடைய ஒளிப்படங்களை அந்தந்த உறைக்குள் வைத்துவிடலாம். உள்ளே யாருடைய ஒளிப்படங்கள் உள்ளன என்பதையும் அந்த உறைகளின் மேல் குறித்து வைக்கலாம்.
சிலரது வீடுகளில் குடும்ப ஒளிப்படங்கள் சிதறிக்கிடக்கும். அவற்றை ஒழுங்குபடுத்தி ஆண்டுவாரியாக அடுக்கலாம். ஆங்காங்கே சிறு குறிப்புகளை எழுதி வைத்தால், பின்னர் அவற்றைப் படிக்கும்போது சுவாரசியமாக இருக்கும்
அவசரம் என்றால் யார் யாரையெல்லாம் நாம் தொடர்புகொள்ள வேண்டியிருக்குமோ அவர்களுடைய பெயர்கள், கைபேசி/தொலைபேசி எண்களை ஒரு பட்டியலிட்டு, ஏதாவது அறைக்கதவின் பின்புறமாக ஒட்டிவைப்பது நல்லது. இந்தப் பட்டியலில் மருத்துவர், எலெக்ட்ரீசியன், ஏ.சி. சர்வீஸ் செய்பவர், வீட்டுப் பணியாளர், தொலைக்காட்சி பழுதுபார்ப்பவர், பிளம்பர் போன்ற பலரும் இடம்பெறலாம்.
பல வீடுகளில் மின்னணுப் பொருட்கள் நிறைய சேர்ந்துவிட்டிருக்கும். ஒன்றுக்கும் மேற்பட்ட ஹெட்போன், வயர், மவுஸ், பென்டிரைவ் போன்றவை காணப்படுகின்றன. இவை அனைத்தையுமே ஒரு குறிப்பிட்ட இடத்தில் வைத்தால் தேவைப்படும்போது கண்டுபிடிப்பது எளிதாக இருக்கும்.
தொலைபேசியில் நிறைந்து கிடக்கும் தேவையற்ற, காலாவதியான தகவல்கள், வீடியோக்களை டெலீட் செய்யுங்கள்.
வீட்டில் இருக்கும்போது சில வேலைகளை செய்ய முடியாது, ஊரடங்கு முடிந்த பிறகு நிலைமை ஓரளவு சரியான பிறகுதான் செய்ய வேண்டியிருக்கும். அப்படிப்பட்ட வேலைகளை ஒரு நோட்டுப் புத்தகத்தில் குறித்து வைத்துக்கொள்ளுங்கள்.
மிக முக்கியமாக நீங்கள் செய்ய வேண்டிய இன்னொன்று உண்டு. வீட்டில் தேவையில்லாத பொருட்களை எல்லாம் இனம் கண்டுகொண்டு, அவற்றைப் பிரித்து வைப்பதற்கு இது நல்ல வாய்ப்பு. அவற்றைத் தேவைப்படுபவர்களுக்குக் கொடுங்கள். வீட்டிலும் இடம் மிச்சமாகும். மனதுக்கும் நிறைவு கிடைக்கும்.