எல். ரேணுகா
மக்களை அச்சுறுத்தும் பேரிடர் நிகழும் போதெல்லாம் நிஜ நாயகர்களாகக் களத்தில் இளைஞர்களும் நிற்கிறார்கள். இந்த கரோனா காலத்திலும் அது வெளிப்பட்டிருக்கிறது. சாலையோரம் வசிக்கும் ஏழைகளுக்கு உணவுப் பொட்டலங்கள் வழங்குவது முதல் மருத்துவமனைகளில் ரோபாட் உதவி, ஊரடங்கில் ட்ரோன் உதவி என நவீனத் தொழில்நுட்பக் கருவிகளை உருவாக்கி, அவற்றின் மூலமாக கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் பணியில் இளைஞர்கள் பங்காற்றி வருகிறார்கள்.
உதவும் ரோபாட்
நம் பக்கத்தில் உள்ளவர் இருமினாலோ தும்மினாலோ அவர் கரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பாரோ, அவரிடமிருந்து நமக்கு நோய் தொற்றிவிடுமோ என்று அச்சப்படும் சூழ்நிலையில் ஒவ்வொருவரும் இருக்கிறோம். ஆனால், இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களுடன் நாள்தோறும் தொடர்பில் இருக்கும் மருத்துவர்கள், செவிலியர்களின் நிலை எவ்வளவு கடினமானது? இந்த நெருக்கடியான சூழ்நிலையில் மருத்துவப் பணியாளர்கள், கரோனா நோயாளிகளுக்கு இடையிலான சந்திப்பைக் குறைக்கும் வகையில் மருந்து, உணவு போன்ற அடிப்படை வேலைகளைச் செய்கிறது ரோபாட். இந்த ரோபாட்களை திருச்சியைச் சேர்ந்த ரோபாட்டிக் இன்ஜினீயரான முகமது ஆஷிக் ரகுமான் தலைமையிலான குழு வடிவமைத்துள்ளது.
இவர்கள் ஸாபே (ZAFE), ஸாபே மெடிக் (ZAFE MEDIC) என்ற இரண்டு வகையான ரோபாட்களை உருவாக்கியுள்ளனர். வைஃபை வசதி மூலம் இயங்கும்வகையில் இந்த ரோபாட்கள் உருவாக்கப்பட்டுள்ளன. நான்கு அடி உயரம் கொண்ட 'ஸாபே மெடிக் ரோபாட்' கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருந்துகள், உணவை அவர்களுடைய இடத்துக்கே கொண்டுபோய்க் கொடுக்கும். இரண்டு அடி உயரம் கொண்ட 'ஸாபே' ஒன்றரை கிலோமீட்டர் சுற்றளவில் உள்ள வீடுகளுக்கு அதிகபட்சம் இருபது கிலோ எடைக்கொண்ட பொருட்களை வீடுகளுக்கே கொண்டுபோய்ச் சேர்க்கும். இந்த ரோபாட்களை வைஃபை வசதி, கைபேசி மூலம், குரல் வழிகாட்டுதல் மூலமாக இயக்க முடியும்.
‘தல’யின் ட்ரோன்
ஊரடங்கு உத்தரவு கடைப்பிடிக்கப்பட்டுவரும் பல்வேறு பகுதிகளில் தூய்மைப் பணியாளர்கள் கிருமிநாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனால் வேலை நேரம் அதிகரிப்பதுடன் தூய்மைப் பணியாளர்களுக்கும் நோய்த்தொற்று ஏற்படும் சாத்தியம் அதிகரித்துள்ளது. கடந்த சில ஆண்டுகளாகவே கல்லூரி மாணவர்களுக்கு, நடிகர் அஜித் ட்ரோன் தொழில்நுட்பப் பயிற்சியை அளித்துவருகிறார். கரோனா வைரஸ் பரவல் தொடங்கியவுடன் அஜித்திடம் பயிற்சிபெற்ற கல்லூரி மாணவர்கள் அடங்கிய ‘தக்ஷன்’ குழு, மாநில சுகாதாரத் துறையினருடன் இணைந்து ட்ரோன் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி கரோனா பாதிக்கப்பட்ட இடங்களில் கிருமிநாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.
ஓட்டுநரின் வைரல் பேச்சு
கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனைக்குக் கொண்டுவருவதற்காகச் சென்னையில் அதிநவீன வசதிகளுடன் கூடிய மூன்று சிறப்பு ஆம்புலன்ஸ்கள் பயன்பாட்டில் உள்ளன. இதில் ஒரு ஆம்புலன்ஸில் ஓட்டுநராகப் பணிபுரிந்துவருபவர் விருதுநகரைச் சேர்ந்த பாண்டித்துரை. கரோனா நோயாளிகளுடன் பணியாற்றும் தன்னுடைய மகனுக்கும் கரோனா வந்துவிடுமோ என அஞ்சும் அவருடைய தந்தையுடன் பாண்டித்துரை பேசும் ஆடியோ சமூகவலைத்தளத்தில் பெருமளவு பகிர்ந்துகொள்ளப்பட்டது.
அந்தப் பதிவில், “இந்த வேலை உனக்கு வேண்டாம். நான் பிச்சையெடுத்து உன்னைக் காப்பாத்துறேன், நீ மத்தவங்களுக்கு உதவிசெய்யப் போய் உனக்கும் கரோனா வந்துட போவுது” எனக் கெஞ்சுகிறார் பாண்டிதுரையின் தந்தை. ஆனால், “நான் பாதுகாப்பாதான் இருக்கேன்பா. மாஸ்க், கிளவுஸ் எல்லாம் போட்டுக்கிட்டு இருக்கேன். என்னை மாதிரி எல்லா ஆம்புலன்ஸ் ஓட்டுநரும் பயந்தா கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு யார் உதவுவாங்க?” எனக் கூறுகிறார் பாண்டித்துரை. கரோனா பரவலைத் தடுக்கும் ஒவ்வொருவரும் பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டிய அவசியத்தை இந்த உரையாடல் உணர்த்துகிறது.
வலம்வரும் இளைஞர்கள்
இதேபோல் தமிழகத்தின் பல்வேறு கிராமங்களில் கரோனா வைரஸின் தாக்கம் ஏற்படுட்டுவிடக் கூடாது என்பதற்காக கிராம எல்லையில் சோதனைச் சாவடி அமைத்து, மக்கள் யாரும் கடக்காத வகையில் பாதுகாப்புப் பணியிலும் இளைஞர்கள் ஈடுபட்டுவருகிறார்கள். இதேபோல் வெளிமாநிலத் தொழிலாளர்கள், ஆதரவற்றோர் ஆகியோருக்கு உணவை விநியோகித்துவரும் இளைஞர்களும் இருக்கிறார்கள். அத்துடன் சாலைகளில் சுற்றித் திரியும் நாய் உள்ளிட்ட விலங்குகளுக்கு உணவிட்டு இந்த நெருக்கடியான காலகட்டத்தில் மனிதநேயத்தை வெளிப்படுத்திவருகிறார்கள்.