வா.ரவிக்குமார்
கரோனா பரவலில் இருந்து பாதுகாத்துக்கொள்ள வீட்டில் தனிமையின் பிடியில் இருப்பவர்களுக்கு இசைப் பூங்கதவுகளின் தாழ்ப்பாள்களைத் திறக்கிறது இணையம்.
நமக்கு நன்கு அறிமுகமான திரையிசையில் மூழ்கித் துயரத்தை மறப்பது ஒரு விதம். நாமே இசைக்கருவிகளை வாசிப்பது, பாடுவதன் மூலம் இசையில் துய்ப்பது இன்னொரு விதம்.
இந்த இரண்டாவது அனுபவத்தை உலக அளவில் எல்லோருக்கும் சாத்தியப்படுத்தியது 'அகாடமி ஆப் இந்தியன் மியூசிக்' (AIMA). தற்போது அந்த அமைப்பு இசைக் கதவுகளை எல்லோருக்கும் திறந்திருக்கிறது. இசையைக் கற்றுக்கொள்ளும் வாய்ப்பை இணையத்தின் வழியாக இலவசமாக வழங்கிவருகிறது.
வீடியோ கான்ஃபரன்ஸ் வசதியை வழங்கும் 'சூம்' (ZOOM) செயலி மூலமாக இந்த வசதியைப் பெறலாம். ஏழு வயதுக்கு மேற்பட்ட யார் வேண்டுமானாலும் இந்த இசை வகுப்புகளில் பங்கெடுக்கலாம். இசையில் உங்களுக்கு முன்அனுபவமோ பயிற்சியோ இருக்க வேண்டுமென்ற தேவையில்லை. இசை மீதான ஆர்வம் மட்டும் இருந்தால் போதும். தனியாக இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்வதில் தயக்கம் இருந்தால், நண்பர்களுடன் மூன்று, நான்கு பேர் சேர்ந்த குழுவாகவும் (வெவ்வேறு இடங்களில் இருப்பவர்கள்தான்) பங்குபெறலாம்.
ஒவ்வொரு வாரமும் செவ்வாய், வியாழன், சனி ஆகிய மூன்று நாட்களில் இரவு 8 மணிக்குத் தொடங்கி 30 நிமிட வகுப்புகள் நடைபெறும். உங்களுடைய பாடும் திறமையை, இசைக்கருவிகளை வாசிக்கும் திறமையை வெளிப்படுத்துவதற்கும் 10 நிமிடம் வழங்கப்படுகிறது. கருத்துப் பரிமாற்றமும் நடக்கும். விருப்பம் இருப்பவர்கள் பதிவு செய்துகொள்ள வேண்டிய இணைய முகவரி: https://bit.ly/SingWithAIMA.
மனதை லேசாக்கிக்கொள்ள இசையின் வசமாவோம்!