எழுபது ஆண்டுகளாக நடக்கும் தக்காளிச் சண்டை ஸ்பெயின் நாட்டின் புனோல் நகரத்தில் நடைபெறும் ‘லா டோமாட்டினா’ (La Tomatina) திருவிழா உலகளவில் மிகவும் பிரபலம். ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதத்தின் கடைசி புதன்கிழமை இந்தத் திருவிழா நடைபெறும். இந்தத் திருவிழாவின்போது மக்கள் ஒருவரை ஒருவர் தக்காளிகளால் அடித்துக்கொள்வார்கள். உலகின் மிகப்பெரிய ‘உணவுச் சண்டை’யாகக் கருதப்படும் இந்தத் திருவிழாவின் எழுபதாவது ஆண்டு இது.
1945-ம் ஆண்டு, ஓர் அணிவகுப்பின்போது கீழே தள்ளிவிடப்பட்ட நபர், கையில் கிடைத்த காய்கறிகளையெல்லாம் எடுத்து அனைவரையும் தாக்கத்தொடங்கினார். அதிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் இந்தத் தக்காளி சண்டை நடைபெறத் தொடங்கியது. பல ஆண்டுகளுக்கு அதிகாரிகள் இந்தத் திருவிழா நடைபெறுவதை அங்கீகரிக்கவில்லை.
பிறகு, 1957-ம் ஆண்டிலிருந்து இந்தத் திருவிழாவை அதிகாரபூர்வமாக அரசு அங்கீரிக்க ஆரம்பித்தது. இந்தத் திருவிழா பன்றி இறைச்சியை உறியடித்து எடுப்பதிலிருந்து ஆரம்பிக்கும். அதற்குப் பிறகு, தக்காளிச் சண்டை தொடங்கும். அது ஒரு மணிநேரம் நீடிக்கும். இந்தச் சண்டையில் தக்காளிகளை அப்படியே அடிக்க முடியாது.
தக்காளிகளை நசுக்கி சாறாக்கியே அடிக்க முடியும். யாருக்கும் அடிபடக் கூடாது என்பதற்காக இந்த ஏற்பாடு. கிட்டத்தட்ட ஐம்பதாயிரம் பேர் இந்தத் திருவிழாவில் கலந்துகொள்வார்கள். நாற்பதாயிரம் டன் தக்காளிகள் (அதாவது 1,50,000 தக்காளிகள்) இந்தச் சண்டையில் பயன்படுத்தப்படுகிறது.