இளமை புதுமை

அந்த நான்கு மணி நேரம்!

செய்திப்பிரிவு

கனி

திருமணமான தம்பதிகள் அதிகமான நேரத்தை ஒன்றாகச் செலவிடுகிறார்கள் என்பதுதான் பொதுவான கருத்து. ஆனால், சமீபத்தில் வெளியான ஆய்வு முடிவு ஒன்று, இந்தக் கருத்து உண்மையில்லை என்கிறது. பிரிட்டனில் 2,000 பேரிடம் நடத்தப்பட்ட இந்த ஆய்வில், ஒரு நாளில் சராசரியாகத் தம்பதிகள் வெறும் நான்கு மணி நேரத்தை மட்டுமே ஒன்றாகச் செலவிடுகிறார்கள் என்று தெரியவந்திருக்கிறது. மாறுபட்ட பணி நேரம், தூக்க நேரம், ஆர்வங்கள் ஆகியவை இதற்கான காரணங்களாகத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றன.

இந்த ஆய்வின்படி, சராசரியாக ஒரு தம்பதி ஒரே வீட்டில் ஒரு நாளில் ஏழரை மணி நேரத்தை ஒன்றாகச் செலவிடுகிறார்கள். ஆனால், ஒரு தம்பதி, ஒரே அறையில் ஒரு நாளில் வெறும் நான்கு மணி நேரத்தை மட்டுமே ஒன்றாகச் செலவிடுகிறார்கள். இந்த ஆய்வில் கலந்துகொண்ட தம்பதிகள், மாறுபட்ட பணி நேரத்தை இதற்கான முக்கியக் காரணமாகத் தெரிவித்துள்ளனர். 45 சதவீதத்தினர் தங்கள் மாறுபட்ட ஆர்வங்களை இதற்கான காரணமாகத் தெரிவித்துள்ளனர். 30 சதவீதத்தினர் இருவரின் மாறுபட்ட தூக்க நேரமே இதற்குக் காரணம் என்று சொல்லியிருக்கிறார்கள்.

இந்த ஆய்வின் முடிவில், இன்னொரு சுவாரசியமான தகவலும் தெரியவந்துள்ளது. ஒரே அறையில் ஒன்றாக நேரத்தைச் செலவிட்டாலும், அந்த நேரத்தில் தம்பதிகளுக்குள் வாக்குவாதமே பெரும்பான்மையான நேரத்தை எடுத்துக்கொள்வதாக இந்த ஆய்வு சொல்கிறது. அறையின் வெப்பநிலை, விளக்குகளின் வெளிச்சம், சோஃபாவில் யார் எந்தப் பக்கத்தில் அமர்வது போன்ற விஷயங்களில் தம்பதிகளுக்குள் வாக்குவாதம் அதிகமாக நடைபெறுவதாக இந்த ஆய்வு சொல்கிறது.

2,000 பேரிடம் நடத்தப்பட்ட இந்த ஆய்வு முடிவு, ஒட்டுமொத்தமாக எல்லாச் சூழ்நிலைகளுக்கும் பொருந்தாது என்றாலும், இந்த ஆய்வின் அடிப்படைகள் அனைவருக்கும் பொதுவானவை என்று தெரிவிக்கிறார்கள் ஆய்வாளர்கள். எந்த ஓர் உறவும் வெற்றிபெறுவதற்குக் கடின உழைப்பு தேவை. தம்பதிகள் தாங்கள் செலவிடும் நேரத்தை அதிகப்படுத்துவதற்கு உண்மையான முயற்சிகளை எடுக்க வேண்டும் என்பதை இந்த ஆய்வு முடிவுகள் வலியுறுத்துகின்றன. ஆரோக்கியமான, மகிழ்ச்சியான உறவுக்குத் தம்பதிகள் ஒன்றாக நேரம் செலவிடுவது அவசியம்.

SCROLL FOR NEXT