இளமை புதுமை

ஈசிஆர் வழியாக ஓர் ஓவியப் பயணம்!

கோபால்

பொதுவாக, கலை என்றாலே அழகியல் குறித்த கவனத்தைத் தவிர்க்க முடியாது. ஓவியம் போன்ற நுண்கலைகளில் அழகியல் சார்ந்த எதிர்பார்ப்பும் முக்கியத்துவமும் மிக அதிகம் என்றே சொல்லலாம். ஆனால், ஓவியரும் வடிவமைப்புக் கலைஞருமான அந்தோனி குருஸ் அழகியலைவிட அனுபவங்களுக்கே முக்கியத்துவம் தருகிறார்.

சென்னை அடையாறில் உள்ள டாக்டர் ஜெ.ஜெயலலிதா இசை மற்றும் கவின்கலைப் பல்கலைக்கழகத்தில் கண்காட்சியாக வைக்கப்பட்டிருந்த அவருடைய ஓவியங்கள் கிழக்குக் கடற்கரைச் சாலையில் சென்னை முதல் நாகப்பட்டினம்வரை நீண்ட நடைப்பயணத்தில் அவர் எதிர்கொண்ட அனுபவங்களைக் கச்சிதமாகப் பதிவுசெய்திருந்தன.

குருஸ் தன் பயணத்தின்போது எதிர்கொண்ட ஒளிகளும் ஓசைகளும் வாசனைகளும் ஏற்படுத்திய உளவியல் தாக்கம், வியர்வையின் கசகசப்பு, நீண்ட நடையினால் விளையும் கால்வலி, நீண்ட பயணத்துக்குப் பிறகு அமர்ந்து ஓய்வெடுப்பதால் கிடைக்கும் ஆசுவாசம், நன்கு பசித்த பிறகு கிடைக்கும் உணவின் ருசி, வெயில்பொழுதில் ஆற்றோரங்களில் கிடைக்கும் குளுமை என அனைத்து உணர்வுகளும் அவரது ஓவியங்களில் வழியே பார்வையாளர்களுக்குக் கடத்தப்படுகின்றன.

விதிகளைத் தகர்த்த கண்காட்சி

தனது எம்.பில் பட்ட ஆய்வுக்காகத் தொடர்ந்து 20 நாட்கள் தினமும் 30 கி.மீ. பயணித்து இந்த ஓவியங்களை அந்தந்த இடங்களிலேயே வரைந்ததாகச் சொல்கிறார் குருஸ். “இந்தஓவியங்கள் அந்தந்த இடங்களில் எப்படி வரையப்பட்டனவோ அப்படியே கண்காட்சியில் வைக்கப்பட்டிருக்கின்றன. கண்காட்சியில் வைப்பதற்காக மெருகேற்றவில்லை” என்கிறார்.

இந்தக் கண்காட்சியில் ஓவியங்களை வரிசைப்படுத்திய விதத்தில் குருஸ் ஒரு புதுமையைப் புகுத்தியிருக்கிறார். குழாயில் நீர் அருந்த கீழே குனிந்திருப்பார் என்றால், அதை வெளிப்படுத்தும் ஓவியம் நன்கு கீழே குனிந்து பார்க்கும் வகையில் வைக்கப்பட்டிருக்கிறது. இப்படி அனைத்து ஓவியங்களும் முறையான அழகியல் உணர்வுக்குத் தோதான வரிசையாக எதுவும் இல்லாமல் ஒரு பயணம் போல் ஏற்ற இறக்கங்களுடன் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன.

ஏளனம் செய்யும் கடவுளர்

குருஸின் இந்த நடைப்பயணமும் அதற்கான காரணமும் யாருக்கும் புரியவில்லை. அவர் ஓய்வெடுக்க ஒதுங்கிய இடங்களிலெல்லாம் அவரைச் சந்தேகப்பட்டு இடமளிக்க மறுத்திருக்கிறார்கள். அதனால், சுடுகாடுகளில் தங்கி ஓய்வெடுத்தையும் ஓர் ஓவியமாக்கியிருக்கிறார். பலர் இவரை ஏளனம் செய்திருக்கிறார்கள்.

கிண்டலடித்து சிரித்திருக்கிறார்கள். சிவன், விநாயகர், புத்த என அந்தக் கடவுளர் தன்னைப் பார்த்து சிரிப்பது போலவும் இவர் அவற்றைக் கண்டுகொள்ளாமல் தன் பயணத்தைத் தொடர்வதுபோலவும் ஓர் ஓவியம் இடம்பெற்றிருக்கிறது.

இந்த 30 கி.மீ நடைபயணத்தின்போது ஓவியத்துக்கான கருவிகளைத் தவிர இரண்டு சட்டைகளையும் வேட்டிகளையும் மட்டுமே சுமந்து சென்றிருக்கிறார். சாலைகளில் படுத்துறங்கியிருக்கிறார். காவல்துறையினரால் தூக்கத்திலேர்ந்து எழுப்பப்பட்டு விசாரிக்கப்படுவதும் நெடுஞ்சாலையைக் கடக்கும் வாகனங்களின் கண்ணைக் கூசும் ஒளியும் ஓர் ஊரிலிருந்து இன்னொரு ஊரின் எல்லையை அடையும்வரை இவரைச் சுற்றி தம் ஊர்க் கதைகளைக் குரைப்பின் வழியாகச் சொல்லும் நாய்களும் இவர் சின்ன வயதில் மிகவும் விரும்பி கிடைப்பதற்கறிய பொருளான நாவல் பழங்கள் சாலைகளில் யாரும் சீண்டாமல் சிதறிக் கிடைப்பதும் ஓவியங்களாக்கப்பட்டிருக்கின்றன.

தினமும் 30 கி.மீ நடந்தபோது ஒரு மாதத்துக்கான மளிகைப் பொருட்களை ஒரு மூட்டையில் கட்டி தலையில் சுமந்துகொண்டு குருஸின் தந்தையைப் பார்க்க வந்த அத்தையின் நினைவும் நினைவு வந்திருக்கிறது. அந்தக் காலகட்டத்தின் சாட்சியமாக தலையில் மூட்டையைச் சுமந்தபடி நடக்கும் அத்தையும் அந்தக் காலகட்ட வாழ்க்கையின், விழுமியங்களின் சாட்சியமாக ஓவியத்தில் படைக்கப்பட்டிருக்கிறார்.

ஈ.சி.ஆரைக் கடந்து செல்பவர்களுக்கு அது ஓர் உல்லாசப் பயணம். ஆனால், அந்தச் சாலைகளை ஒட்டி வாழும் மனிதர்களும் விலங்குகளும் எப்போதுவேண்டுமானால் வாகனங்களில் அடிபட்டு சாகலாம் என்ற அச்சுறுத்தலில் வாழ்கிறார்கள். இந்தப் பயணத்தின்போது ஒரு கன்றுக்குட்டியும் ஒரு மனிதரும் வாகனத்தில் அடிபட்டு இறப்பதைக் கண்முன் பார்த்திருக்கிறார். ஆனால், அவற்றையும் ஓவியமாக்கிவிட அவரால் முடியவில்லை. “அந்த மரணங்களை ஓவியங்களாக்கும் அளவுக்கு அவற்றை எளிதாக எடுத்துக்கொள்ள என்னால் முடியவில்லை” என்கிறார்.

இரண்டாம் கண்காட்சி

2019 ஜூனில் இந்தப் பயணத்தைத் நிகழ்த்திய குருஸ், ஆய்வை சமர்பித்து கடந்த மாதம் முதல் மாணவராகத் தேர்ச்சி பெற்று பட்டத்தையும் வாங்கிவிட்டார். அடுத்ததாக இந்த ஓவியங்கள் மார்ச் 11-15 வரை சென்னை லயோலா கல்லூரி விஷுவல் கம்யூனிகேஷன் துறைப் பிரிவில் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கும். மனித அனுபவங்களை மையமாகக் கொண்ட அசலான உணர்வுகளைப் பதிவு செய்யும் இந்த ஓவியக் கண்காட்சி நிச்சயமாக ஒரு புதிய அனுபவத்தைத் தரும்.

SCROLL FOR NEXT