இளமை புதுமை

அப்பாவின் பரிசு!

செய்திப்பிரிவு

நெல்லை மா. கண்ணன்

பள்ளியில் படித்தபோதே ஒவியம் வரைந்து பழகிய தால் ஒளிப்படத்தின் மீதும், ஒளிப்படக் கருவியின் மீதும் அபிராமிக்குப் பிரியம் ஏற்பட்டிருந்தது. 12-ம் வகுப்பு முடித்தவுடன் காட்சிதொடர்பியல் (Visual communication) படிப்பதற்கு விருப்பத்துடன் இருந்தார்.

ஆனால், குடும்பத்தினர் அதில் பெரிய ஆர்வம் காட்டாததால் கோவையில் ஃபேஷன் டெக்னாலஜி படித்தார். அப்போதும் ஒளிப்படம் எடுப்பதில் ஆர்வம் தொடர்ந்தது. பிறகு கொல்கத்தாவில் ஃபேஷன் டெக்னாலஜி படித்தபோதும். ஒளிப்படம் எடுக்கும் ஆர்வம் அவரைத் துரத்திக்கொண்டுதான் இருந்தது.

நண்பர்களுடைய ஒளிப்படக்கருவியில் ஒளிப்பட மெடுத்து, ஃபேஸ்புக்கில் பகிர்ந்தபோது அனைவரும் உற்சாகப்படுத்தினார்கள். அது உத்வேகத்தைக் கொடுத்தது.

விடுமுறையில் திருநெல்வேலிக்கு வந்த போதெல்லாம் அபிராமியின் அப்பாவிடம், ”அபிராமிக்கு கேமரா வாங்கி கொடுங்கள், அவள் நல்லா படமெடுக்கிறாள்” என்று தோழிகள் கூறிவந்தார்கள்.

2015 புத்தாண்டுக்குத் தனக்குக் கேமரா பரிசாகக் கிடைக்கும் என்று அபிராமி எதிர்பார்த்தார். ஆனால், அது நடக்கவில்லை. மீண்டும் பொங்கலுக்கு ஊருக்கு வந்திருந்தபோது கொண்டாட்டங்கள் முடித்த ஒரு மதிய நேரத்தில் அப்பா கேமராவைப் பரிசளித்ததை இப்போதும் நெகிழ்ச்சியுடன் நினைவு கூர்கிறார் பாளையங் கோட்டையைச் சேர்ந்த ஒளிப்படக்கலைஞர் அபிராமி. தற்போது திருப்பூரில் ஃபேஷன் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்துவருகிறார்.

ஒளிப்படப் பயிற்சி பெற பெங்களூருவில் இருந்து வாரம் ஒருமுறை கோவை ஸ்ரீனி ஒளிப்படப் பயிற்சிப் பயிலரங்கில் பங்கேற்றிருக்கிறார்.

அதன்பிறகு தனக்கு எந்தப் பாணி (Genre) ஔிப்படம் எடுக்க வருகிறது என்பதைப் புரிந்துகொள்வதற்காக வருடம் முழுவதும் ஒளிப்படம் எடுக்க வேண்டும் என்று தீர்மானித்துக்கொண்டார்.

எடுத்த படங்களை ஃபேஸ்புக்கிலும் இன்ஸ்டாகிராமிலும் பதிவேற்றினார். அந்த ஓராண்டில் மிகையாகப் படம் எடுப்பதிலிருந்து விடுபட்டு, தான் நெருக்க மாக உணர்வதைப் பதிவு செய்ய வேண்டும் என்பதைப் புரிந்துக்கொண்டதாகக் கூறுகிறார்.

தோடர்கள் மரபு முறையில் சால்வைகளில் நெய்யும் பூத்தையல் வேலைப்பாடுகளை (Embroidery) ஆவணப்படுத்தியதற்காக சஹபிடியா அமைப்பின் நிதிநல்கையை அபிராமி பெற்றுள்ளார். உணவு வகைகளையும் குழந்தைகளையும் ஒளிப்படம் எடுப்பதில் தற்போது அவர் கவனம் செலுத்திவருகிறார்.

கட்டுரையாளர் தொடர்புக்கு: mkannanjournalist@gmail.com

SCROLL FOR NEXT