கனி
உலகமே காதலர் தினத்தைக் கொண்டாடினாலும் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் அமைந்திருக்கும் ‘பிரேக்அப் பார்’ (Breakup Bar) காதல் முறிவைக் கொண்டாடிக்கொண்டிருக்கிறது.
காதலை மட்டும்தான் கொண்டாட வேண்டுமா என்ன? காதல் முறிவையும் கொண்டாடலாம் என்ற வகையில் இந்த ‘பிரேக்அப்’ பாப்-அப் பார் லாஸ் ஏஞ்சல்ஸில் தொடங்கப்பட்டுள்ளது. ஜனவரி 31 முதல் பிப்ரவரி 16 வரை இந்த ‘பிரேக்அப் பார்’ இயங்கியது.
இந்த பாரின் சிறப்பம்சமாக 8 அடி உயரத்தில் அமைந்துள்ள பிரேக்அப் சுவரைச் சொல்லலாம். இந்தச் சுவரில் முன்னாள் காதல்களுக்குச் சொல்ல வேண்டிய செய்தியை எழுதி ஒட்டலாம். அத்துடன், இந்த பாரில் அமைந்ததுள்ள திரையில் எப்போதும் கிளாசிக்கான பிரேக்-அப் படங்கள் திரையிடப்பட்டன.
இரண்டு வாரங்கள் மட்டும் இயங்கிய இந்த பாப்-அப் பாரின் மெனுவும் ‘பிரேக்அப் - ஸ்பெஷல்’ மெனுவாக ‘டியர்ஸ் ஆஃப் மை எக்ஸ்’, ‘கோல்ட் டே இன் ஹெல்’ போன்ற சிறப்புப்பெயர்களுடன் தயாரிக்கப்பட்டது. இந்த பாரின் அலங்காரமும் ‘பிரேக்அப்’ தீம்மை வெளிப்படுத்தும் கறுப்பு ரோஜாக்களால் அலங்கரிக்கப்பட்டது.
காதலர் தினத்துக்குச் சிறப்புத் தள்ளுபடி கொடுக்கும் பார்களுக்கு மத்தியில், ‘பிரேக்அப்’பையும் இயல்பாக எடுத்துகொண்டு கொண்டாட முடியும் என்ற நம்பிக்கையை உருவாக்கிய இந்த பார் பலரிடம் வரவேற்பைப் பெற்றது.