மிது
‘குள்ளா, பல்லா, கறுப்பா’ என்பது போன்ற வலி மிகுந்த உருவ கேலியைப் பலரும் சந்தித்திருப்பார்கள். இதுபோன்ற கேலிகளால் சம்பந்தப்பட்டவரின் மனம் எப்படியெல்லாம் வேதனைப்படும் என்பதைச் சொல்லத் தேவையில்லை. ஆனால், அந்தக் கேலி எவ்வளவு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை ஆஸ்திரேலிய சிறுவன் ஒருவன் பொட்டில் அடித்தாற்போல் உலகுக்கு சொல்லியுள்ளான்.
கடந்த வாரம் 9 வயதான குவான்டன், “நான் குள்ளமாக இருப்பதால் எல்லோரும் என்னை கிண்டல் செய்கின்றனர். என்னை ஏதாவது செய்யுங்கள்” என்று தன் தாயிடம் கண்ணீர் விட்டு கதறி அழுத காட்சியைப் பார்த்து உலகில் பலரும் பதறிபோனார்கள். தன் மகனின் மனக்குமுறலை உலகிற்கு வெளிச்சம் போட்டுக் காட்ட வேண்டும் என்பதற்காக அவனுடைய தாயே அந்த வீடியோவை சமூக ஊடகங்களில் பகிர்ந்திருந்தார்.
ஒன்றும் அறியாத பிஞ்சு சிறுவனின் மனதில் உருவக் கேலி எத்தனை வலியையும் வேதனையையும் ஏற்படுத்தியது என்பதை அந்த வீடியோ உணர்த்தியது. அந்த வீடியோ உலகம் முழுவதும் வைரல் ஆனது. வீடியோவில் குவாண்டனின் அழுகையைப் பார்த்தவர்களின் கண்கள் குளமாயின. குவாண்டனுக்கு ஆஸ்திரேலியாவைத் தாண்டி உலகில் கோடிக்கணக்கானோர் ஆறுதலும் தேறுதலும் சொன்னார்கள்.
குவாண்டனின் அழுகை ஆஸ்திரேலிய ரக்பி அணியான ஆல்-ஸ்டார் அணியையும் அசைத்துப் பார்த்தது. அவன் மனதைத் தேற்றும்விதமாக தங்கள் அணியை வழிநடத்த சொல்லி வீரர்கள் அழைத்தனர். ரக்பி விளையாட்டின் மீது தீராக் காதல் கொண்ட குவான்டனுக்கு, இந்த அறிவிப்பு இன்ப அதிர்ச்சியை அளித்தது. அந்த அழைப்பை ஏற்று பிரிஸ்பேனில் நடந்த ரக்பி ஆட்டத்தில், தனது ஆதர்ச ரக்பி வீரர்களுடன் குவாண்டன் களத்துக்கு வந்தபோது அரங்கமே ஆர்ப்பரித்தது.
உருவக் கேலியால் மனவேதனை அடைந்த குவாண்டனுக்கு அந்த வரவேற்பும் ஆர்ப்பரிப்பும் மருந்து இட்டது. குவாண்டன் சிரித்தபடி மைதானத்தில் தலைநிமிர்ந்து வந்தக் காட்சியைப் பார்த்த அவனுடைய நண்பர்கள் நிச்சயம் தலைகுனிந்திருப்பார்கள். உருவக் கேலி செய்பவர்களுக்கு குவாண்டன் பாடமாகியிருக்கிறான்!