வி. சாமுவேல்
இது செல்ஃபி யுகம். எல்லோரும் கேமரா மொபைலும் கையுமாக அலைகிறார்கள். எங்கு வேண்டுமானாலும் நின்றுகொண்டு செல்ஃபி எடுத்துக்கொண்டு நகர்ந்துவிடுகிறார்கள். இப்படி செல்ஃபி புள்ளைகள் ஊரெங்கும் பெருகிவிட்ட நிலையில், கையில் பெரிய கேமராக்களோடு ஊரெங்கும் வலம்வந்துகொண்டிருக்கிறது ஓர் இளைஞர் பட்டாளம். கேமராக்களை தோளில் மாட்டிக்கொண்டு சென்னையில் உள்ள சாலைகள், தெருக்கள் என எந்த இடத்தையும் விடாமல் இந்த இளைஞர் பட்டாளம் சுற்றிவருகிறது. யார் இவர்கள்?
கேமராவும் கையுமாக அலையும் இந்த இளைஞர்கள் ‘ஸ்ட்ரீட்ஸ் ஆஃப் தமிழ்நாடு’ என்ற ஒற்றைக் குடையில் இயங்கிவருபவர்கள்.
ஒளிப்படங்களை ஆர்வமாக எடுக்கும் இளைஞர்களுக்கு இது ஒரு புகலிடம். இதிலுள்ள இளைஞர்கள் எல்லோரும் இன்ஸ்டாகிராம் என்ற சமூகவலைத்தளம் மூலம் ஒன்று சேர்ந்தவர்கள்; சேருபவர்கள். ‘ஸ்ட்ரீட்ஸ் ஆஃப் தமிழ்நாடு’ தொடங்கப்பட்டதன் நோக்கமே, தமிழகம் முழுவதும் அழைப்புகளைப் பெற்று ஒளிப்படங்களை எடுக்க பங்கு பெறுவதுதான்.
இணையும் இளைஞர்கள்
தூத்துக்குடியைச் சேர்ந்த ராம் தினேஷ் என்பவர்தான் இந்த இன்ஸ்டாகிராம் பக்கத்தின் அட்மின். இந்தப் பக்கத்தில் ‘ஸ்ட்ரீட்ஸ் ஆஃப் தமிழ்நாடு’ குழுவில் உள்ளவர்கள் எடுக்கும் சிறந்த ஒளிப்படங்களைப் பதிவேற்றம் செய்கிறார் ராம் தினேஷ். இதன் மூலம் திறமையான ஒளிப்படக் கலைஞர்களை உலகுக்கு அறிமுகப்படுத்தும் பணியையும் அவர் செய்துவருகிறார்.
"பொதுவா சென்னை, மதுரை, கோவை என்ற முக்கிய நகரங்களில் உள்ள ஒளிப்படக் கலைஞர்களைப் பற்றிதான் பொதுவெளியில் அதிகம் தெரிகிறது. பிற பகுதிகளில் நல்ல திறமையான ஒளிப்படக் கலைஞர்கள் இருந்தாலும் யாருக்கும் தெரிவதில்லை. நல்ல திறமையான ஒளிப்படங்கள் எடுப்பவர்கள் யாராக இருந்தாலும் சரி, அவர்களை உலகின் பார்வைக்குக் கொண்டு செல்ல வேண்டும் என்பதே என்னுடைய நோக்கம்" என்கிறார் ராம் தினேஷ். இவர் தற்போது சென்னையில் பொறியாளராகப் பணிபுரிகிறார்.
போட்டோ பவனி
அழகான காட்சிகளையும், தருணங்களையும் நினைவூட்டும்படி தத்ரூபமாக எடுப்பது ஒளிப்படங்களே என்பதால், இந்தக் குழுவில் உள்ளவர்கள் சென்னை உள்ளிட்ட நகரங்களில் பம்பரமாகச் சுழல்கிறார்கள். நல்ல காட்சிகளையும் தருணங்களையும் ஒளிப்படங்களாக எடுத்து பார்வையாளர்களுக்கு விருந்தாக்கிவருகிறார்கள்.
இந்தக் குழுவில் படித்துக்கொண்டிருப்பவர்கள் முதல் பட்டதாரிகள் வரை ஏராளமான இளைஞர்கள் பங்கெடுக்கிறார்கள். கைகளில் கேமராக்களைச் சுமந்தபடி ஊர்களில் உலா வருகிறார்கள். இவர்களில் ஆண், பெண் என்ற பாலின பேதம் எல்லாம் கிடையாது. ஒளிப்படங்களின் மீது காதல் கொண்டவர்கள், ஆர்வமாகப் பங்கெடுத்து வருகிறார்கள்.
மேலும், இக்குழுவில் இருப்போர் ஒன்று சேர்ந்து ‘போட்டோ வாக்’ (photo walk) எனப்படும் குறிப்பிட்ட இடத்தைத் தேர்ந்தெடுத்து, அங்கே சென்று, கேமராக்களோடு பவனி வருகிறார்கள். “அவ்வப்போது இக்குழுவில் உள்ள நாங்கள் ‘போட்டோ வாக்’ செல்வது உண்டு. ஒரே இடத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட கண்ணைக் கவரும் அழகான காட்சிகளை ஒளிப்படங்களாகப் பதிவு செய்வோம். இப்படி எடுக்கும் ஒளிப்படங்களை ஹாஷ்டேக் மூலம் ‘ஸ்ட்ரீட்ஸ் ஆஃப் தமிழ்நாடு’ என்ற பெயரில் அனுப்புவார்கள்.
அதில் சிறந்த ஒளிப்படங்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இடம் பெறும். இதன் மூலம் இன்ஸ்டாகிராம் பக்கத்தைப் பின்தொடரும் ஆயிரக்கணக்கானோர் பார்வைக்கு இந்த ஒளிப்படங்கள் செல்கின்றன. சிறிய ஊரில் உள்ள ஒளிப்படக் கலைஞரின் திறமைக்கு வெளிச்சமும் கிடைக்கிறது” என்கிறார் ராம் தினேஷ்.
திறமையை அங்கீகரிக்க
ஒளிப்படங்களைப் பகிர்ந்துகொள்வதற்காக மட்டும் இந்தக் குழு இயங்கவில்லை. கேமரா, ஒளிப்படங்கள் சார்ந்த கேள்விகள், சந்தேகங்களையும் தங்களுக்குள் பகிர்ந்து தீர்வைச் சொல்கிறார்கள். இதேபோல் ஒளிப்படக் காட்சி போட்டிகள் எங்கு நடந்தாலும் இக்குழுவில் உள்ளவர்கள் அதைப் பகிர்ந்து விருப்பம் உள்ளவர்கள் பங்கேற்கிறார்கள். இது மட்டுமல்ல, ‘ஸ்ட்ரீட்ஸ் ஆஃப் தமிழ்நாடு’ பக்கம் சார்பாகவும் இணையதளத்தில் போட்டிகள் வைத்து உற்சாகமூட்டுகிறார்கள்.
“பார்வையாளர்களுக்கு ஓர் ஒளிப்படத்தைக் கொண்டு சேர்ப்பது அவ்வளவு சுலபம் கிடையாது. நம்முடைய பெயர் பரிட்சயம் ஆனால்தான் நம்முடைய ஒளிப்படங்களைப் பார்வையிடுவார்கள். அப்படி இல்லையெனில், பரிட்சயம் ஆகும்வரை சிறந்த ஒளிப்படங்களை எடுத்துகொண்டே இருக்க வேண்டியதுதான். திறமை இருந்தாலும், அதை உலகின் பார்வைக்குக் கொண்டுவருவது மிகமிகக் கடினம். அந்த நிலையை மாற்ற வேண்டும் என்பதுதான் “ஸ்ட்ரீட்ஸ் ஆஃப் தமிழ்நாடு’ குழுவின் முக்கிய நோக்கம்” என்கிறார் ராம் தினேஷ்.
புதுமையான முயற்சிதான்!
ஸ்ட்ரீட்ஸ் ஆப் தமிழ்நாடு- இன்ஸ்டாகிராம் பக்கம்: https://bit.ly/38eA23N