இளமை புதுமை

ஐ.டி. உலகம் 10: மனிதத் தன்மை அற்றவரா மனித வள மேலாளர்?

எம்.மணிகண்டன், வி.சாரதா

இன்றைய கார்ப்பரேட் சூழலில் மனித வளம் என்ற பிரிவு எல்லா நிறுவனங்களிலும் உள்ளது. ஐ.டி. துறையில் மனித வள மேலாளர்கள் சக்தி படைத்தவர்கள் என்பது நிதர்சனம்.

ஐ.டி. துறையில் பணிபுரியும் ஒவ்வொரு ஊழியரின் கஷ்ட நஷ்டங்களைத் தீர்மானிப்பது மனித வள மேலாளர்கள்தாம். ஒரு கடைநிலை ஐ.டி. ஊழியர் தனது மேனேஜரோடு முட்டிக்கொண்டு நின்றாலும் ஹெச்.ஆருடன் நல்ல தொடர்பில் இருந்தால், எந்தச் சிக்கலும் இல்லாமல் தனது அடுத்தடுத்த கட்டங்களை அடையலாம்.

ஆனால் பெரும்பாலான ஐ.டி. ஊழியர்கள், ஹெச்.ஆர்.கள் தங்களுக்கு வில்லன்களாகவே வளம் வருவதாகக் குற்றஞ்சாட்டுகின்றனர்.

மனித வள மேலாளர் என்று அழைக்கப்படுபவர், ஒரு மனிதனின் ஒட்டுமொத்த வளத்தையும் சீரழித்து, மனோரீதியாகப் பலவீனமடையச் செய்வதுதான் அவரது பணியா என்று கேட்கிற அளவுக்குப் பலரும் பல்வேறு குற்றச்சாட்டுகளைச் சொல்கின்றனர்.

ஊழியருக்கு ஹெச்.ஆர். கடவுளைவிட மேலானவர். ஆனால், ஒரு ஹெச்.ஆருடனான பிரச்சினையால் பிரபல நிறுவனத்தில் கை நிறைய சம்பளம் வாங்கிய பிரபு, அந்நிறுவனத்திலிருந்து வெளியேறி தற்போது ஆதம்பாக்கம் அருகே, சொந்தமாக ஒரு சிறு ஐ.டி. நிறுவனத்தை நடத்திவருகிறார். அவர் தனக்கேற்பட்ட அனுபவங்களை அடுக்குகிறார்.

இவரது சொந்த ஊர் சேலம். அங்கே உள்ள பிரபல கல்லூரியில் பொறியியல் படித்துள்ளார். கன்சல்டன்சி ஒன்றின் மூலம் ஒரு சிறு நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்துள்ளார். ஓராண்டு எந்தப் பிரச்சினையும் இல்லை. எப்போதுமே வேலை அதிகம். காலை 9 மணிக்கு அலுவலகம் நுழைந்தால் இரவு 9 வரையெல்லாம் வேலை பார்ப்பார்.

ஒரு நாள் அவசரம் என்று வழக்கமாகப் பணி நேரம் முடிகிற மாலை 6 மணிக்கு அலுவலகத்தில் இருந்து கிளம்பியுள்ளார். உடனே மேனேஜர் ஹெச்.ஆரிடம் போட்டுக் கொடுத்துவிட்டார். ஹெச்.ஆர் பிரபுவிடம் எதுவுமே பேசவில்லை. ஆனால், செயலில் காட்ட ஆரம்பித்தார்.

நல்ல முறையில் பணி செய்து ஒரு ப்ராஜக்ட்டை பிரபுவின் குழு வேகமாக முடித்துள்ளது. அதில், குறிப்பாக பிரபுவின் பங்களிப்பு மிக முக்கியமாக இருந்திருக்கிறது. ஆனால், நேரம் பார்த்துக் காத்திருந்த ஹெச்.ஆரும், மேனேஜரும், சம்பள உயர்வுக்கு இரு மாதங்களுக்கு முன்பு அவரை பெஞ்ச் எனப்படும் ப்ராஜக்ட் அற்ற பிரிவுக்கு மாற்றியிருக்கிறார்கள். இதனால் அவரது எம்பிளாய் வேல்யூ பாய்ண்ட் குறைந்து ஊதிய உயர்வைப் பெற முடியவில்லை.

ஊதிய உயர்வு கைநழுவிப் போனதோடு அது முடியவில்லை, அவருக்குக் கிடைக்க வேண்டிய வெளிநாட்டு ட்ரிப் வேறொருவருக்குக் கிடைத்திருக்கிறது. ஒரு சங்கிலித்தொடர் போல் நீண்ட அந்தப் பிரச்சினை ஒரு கட்டத்தில் அவரது வேலைக்கே உலை வைத்திருக்கிறது. சுதாரித்துக்கொண்டார் அவர், “2 நண்பர்களைச் சேர்த்துக்கொண்டு ஒரு சிறு நிறுவனத்தை ஆரம்பித்தேன்” என்று மனித வள மேலாளரால் தான் பட்ட கஷ்டங்களைக் கூறுகிறார் பிரபு.

இந்தச் சூழலில் வேலை, சம்பளம், பதவியுயர்வு, ஆஃப் ஸ்டேஷன் வொர்க் என்று ஒரு ஊழியரின் அத்தனை பிடிகளும் ஹெச்.ஆரின் கைகளில்தான் இருக்கின்றன. மனித வள மேலாளர்கள், ஊழியர்கள் இடையே அப்படி என்னதான் பிரச்சினை? இதற்கு என்ன தீர்வு? மனித வள மேலாண்மை நிபுணர் மாஃபா பாண்டியராஜன், “ஐ.டி. துறையில் நிலவுகிற பிரச்சினைகளுக்கு முழுக்க முழுக்க ஹெச்.ஆர்.களை மட்டுமே குறை சொல்லக் கூடாது” என்கிறார்.

ஐ.டி.துறையின் கால கட்டத்தை இரண்டாகப் பிரிக்கலாம் என்று சொல்லும் அவர், ஒன்று 1990 முதல் 2005 வரையிலான காலகட்டம் என்றும் இரண்டாவது 2005 முதல் தற்போதைய காலகட்டம்வரையானது என்றும் அதைப் பிரிக்கிறார். முதல் காலகட்டத்தில், ஆண்டுக்கு 20% வரை ஐ.டி. துறையின் வளர்ச்சி இருந்ததாகவும் அப்போது ஆண்டுக்கு 80 ஆயிரம் முதல் 1 லட்சம் பேர் வரை வேலைக்குச் சேர்த்துக்கொள்ளப்பட்டதாகவும் அவர் கூறுகிறார். ஆனால் 2005-க்குப் பிறகு ஐ.டி. துறையின் வளர்ச்சி ஆண்டுக்கு 4 சதவீதமாகவே இருந்தது என்பதையும், இதனால் ஆட்களை வேலைக்குச் சேர்ப்பதும் குறைந்தது என்பதையும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.

மனித வள மேலாளர்கள் என்றால் சம்பந்தப்பட்ட அலுவலகத்துக்கு அவர்தான் கிட்டத்தட்ட நீதிபதி மாதிரி என்றும், சரி தவறுக்கு ஏற்ப ஊழியர்களை நடத்த வேண்டும் என்றும் அவர் சொல்கிறார். இன்றைய சூழலில் சாஃப்ட் ஸ்கில்ஸ் , ஹார்டு ஸ்கில்ஸ் என இரண்டு வகையான திறன்கள் சரியாக இருந்தால், யார் வேண்டுமானாலும் ஐ.டி. துறையில் ஜெயிக்கலாம் என்று அவர் நம்பிக்கை ஊட்டுகிறார்.

போலந்து, பிரேசில் போன்ற ஒரு சில நாடுகளில் தான் பெரு நிறுவனங்களே அதிகம் பேரை வேலைக்கு எடுப்பதாகவும் இந்தியாவில் அந்த நிலை இல்லை என்றும் இதனால் ஆட்குறைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாகவும் பாண்டியராஜன் தெரிவிக்கிறார்.

2014-2015 ஆண்டில் ஐ.டி. துறை மீண்டும் பழையபடி வளர ஆரம்பித்துள்ளது. கடந்தாண்டு ஐ.டி. துறையின் வளர்ச்சி 10 சதவீதம். மத்திய அரசின் இந்தியா இன்னோவேஷன் திட்டத்தின் மூலம் இன்றைக்கு ஏராளமான சிறு, குறு ஐ.டி. நிறுவனங்கள் முளைத்துள்ளன.

“எனவே, பணி என்பது யாருக்கும் பெரிய பிரச்சினை இல்லை. சமூக மற்றும் தொழில்நுட்ப போக்குகள் குறித்த அறிவை, ஒரே புள்ளியில் இணைக்கத் தெரிந்தவர்கள் நிச்சயம் ஜெயிக்கலாம் “ என்று அவர் நிறைவுசெய்கிறார்.

SCROLL FOR NEXT