பிரசாத்
இது மீம்களின் உச்சக் காலம். காலை எழுந்ததிலிருந்து இரவு தூங்கச் செல்லும்வரை ஒருநாளில் குறைந்தது பத்து மீம்களையாவது நாம் கடந்துவிடுவோம். இன்னதுதான் என்றில்லாமல் அரசியல், சினிமா, சமூகப் பிரச்சினை, விளையாட்டு என்று வகைதொகையில்லாமல் அனைத்து நிகழ்வுகளும் செய்திகளாக மாறுகின்றனவோ இல்லையோ, மீம்களாக மாற்றப்பட்டுவிடுகின்றன!
ஒவ்வொரு காலகட்டத்திலும் குறிப்பிட்ட ஒரு காட்சி, வசனம் மீம்களின் ‘டெம்ப்ளேட்’ஆக வலம்வரும். கவுண்டமணி, வடிவேலு ஆகியோருடைய காட்சிகளும் வசனங்களும் மீம் கிரியேட்டர்களின் நிரந்தர டெம்ப்ளேட்டுகள். இந்த டெம்ப்ளேட்டுகளின் சமீபத்திய வரவாக இரண்டு ஆப்பிரிக்கச் சிறுவர்கள் (?) வலம்வரத் தொடங்கியிருக்கிறார்கள்.
வீடியோக்களில் அவர்களுடைய செய்கைகள், முகபாவங்களை டெம்ப்ளேட்டுகளாக்கி மீம்களை உலவவிட்டு வருகிறார்கள் மீம் கிரியேட்டர்கள். அவை உடனடியாக ஃபேஸ்புக், வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களிலும் வைரலாகின்றன. பார்த்தவுடன் சிரிப்பை வரவழைக்கும் முகத்தைக் கொண்டிருக்கும் அந்த இருவரையும் ரசிக்கும் அதே வேளையில் இந்தச் சிறுவர்கள் யார் என்ற கேள்வியும் சேர்ந்தே எழும்.
உண்மையில் அவர்கள் சிறுவர்கள் அல்ல! சிறுவர்களைப் போல் தோற்றம்கொண்ட அவர்கள், மத்திய வயதில் இருக்கும் நைஜீரிய நடிகர்கள். அகி அண்டு பா பா என்ற பெயரில் நகைச்சுவைத் திரைப்படங்களில் இணைந்து நடித்திருக்கும் இருவரின் உண்மையான பெயர் ஒஸிடா இஹிமி & சின்னெடு இகெடையீஸ். வீட்டில், பள்ளிக்கூடத்தில் ஏன் ஒட்டுமொத்தக் கிராமத்தையுமே தங்கள் சேட்டைகளால் திணறடிக்கும் சகோதரர்களாக. 2002-ல் வெளியான ‘அகி அண்டு பா பா (Aki and Paw Paw)’ என்ற நகைச்சுவைத் திரைப்படத்தின் மூலம் இருவரும் முதன்முதலாகச் சினிமாவில் காலடி எடுத்துவைத்தனர்.
பிறகு இந்த இணையின் படங்கள் தொடர்ச்சியாக ஹிட் அடிக்கவே புகழ்பெற்றனர். 10 வயதுச் சிறுவர்களுக்கே உரிய குறும்புத்தனங்களோடு துறுதுறுவெனத் திரைப்படங்களில் இவர்கள் செய்யும் சேட்டைகள் வெகு பிரபலம். அவற்றில் வெளிப்படும் பாவனைகளும் செயல்பாடுகளும் அட்டகாசமான ‘மீம் மெட்டீரி’யலாகத் தெரியவே களத்தில் இறங்கி அசத்திக்கொண்டிருக்கிறார்கள் மீம் கிரியேட்டர்கள். நைஜீரியாவில் மட்டுமே அறியப்பட்டிருந்த அகியும் பா பாவும் இன்றைக்கு உலகம் முழுக்கப் பிரபலமடைந்திருக்கிறார்கள்.இணைய உலா