இளமை புதுமை

விடைபெறும் 2019: இணையத்தைக் கலக்கிய வைரல்கள்!

செய்திப்பிரிவு

எல். ரேணுகா தேவி

இது இணைய ஆதிக்க காலம். வீடியோக்கள், ஒளிப்படங்கள், நிலைத்தகவல்கள், ஹாஷ்டேக்குகள் என எந்த விஷயம் விஸ்வரூபம் எடுத்து வைரல் ஆகும்; எந்த விஷயம் கரைந்துபோகும் என்பதையெல்லாம் கணிக்கவே முடியாது. இந்த ஆண்டும் வழக்கம்போல பல சங்கதிகள் வைரலாகி இணைய உலகைக் கலக்கின. அவற்றில் சில:

நேசமணியார்

தமிழக இளைஞர்கள் குறும்புக்காரர்கள் என்பதற்கு எடுத்துக்காட்டானது இந்த ஆண்டு அங்கிங்கெனாதபடி எங்கும் டிரெண்ட் அடித்த நேசமணி. பொறியாளர் ஒருவர் சுத்தியல் படத்தை ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இந்தப் பொருளின் பயன்பாடு என்ன என்று கேட்டார்.

அதற்கு நம் தமிழ் இளைஞர் ஒருவர் ‘இதன் பெயர் சுத்தியல், ஜமீன் பங்களாவில் நேசமணி வேலைசெய்துகொண்டிருந்தபோது அவர் தலையில் சுத்தியல் விழுந்து மயக்கமாகிவிட்டார்’ என ‘ப்ரெண்ட்ஸ்’ படத்தில் நடித்த நடிகர் வடிவேலுவின் கதாபாத்திரத்தைப் பதிவிட்டு #ப்ரேஃபார்நேசமணி என்ற ஹாஷ்டேக்கையும் சேர்த்தார்.

உடனே #ப்ரேஃபார்நேசமணி என்ற ஹாஷ்டேக் உலக அளவில் ஹிட் அடித்தது. கிரிக்கெட் வீரர்கள், சினிமா பிரபலங்கள் என யாரையும் நேசமணியார் விட்டுவைக்கவில்லை. பலரும் நேசமணிக்காகப் பிரார்த்தனைசெய்து அந்த ஹாஷ்டேக்கைப் பிரபலமாக்கினர். மோடி இரண்டாவது முறையாகப் பிரதமராகப் பதவியேற்றதைக்கூட நேசமணி ஓவர்டேக் செய்ததுதான் இதில் ஹைலைட்.

‘தல’ புராணம்

ட்விட்டர் வலைத்தளத்தில் தொடர்ச்சியாக ட்ரெண்டிங்கான பட்டியலில் நடிகர் அஜித்தின் ‘விஸ்வாசம்’ படம் முதலிடத்தைப் பிடித்தது. இந்த ஆண்டு பொங்கல் திருநாளையொட்டி ‘விஸ்வாசம்’ படம் வெளியானது. இப்படத்தை அஜித் ரசிகர்கள் ட்விட்டரில் #Visvasam என்ற பெயரில் பதிவிட்டு டிரெண்ட் ஆக்கினார்கள். அண்மையில் இந்தியாவில் 2019-ம் ஆண்டில் டிரெண்ட் ஆன பட்டியலை ட்விட்டர் வெளியிட்டது. அதில் #Visvasam ஹாஷ்டேக் முதலிடம் பிடித்துள்ளது. நாடாளுமன்றத் தேர்தலைக்கூட இது பின்னுக்குத் தள்ளிவிட்டது.

கோபேக் மோடி

இந்த ஆண்டும் வழக்கம்போல தமிழகத்தில் ‘கோபேக் மோடி’ ஹாஷ்டாக் இணையத்தில் ஹிட் அடித்தது. கோபேக் மோடி இணையத்தில் வைரலானால், பிரதமர் தமிழகத்தில் இருக்கிறார் என மற்றவர்கள் உணரும் வகையில் அந்த வார்த்தை இணையத்தில் பிரபலமாகிவிட்டது. கோபேக் மோடி பாகிஸ்தானிலிருந்து டிரெண்ட் செய்யப்படுவதாக எதிர்க் கருத்துகளும் முன்வைக்கப்பட்டன.

எங்கப் புள்ளிங்கோ

புள்ளிங்கோ என்ற வார்த்தை இந்த ஆண்டு இணையத்தில் அதிரடியாக வந்துசேர்ந்தது. சென்னை இளைஞர்களின் மற்றொரு அடையாளமாகவே மாறிவிட்ட ‘புள்ளிங்கோ’ என்ற வார்த்தைக்கு உபயம் தந்தார் வடசென்னையைச் சேர்ந்த கானா ஸ்டீபன். அவர் பாடிய பாடலில் வந்த சொல்தான் ‘புள்ளிங்கோ’. நண்பர்கள் என்ற அர்த்தம் கொண்ட இந்த வார்த்தை சமூக வலைத்தளத்தில் இப்போதும்கூட ஹிட். இந்த வார்த்தையின் புண்ணியத்தால் ஹேர் ஸ்டைல், டியோ பைக், க்ராக்ஸ் ஷூ போன்றவையும் பிரபலமாயின.

இசையால் விடுதலை

சினிமாவில் ஒரே பாடலில் பணக்காரர் ஆகி வாழ்க்கையே தலைகீழாக மாறுவதுபோல் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ராணு மோண்டல் என்பவர் பாடிய பாடல் வீடியோ அவரை ஒரே இரவில் பிரபலமாக்கியது. அந்தப் பாடல் இளைஞர்களை ஈர்க்க, சமூக ஊடகத்தில் டிரெண்ட் ஆனது. ஒரு வேளை உணவுக்காக ரயில் நிலையங்களில் பாடி வந்த ராணு, தற்போது பிரபல பாடகிகளுக்குப் போட்டியாகக் களமிறங்கும் அளவுக்கு அந்த வைரல் அவரை நாயகியாக மாற்றிவிட்டது.

சாப்பாடுதான் முக்கியம்

“உனக்கு சங்கம் முக்கியமா, சாப்பாடு முக்கியமா” என்ற கேள்விக்கு “சாப்பாடுதான் முக்கியம்” எனப் பதிலளித்த தமிழகச் சிறுவன் பிரனவின் வீடியோ இணைய உலகை வலம்வந்து பெருமை சேர்த்தது. அதேபோல குழந்தைகள் தவறுசெய்தால் அடிக்காமல் “குணமா வாயில சொல்லனும்” என்ற ஸ்மித்திக்காவின் அழுகை கலந்த வேண்டுகோளும் இணையத்தைச் சுற்றி வந்தது. இந்த இரு வீடியோக்களின் வைரலும் பெற்றோரைச் சிந்திக்க வைக்கும் அளவுக்கு இருந்தது.

சீனத்துத் தேவதைகள்

சீன அதிபர் ஷி ஜின்பிங்கின் மாமல்லபுர வருகை தமிழகத்தில் வரலாற்று முத்திரையைப் படைத்தது. அவருடைய பெயருடன் சேர்ந்து சீனாவிலிருந்து வந்திருந்த சீன வானொலிப் பெண் அறிவிப்பாளர்கள் சுத்தமான தமிழ்ப் பேச்சால் தமிழர்களின் மனம் கவர்ந்தனர். இவர்கள் அளித்த தமிழ் பேட்டிகள் இணையத்தைக் கலக்கின.

பேரைக் கேட்டா அதிருதுல்ல

விங் கமாண்டர் அபிநந்தன் வர்த்தமான் இந்த ஆண்டு இணையத்தை ஒரு கலக்கு கலக்கினார். புல்வாமா தாக்குதலுக்குப் பதிலடியாக பாகிஸ்தான் எல்லைக்குள் நுழைந்து தாக்குதல் நடத்திவிட்டுத் திரும்பும்போது விமானம் பாகிஸ்தான் எல்லைக்குள் விழுந்ததால், பாகிஸ்தான் ராணுவம் அவரைக் கைதுசெய்தது. அபிநந்தனின் வீரச் செயல் உலகின் கவனத்தை ஈர்த்தது.

அவருடைய பெயரிலான ஹாஷ்டேக்குகள் எண்ணிக்கையை எகிறடித்தன. அபிநந்தனின் மீசையைத் தேசிய மீசையாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கைகூட எழுந்தது. அபிநந்தன் என்ற பெயரை ஃபேஸ்புக்கில் தட்டச்சு செய்தபோது பலூன்கள் பறந்தன. 75 மணி நேரத்தில் அபிநந்தன் விடுவிக்கப்பட்டார். அவருடைய பெயர் சமூக ஊடகங்களில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

உரக்கச் சொல்லுவோம்

பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் குறித்துத் தொடங்கப்பட்ட மீடூ இயக்கம் இந்த ஆண்டும் அதிர்வலையை ஏற்படுத்தியது. கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் அந்த வார்த்தை இணையத்தில் முன்னணியில் இருந்தது. பாலியல் அத்துமீறல் குறித்த செய்திகளை வெளிப்படையாக இந்த இயக்கத்தின் வழியாகப் பெண்கள் வெளிப்படுத்தினர். தமிழகம் மட்டுமல்லாமல் இந்திய அளவிலும் #MeToo கவனம் பெற்றது.

மறக்க முடியுமா?

கேலி, கிண்டல், மகிழ்ச்சி, நெகிழ்ச்சி என எத்தனையோ வைரல்கள் இணைய உலகை ஹிட் அடித்ததுபோலவே ஒரு சோகமான நிகழ்வும் இணையத்தில் தொடர்ந்து 3 நாட்களுக்கு முன்னணியில் இருந்தது. திருச்சி மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்து மரணமடைந்த 2 வயது குழந்தை சுஜித் வில்சன்தான் அது. குழந்தை நலமாக மீள வேண்டும் என்பதற்காக #PrayforSujith என்று இணையவாசிகள் இட்ட ஹாஷ்டேக் இணைய உலகை உருகவைத்தது.

SCROLL FOR NEXT