பிரபல சமூக ஊடகத் தளமான இன்ஸ்டாகிராம், ‘லைக்’ தேர்வு பொத்தானை அனைவரும் பார்க்க முடியாதபடி மறைப்பதற்குத் திட்டமிட்டுள்ளது. இன்ஸ்டாகிராமின் தலைவர் அதம் முஸ்ஸேரி, சமூக ஊடகங்களில் இளைஞர்கள் உணரும் மன அழுத்தத்தைக் குறைப்பதற்காக இந்த முயற்சியை எடுத்திருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
இந்த ‘லைக்’ தேர்வு பொத்தானை மறைக்கும் பரிசோதனை முயற்சி நவம்பர் 14 முதல் அமெரிக்காவில் தொடங்கப்பட்டது. இந்த முயற்சி உலகம் முழுவதும் உள்ள இன்ஸ்டாகிராம் பயனாளிகளின் கணக்குகளிலும் படிப்படியாகச் செயல்படுத்தப்பட்டிருக்கிறது. இந்தப் பரிசோதனை முயற்சியின் சிறப்பம்சமே, உங்களால் மற்றவர்களின் பதிவுகளுக்கு விருப்பக் குறியிட முடியும். ஆனால், அவற்றின் மொத்த எண்ணிக்கையைப் பார்க்க முடியாது. தங்கள் பதிவுகளுக்குக் கிடைக்கும் ‘லைக்’ எண்ணிக்கையை மற்றவர்களுடன் ஒப்பிட்டுப் பார்த்து மன அழுத்தத்துக்கு உள்ளாவதைத் தவிர்க்க இன்ஸ்டாகிராம் நிறுவனம் இந்தப் பரிசோதனை முயற்சியை முன்னெடுத்துள்ளது.
இந்தப் பரிசோதனை முயற்சிக்கு ஆஸ்திரேலியா, கனடா, பிரேசில், அயர்லாந்து, இத்தாலி, ஜப்பான், நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகளில் வரவேற்புக் கிடைத்துள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. போட்டிக்கான ஓர் இடமாக இல்லாமல், நல்ல பதிவுகளைப் பகிர்ந்துகொள்ளும் ஒரு தளமாக மட்டும் இன்ஸ்டாகிராம் இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுவருவதாக அந்நிறுவனம் கூறியுள்ளது.
‘எவ்வளவு லைக் கிடைக்கிறது என்பதைப் பற்றி வருத்தப்படாமல், உங்கள் மனதுக்குப் பிடித்த விஷயங்களைப் பகிர்ந்துகொள்வதில் மட்டும் நீங்கள் கவனத்தைத் செலுத்தலாம்’ என்று அறிவித்துள்ளது அந்நிறுவனம். இது முழுக்க முழுக்க இளைஞர்களின் மனநலனைக் கருத்தில்கொண்டு எடுக்கப்பட்டிருக்கும் நடவடிக்கை என்று சமீபத்தில் நடைபெற்ற ‘வையர்ட் 25’ தொழில்நுட்பக் கருத்தரங்கில் இன்ஸ்டாகிராமின் தலைவர் அதம் முஸ்ஸேரி தெரிவித்திருத்திருந்தார். இந்த நடவடிக்கையை, உலகம் முழுவதிலுமே சிலர் வரவேற்றிருக்கிறார்கள்; சிலர் விமர்சித்திருக்கிறார்கள்.
- கனி