இளமை புதுமை

மனசு போல வாழ்க்கை 17: கடந்த கால கசப்பை மறந்துவிடுங்கள்!

செய்திப்பிரிவு

டாக்டர் ஆர். கார்த்திகேயன்

நோய்களின் ஆதாரம் - அழுத்தி வைக்கப்பட்ட கசப்பான உணர்வுகள். நமக்கு ஒவ்வாத, தேவையில்லாத, நன்மை தராத அனைத்து எதிர்மறை உணர்வுகளையும் நமக்கே தெரியாமல் தேக்கி வைத்துள்ளோம். அவை ஆழ்மனதில் பத்திரமாகச் சேமிக்கப்பட்டு காலம் காலமாக நம்மை ஆட்டிப்படைக்கும்.

அதன் இயற்பியல் உருமாற்றம்தான் உடல் வழியாகத் தோன்றும் உபாதைகள். நல்ல உணர்வுகளை எளிதில் கடந்து விடுகிறோம். ஆனால், மோசமான உணர்வுகளை என்ன செய்வது என்று தெரியாமல் தத்தளிக்கிறோம். பல நேரம் அவற்றைப் பதப்படுத்தாமல், வெளிக்காட்டாமல் மென்று விழுங்கி உள்ளேயே பதுக்கிவிடுகிறோம். அவற்றை கேடயங்கள்போல் அவ்வப்போது எடுத்துப் பார்த்துப் பெருமைப்படுவோம் என்பதுதான் விநோதம்.

“அன்னைக்குப் பட்ட அவமானத்தை எந்த ஜென்மத்திலும் மறக்க மாட்டேன். கொட்டற மழையில என்னை குடும்பத்தோட வெளியே துரத்தினாங்க...” “எனக்குத் தர வேண்டிய பாகத்தை எங்க அக்காவுக்கு எழுதி வச்சிட்டாரு. நானும் அவர் பெத்த மகன் தானே? அக்காவுக்கு நான் செஞ்சத யாரும் மதிக்கல. கடைசில அவங்க கொடுத்தத வாங்கிட்டு பேசாம வந்தேன். இன்னிக்கும் அந்த வீட்டை பாத்தா பத்திகிட்டு வரும். அதைத்தான் இன்னமும் ஜீரணிச்சுக்க முடியலை...”

“ஒவ்வொரு முறையும் பாஸ் என்னை கூப்பிட்டு திட்டும் போதும் அமைதியா கேட்டுப்பேன். மறு வார்த்தை பேசினதில்லை. “உனக்கு சொரணையே கிடையாதா?’’ன்னுகூட கேப்பார். நான் சிரிச்சிட்டே நிப்பேன். ஆனால், இருபது வருஷமா அவர் என்ன சொல்லித் திட்டினார், எப்படி என்னை கேவலமா நடத்துனாருன்னு ஒவ்வொரு வார்த்தையும் நெஞ்சில இருக்கு. அந்த ஆளை மன்னிக்கவே மாட்டேன் சார்!”

இப்படி அவமானம், துக்கம், பொறாமை, துரோகம், வஞ்சம், ஆற்றாமை, கோபம், குற்றஉணர்வு என ஏதோ ஒன்றை (அல்லது கூட்டு உணர்வுகளை) கேடயங்கள்போல் சேமித்து வைத்துக்கொள்கிறோம். காலம் கடந்தாலும், மனிதர்கள் மறைந்தாலும், சூழல் மாறினாலும் இந்தக் காயங்கள் ஆறாமல் உள்ளேயே இருக்கும். அதன் வலிமையும் வீரியமும் உங்களுக்குத் தெரியாது. இவைதான் வார்க்கப்பட்ட இறுகிய எண்ணங்களை உருவாக்குகின்றன. நடத்தையை மாற்றும். உடல் உறுதியைக் கெடுக்கும். நோய் வரக் காரணமாகும்.

அதனால் இதைச் சரிசெய்யாமல் உங்களால் மன மாற்றத்தையோ உடல் நலத்தையோ பேண முடியாது. அதற்கு என்ன செய்ய வேண்டும்? பாத்திரத்தில் கெட்டுப் போன உணவு இருந்தால் என்ன செய்வீர்கள்? அதை வழித்து வெளியே போட்டுவிட்டு, பாத்திரத்தைச் சுத்தமாகத் துலக்கி கவிழ்த்து வைப்பீர்கள் அல்லவா? அதையேதான் செய்ய வேண்டும், உங்கள் உடலிலும் செய்ய வேண்டும்.

நேற்றைய உணவுக் கழிவை வெளியேற்றிய பின்னர்தான், இன்றைய உணவை எடுத்துக்கொள்கிறோம். மனக்கழிவுகளுக்கும் இதே முறைதான் தேவைப்படுகிறது. பல ஆண்டுகளாக உள்ளே வைத்து கெட்டுப் போன உணர்வுகளை வெளியேற்ற வேண்டும். பிறகு ஆரோக்கியமான உணர்வுகள் உட்புக அங்கு இடம் கொடுக்க வேண்டும். உள்ளே ஆண்டுக்கணக்காக புழுங்கி, அழுகிக் கிடக்கும் அடைப்பட்ட உணர்வுகளை வெளியேற்ற வேண்டும்.

இதைத்தான் ‘Release Technique’ என்று சொல்லுவார்கள். லெஸ்டர் லெவன்சென் உருவாக்கிய இந்த சிகிச்சை முறையில் உள்ளே மண்டிக்கிடக்கும் உணர்வுகளை வெளியேற்றுதல்தான் நோய் குணமாகச் செய்யும் சிகிச்சை.
உணர்வுகளும் எண்ணங்களும்தான் உடலைப் பாதிக்கின்றன என்பது உண்மையானால், அந்த உணர்வுகளையும் எண்ணங்களையும் மாற்றினால் உடல்நிலை மாறும்தானே? உள்ளே சிக்கிக்கொண்டு உபாதை தரும் உணர்வுகளை வெளியேற்றி விடுதலை பெறுதல் அவசியம் என்று சொல்கிறது இந்த வழிமுறை.

கடந்த காலத்தின் பாடங்கள் மட்டும் போதும். கடந்த காலக் கசப்புகள் வேண்டாம். அந்த உணர்வுகளை தொடர்ந்து வாழ்ந்து பார்ப்பதன் மூலம், நீங்கள் கடந்த காலத்திலேயே சிக்குண்டு கிடக்கிறீர்கள். கழுத்து ஒரு முறைதான் அறுபட்டிருக்கும். ஆனால், ஒவ்வொரு முறையும் நீங்கள் கற்பனைசெய்து பார்க்கும்போது உங்கள் உடலையும் மனத்தையும் மீண்டும் சித்ரவதைக்கு உள்ளாக்குகிறீர்கள். நம்முள் ஆறாமல் இருக்கும் உணர்வுகளை ஆற்ற முதல் வழி அவற்றை வெளியேற்றுவதுதான். எப்படி? அதைத்தான் தொடர்ந்து சொல்லிக்கொடுத்து வருகிறேனே! ஆமாம்; `அபர்மேஷன்’தான்!

“என் சிறு வயது அவமான உணர்வுகளை வெளியேற்றுகிறேன்!”
“என் திருமணத்துக்கு தடையாக இருக்கும் அனைத்து கசப்பான உணர்வுகளையும் வெளியேற்றுகிறேன்.”
“என் நோய்க்குக் காரணமான அனைத்து அடைக்கப்பட்ட உணர்வுகளையும் வெளியேற்றுகிறேன்!”
கடந்த காலத்தை நீங்கள் மனதளவில் கடக்கவில்லை என்றால், கடந்த காலத்தைத்தான் உங்கள் எதிர்காலமாக மாற்றிக்கொள்வீர்கள்!

கட்டுரையாளர் தொடர்புக்கு:
gemba.karthikeyan@gmail.com

SCROLL FOR NEXT