இளமை புதுமை

ரோபோ கல்யாண வைபோகமே

விதின்

அது ஒரு திருமண விழா. ஜப்பான் நாட்டில் நடந்தது. கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு டோக்கியா நகரின் மையப் பகுதியில் உள்ள அயோமா கே என்னும் வணிக வளாக மையத்தில் மக்கள் கூடியிருந்தார்கள். அங்குப் பாரம்பரிய கிறிஸ்துவ முறையிலான திருமணத்துக்கு ஏற்பாடுகள் நடந்துகொண்டிருந்தன. மாப்பிள்ளை வீட்டாரும் பெண் வீட்டாரும் பரபரப்பாக அலைந்துகொண்டிருந்தார்கள்.

மணமகன் தயாராக வந்து மேடையில் காத்திருந்தார். அவர் கோமாளியைப் போல இருந்தார். அவரின் பெயர் ஃப்ரோய்ஸ். குண்டான உடல் வாகு. பிளாஸ்டிக் வாளியைக் கவிழ்த்தது போலத் தலை. ஸ்பீக்கர் காது. சிப் வாய். ஆனாலும் சிவப்பு நிறத்தில் அழகாக இருந்தார். பெண், எல்லா ஜப்பானிய பெண்களைப் போலவும் பனியில் செய்த சிற்பமாக அன்ன நடை நடந்து மேடைக்கு வந்தாள். இப்போது பூத்த பூ போல சிரித்துக்கொண்டிருந்தாள். மெழுகுச் சிலை போல அல்ல; மெழுகுச் சிலையாகவே இருந்தாள். அந்தப் பெண்ணின் பெயர் ரோபோரின்.

இந்தப் புதுமணத் தம்பதியர் இருவருக்கும் வயது ஒன்றுதான்; திகைக்காதீர்கள். ஒரு வயதுக் குழந்தைகளுக்குக் கல்யாணம் செய்துவைப்பது நியாயமா என்கிறீர்களா? சரிதான். ஆனால் இது ஒரு வினோதக் கல்யாணம். மழையும் பெய்து, வெயிலும் அடித்தால் காட்டுக்குள் நரிக்கும் நரிக்கும் கல்யாணம் நடக்கும் என்பார்களே, அதுபோல சுவாரசியமான கல்யாணம் இது. ஃப்ரோய்ஸ் - ரோபோரின் என்ற இரு ரோபோக்களுக்கு நடந்த கல்யாணம்தான் இது.

மாயாவா டெங்கி நிறுவனத்தினர்தான் மாப்பிள்ளை வீட்டார். அதாவது ஃப்ரோய்ஸ் ரோபோவை வடிவமைத்தவர்கள். பெண் வீட்டார் டக்காயாக்கி டொடோ. ரோபோரின் உண்மையான பெயர் ஆன்ராய்டு யுக்கரின். இந்தக் கல்யாணத்துக்காக அவள் பெயரை மாற்றிக்கொண்டாள். ரோபோ கல்யாணம் என்றதும் அவ்வளவு விளையாட்டாக நினைக்க வேண்டாம். மரபுத் திருமணத்துக்கான எல்லாச் சடங்குகளும் உண்டு. பெப்பர் என்னும் ரோபோதான் மத போதகராக இருந்திருக்கிறது.

மணமக்கள் இருவரும் சம்மதம் சொல்லி இருக்கிறார்கள். மாப்பிள்ளை ஃப்ரோய்ஸ் வெட்டிங் கேக் வெட்டியிருக்கிறார். ரோபோரினுக்கு முத்தம் கொடுக்கத்தான் மாப்பிள்ளை சிரமப்பட்டுவிட்டார். பாம்பின் நாக்குபோல வெளியே நீளும் அவர் இதழை ஒருவர் இழுத்து மணமகள் இதழுடன் சேர்க்க வேண்டியதாகிவிட்டது. அதுவும் சுவாரசியம்தான். இவை மட்டுமல்ல இரு ரோபோக்களின் நண்பர்களான ரோபோக்கள் மேடையில் வந்து நடனம் ஆடியிருக்கிறார்கள்.

இறுதியில் விருந்தினர்களுக்கு அருமையான விருந்து பரிமாறப்பட்டுள்ளது. எல்லோரும் மணமக்களுடன் ஒளிப்படம் எடுத்துக்கொண்டனர். உலக அளவிலான பத்திரிகைகளும் போட்டிபோட்டு ஒளிப்படங்களை எடுத்தார்கள். உலக அளவில் முதலும் முக்கியத்துவம் வாய்ந்ததுமான அந்தத் திருமணம் இனிதே நடந்துமுடிந்தது. அடுத்த வருடம் ரோபோ குட்டி பிறக்குமா என்பதுதான் இப்போ கேள்வி?

SCROLL FOR NEXT