சும்மா அதிருதுல்ல
ஃபேஸ்புக்கில் லைக்குகளை எதிர்பார்த்து பலர் போடும் சில சாதாரண ஃபோட்டோக்களைப் பார்த்தாலே நாம் ஷாக்காகிவிடுவோம். ஆனால் பார்ப்போரை எல்லாம் ஷாக்காக்கும் ஃபோட்டோ ஒன்று கடந்த வாரம் ஃபேஸ்புக்கில் அப்லோட் ஆகியிருக்கிறது. சமூகத்தில் தங்கள் முகத்தைக் காட்ட விரும்பாத, தடை செய்யப்பட்ட தீவிர இயக்கத்தைச் சேர்ந்த காஷ்மீர் தீவிரவாதிகள் பதினோறு பேர் அந்த ஃபோட்டோவில் இடம்பெற்றிருக்கிறார்கள்.
பதினோறு பேர் ஆயுதங்களைத் தாங்கியபடி இருக்கும் ஃபோட்டோ ஃபேஸ்புக்கை மிரட்டிவிட்டது. இந்த ஃபோட்டோ தெற்கு காஷ்மீரில் வைத்து எடுக்கப்பட்டிருக்கலாம் என்று அதிகாரிகள் கூறியிருக்கிறார்கள். இரண்டு நாட்களில் இந்த ஃபோட்டோ அகற்றப்பட்டுவிட்டது என்றாலும் தீவிரவாதிகளின் இந்தச் செயலால் அரசு அதிர்ந்திருக்கிறது.
மாம்பழத் திருவிழா
மாதா ஊட்டாத சோற்றை மாம்பழம் ஊட்டும் எனச் சொல்வார்கள். முக்கனியில் ஒன்றான மாம்பழத்தைப் பெரும்பாலானோருக்குப் பிடிக்கும். நன்கு பழுத்த மாம்பழத்தைச் சாறு கைகளில் வடிய வடிய உறிஞ்சி சாப்பிடுவதின் சுகத்துக்கு நிகரான சுவையே இல்லை என்றே சொல்லலாம். மாம்பழப் பிரியர்களுக்காகவே ஆண்டுதோறும் டெல்லியில் மாம்பழத் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டும் கடந்த ஜூலை 3 முதல் 5 வரை 27-வது சர்வதேச மாம்பழத் திருவிழா நடைபெற்றது. சுமார் 600 வகை மாம்பழங்கள் இதில் இடம்பெற்றிருந்தன. சுகர் ஃப்ரீ மாம்பழ வகையெல்லாம்கூட இந்தத் திருவிழாவில் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்ததாம்.
பணக்கார ஜுவல்லர்
கல்யாண் ஜுவல்லர்ஸ்னாலே அதன் விளம்பரங்கள்தான் நினைவுக்கு வந்து நம்மை மிரட்டும். சென்னையில் கல்யாண் ஜூவல்லர்ஸ் திறக்கப்பட்டபோதும் அதன் பின்னரும் வெளியான விளம்பரங்களைக் கிண்டல் செய்து வாட்ஸ் ஆப்பில் வலம் வந்த செய்திகள் ஏராளம். ஆனால் இதைப் பற்றி எல்லாம் கவலைப்படாத கல்யான் ஜூவல்லர்ஸ் அதிபர்தான் இந்தியாவிலேயே பணக்கார ஜுவல்லராம். 1993-ல் சுமார் ஆறு கோடியே 35 லட்சத்தில் வியாபாரத்தைத் தொடங்கிய இவரது நிறுவனத்தின் இப்போதைய மதிப்பு எவ்வளவு தெரியுமா? 8,244 கோடியாம்.
ஃபேஸ்புக்கால் சேர்ந்த தாயும் மகனும்
கடந்த காலத்தில் தவறவிட்ட நண்பர்களை ஏராளமானோர் ஃபேஸ்புக் உதவியால் கண்டுபிடித்திருக்கிறார்கள். இது உலகம் முழுக்க நடந்திருக்கிறது. ஆனால் அமெரிக்காவில் பதினைந்து வருஷமாக ஒருவரையொருவர் பிரிந்திருந்த தாயும் மகனும் ஃபேஸ்புக்கால் சேர்ந்திருக்கிறார்கள். தமிழ்ப் படத்தில் சிறு வயதில் ரயிலில் தாயைப் பிரிந்து பெரியவனான பின்னர் சந்திக்கும் பல மகன்களைக் கண்ட கதை போல் இருக்கிறதா?
15 வருடங்களுக்கு முன்னர் சொந்த தந்தையால் கடத்தப்பட்டு மெக்ஸிகோவில் இருந்திருக்கிறார் அந்த மகன். சிறு வயதில் தன் தாய் எடுத்த ஃபோட்டோ ஒன்றை ஃபேஸ்புக்கில் அப்லோட் செய்திருக்கிறார். இதை எதேச்சையாக அவருடைய தாய் பார்த்துவிட்டார். பிறகென்ன பிரிந்த தாயும் மகனும் சேர்ந்துவிட்டார்கள். படிப்பை முடித்துவிட்டு கலிஃபோர்னியா வரச் சம்மதித்துவிட்டார் அந்த மகன்.