சைபர்சிம்மன்
இணையத்தில் என்ன செய்வது என்ற கேள்விக் கான, சுவாரசியமான பதிலாக 1995-ல் ‘மேட்ச்.காம்’ அறிமுகமானது ‘டேட்டிங்’ வசதியை இணையத்துக்கு கொண்டுவந்த முன்னோடி இணையதளம் இது. இன்று இணைய ‘டேட்டிங்’ என்பது சர்வ சாதாரணம். ஆனால், ‘மேட்ச்.காம்’ ஆன்லைன் டேட்டிங்கை அறிமுகம் செய்தபோது, அது புதுமையாகவும் சவாலானதாகவும் இருந்தது. ‘மேட்ச்.காம்’ நிறுவனர் க்ரிமென் (Kremen), அமெரிக்கர்களை இணைய ‘டேட்டிங்’கில் அடியெடுத்து வைக்க நிறைய மெனக்கெட வேண்டியிருந்தது.
1990-களின் தொடக்கத்தில்தான் இணையம் பொதுமக்களுக்கு அறிமுகமாகி, மெல்ல வளர்ந்து கொண்டிருந்தது. இந்தச் சூழலில் தான் க்ரிமெனுக்கு வாழ்க்கைத் துணை தேடுபவர்கள் தங்கள் எதிர்பார்ப்புக்கு ஏற்ற நபர்களை கண்டடைய இணையத்தைப் பயன்படுத்தலாமே என்ற எண்ணம் தோன்றியது. அதாவது, ‘டேட்டிங்’ சேவையை இணையம் வழி சாத்தியமாக்கும் சிந்தனை பளிச்சிட்டது.
அப்போது இது, புதுமையான யோசனையாக அமைந்தது. “ஒரு நாள் குளித்துக்கொண்டிருக்கும் போது இந்த யோசனை தனக்கு வந்ததாக” க்ரிமென் பின்னர் ஒரு பேட்டியில் கூறினார். மற்ற பல இணைய சேவைகளைப் போலவே, இதுவும் க்ரிமெனின் தனிப்பட்ட தேவையால் பிறந்த யோசனைதான். ஆம், க்ரிமெனும் அப்போது தனக்கான துணையைத் தேடிக்கொண்டிருந்தார். இதற்காக ‘டேட்டிங்’ தகவல்களை வழங்கிய 900 எண் தொலைபேசி சேவை, நாளிதழ் விளம்பரங்கள், வீடியோ சேவைகள் ஆகியவற்றில் அவர் சந்தாதாரராக இருந்தார். இந்த சேவை எதுவுமே, அவருக்கு திருப்தி அளிக்கவில்லை. அப்போதுதான் இதற்கென தனி இணையதளம் இருந்தால் எப்படி இருக்கும் எனத்தோன்றியது.
பொருத்தமான துணை தேடுபவர் கள், இந்த இணையம் வாயிலாக தங்களுக்குப் பிடித்தமானவர்களை விளம்பரம் மூலம் தேடலாம். அதிக செலவு இல்லாமல், தங்களைப் பற்றிய அதிக தகவல்களை வெளிப்படுத்திக்கொள்ளாமல், பொருத்தமானவர்களைத் தேடலாம். 1993-ல் இந்த எண்ணம் தோன்றியதுமே, ‘மேட்ச்.காம்’ இணைய முகவரியை வாங்கிவைத்தார்.
வளர்ந்துவந்த இணையத்தின் ஆற்றல் மீது அவருக்கு இருந்த நம்பிக்கையால் வாங்கிவைத்தார். 1995 ஏப்ரல் மாதம் இந்த இணையதளம் அறிமுக மானது. எடுத்த எடுப்பிலேயே இந்தத் தளம் இணையவாசிகளை ஈர்த்தது. ‘டேட்டிங்’ துணையைத் தேடும் வகையில், தங்களைப் பற்றிய தகவல்களை பதிவேற்றுவதும் இத்தகைய பட்டியலில் இருந்து பொருத்தமானவர்களை தேடுவதும் ஈர்ப்புடையதாக இருந்தது.
ஆனால், இதில் சிக்கல் இல்லாமல் இல்லை. ‘துணை தேவை’ எனும் விருப்பத்தை வெளியிடுவதில் பலருக்கும் தயக்கம் இருந்தது. தகவல் பாதுகாப்பு குறித்த கவலையும் இருந்தது. மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்ற சந்தேகமும் இருந்தது. இந்தத் தயக்கங்களை க்ரிமெனும் புரிந்துகொண்டார். இதற்குத் தீர்வாக பெண் உறுப்பினர்களை ஈர்க்க ஆர்வம் காட்டினார்.
பெண்களை நம்பவைத்துவிட்டால், அவர்களைப் பின்தொடர்ந்து ஆண்கள் வருவார்கள் என அவர் நம்பினார். அதற்கேற்ப பெண்களுக்கான பாதுகாப்பு அம்சங்களை அளித்தார். அவர் எதிர்பார்த்தது நடந்தது. அடுத்த சில மாதங்களில், ‘மேட்ச்.காம்’ வரவேற்பைப் பெற்றது. அதைத் தொடர்ந்து பல இணைய டேட்டிங் சேவைகள் அறிமுகமாகின. ஒவ்வொன்றும் புதுமையான வழியைப் பின்பற்றின.
(வலை வீசுவோம்)
கட்டுரையாளர் தொடர்புக்கு: narasimhan@gmail.com