சைபர்சிம்மன்
ஒரு மின்னஞ்சல் பட்டியலை வைத்து என்ன செய்ய முடியும்? ஒரு மாபெரும் வர்த்தக சாம்ராஜ்ஜியத்தையே உருவாக்கிவிடலாம் தெரியுமா? இணையத்துக்கு வரி விளம்பரத்தைக் கொண்டுவந்த ‘கிரேக்லிஸ்ட்’ தளமே இதற்கு உதாரணம்.
இணையமும் வலையும் வர்த்தகமயமானதாகக் கருதப்படும் 1995-ம் ஆண்டில்தான் ‘கிரேக்லிஸ்ட்’ சேவையைத் தொடங்கினார் அமெரிக்கரான கிரேக் நியூமார்க். பின்னாளில் அதுவே இணையத்தில் வரிவிளம்பர சேவைக்கான தொடக்கமாக அமைந்து, நாளிதழ்களின் வருவாய்க்கு வேட்டு வைத்தது. அதே வேளையில் சாமானியர்களுக்கான வருவாய் ஆதாரமாகவும் மாறியது..
அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோவில் கணினி நிழல் பொறியாளராக 18 ஆண்டுகள் பணியாற்றினார் கிரேக். அவர் புதிய நகரை அறிமுகம் செய்வதிலும், இணைய பயன்பாட்டை மற்றவர்களுக்குப்
புரியவைப்பதிலும் ஆர்வம் காட்டிவந்தார். நகரில் நடக்கும் நிகழ்வுகளைப் பட்டியல் இட்டு மின்னஞ்சலில் தனது நண்பர்களுக்கு அனுப்பிவைக்கத் தொடங்கினார். அவருடைய இந்த சேவைக்கு நண்பர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது. இதனால் மின்னஞ்சல் வட்டம் பெருகியது.
அப்போதுதான், தனது மின்னஞ்சல் பட்டியலுக்கு எதிர்பார்ப்பும் தேவையும் இருக்கிறது என்பதை கிரேக் உணர்ந்தார். அதற்கு முன்பே அவருடைய சேவைக்கு ‘கிரேக்லிஸ்ட்’ என நண்பர்கள் பெயர் சூட்டியிருந்தனர். எனவே, அதே பெயரில் பட்டியல் சேவையைத் தொடங்கினார். பின்னர் சேவையை மின்னஞ்சல் பட்டியலிலிருந்து இணையதளத்துக்கு மாற்றினார். நிகழ்வுகளையும் தகவல்களையும் வகைப்படுத்தி வெளியிட்டார். இது மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றது.
இணையத்தில் செயல்படும் வரி விளம்பரத் தளம்போல இந்த சேவை அமைந்தது. வழக்கமான வரி விளம்பர சேவையைவிட செலவு குறைந்ததாகவும் இருந்தது. இதனால் உள்ளூர் மக்கள் இந்த சேவையை நாடத் தொடங்கினர். இதனால் ‘கிரேக்லிஸ்ட்’ பிரபலமானது. பின்னர் அமெரிக்காவின் மற்ற நகரங்களுக்கும் சேவை விரிவானது. நாய்க்குட்டி முதல் வீடு விற்பனை வரை தேடல்களுக்கு ‘கிரேக்லிஸ்ட்’ பயன்பட்டது. இதனையடுத்து ‘கிரேக்லிஸ்ட்’ அமெரிக்காவைத் தாண்டி உலக அளவில் விரிவானது.
இந்த சேவையைப் பயன்படுத்தி கிரேக் பணத்தைக் குவித்திருக்கலாம். கிரேக் இதை செய்யவில்லை. கிரேக்லிஸ்ட் இணையதளம் பயனுள்ள சேவையாக இருக்க வேண்டும் என்றே விரும்பினார். இந்த எண்ணத்துடனேயே ‘கிரேக்லிஸ்ட்’ தளத்தையும், அதன் செயல்பாடுகளையும் எளிமையாகவே வைத்திருந்தார். அதுவே அந்த நிறுவனத்தின் வளர்ச்சிக்கும் உதவியாக இருந்தது. பி.கு: கிரேக்லிஸ்ட் தளம், சென்னை உள்ளிட்ட இந்திய நகரங்களிலிம் செயல்பட்டு வருகிறது.http://https://chennai.craigslist.org/
(வலை வீசுவோம்) கட்டுரையாளர் தொடர்புக்கு: narasimhan@gmail.com