சைபர்சிம்மன்
1995-ம் ஆண்டு இறுதியில் அல்டாவிஸ்டா அறிமுகமானது. இது முதல் தேடு இயந்திரம் அல்ல. அதற்கு முன்பே பல தேடு இயந்திரங்கள் அறிமுகமாகியிருந்தன. ஆனால், அல்டாவிஸ்டா முதல் முழு தேடு இயந்திரமாக அறியப்படுகிறது.
இணையம், வலை வடிவில் சாமானிய மக்களிடம் நெருக்கமாகி நாளுக்குநாள் வளர்ந்துகொண்டிருந்தபோது, அதில் இடம்பெறும் தகவல்களைத் தேடி எடுப்பது பெரும்பாடாக இருந்தது. இந்தச் சவாலைப் பட்டியலிட்டு, அவற்றிலிருந்து தகவல்களைத் தேடித்தரும் சேவை வலைத்தளங்கள் அப்போது அறிமுகமாயின.
ஆனால், வலை வளர்ந்த வேகத்துக்கு இவற்றால் ஈடுகொடுக்க முடியவில்லை. எனவே, புதிய நுட்பங்கள் உருவாக்கப்பட்டன. எக்ஸைட், இன்போசீக், லைகோஸ், வெப்கிராலர் உள்படத் தேடு இயந்திரங்கள் அறிமுகமாயிருந்தன. ஆனாலும், விரும்பிய தகவல்களைத் தேடுவது சிக்கலாகவே இருந்தது.
இந்தச் சூழலில்தான், 1995 டிசம்பரில் டிஜிட்டல் எக்யூப்மெண்ட் கார்ப்பரேஷன், அல்டாவிஸ்டா தேடு இயந்திரத்தை அறிமுகம் செய்தது. வலையைப் பகுதி பகுதியாகப் பட்டியலிட்டுக்கொண்டிருந்த தளங்களுக்கு மத்தியில், அல்டாவிஸ்டா முழு இணையத்தையும் பட்டியலிட்டு, சேமித்து வைத்து, அவற்றிலிருந்து தகவல்களைத் தேடித்தர முடிந்தது.
லூயி மோனியர், மைக்கேல் பரோஸ் (Louis Monier and Michael Burrows) ஆகிய மென்பொருள் நிபுணர்கள் அல்டாவிஸ்டா உருவாக்கத்தில் முக்கியப் பங்கு வகித்தனர். இணையத்தில் உள்ள எச்.டி.எம்.எல். பக்கங்களைத் தேடி எடுப்பதற்கான மென்பொருளை மோனியர் உருவாக்கினார். இணையச் சிலந்தியாகச் செயல்பட்ட இந்த மென்பொருள் ‘ஸ்கூட்டர்’ என அழைக்கப்பட்டது. இத்தகவல்களைப் பட்டியலிடும் மென்பொருளைப் பரோஸ் உருவாக்கினார்.
இந்த இரு நுட்பங்களும் சேர்ந்து அல்டாவிஸ்டாவைச் சிறந்த தேடல் சாதனமாக உருவாக்கின. மில்லியன் கணக்கான இணையப் பக்கங்களைத் தேடிக் கண்டெடுத்து, பட்டியலிட்டு வைத்திருந்த அல்டாவிஸ்டா, ஒவ்வொரு இணையப் பக்கத்திலிருந்த தகவல்களையும் சேமித்து வைத்திருந்தது.
இணைய விவாதக் குழுக்கள் தகவல்களையும் அது பட்டியலிட்டிருந்தது. இந்த அம்சங்களே அல்டாவிஸ்டாவை முதல் முழு தேடு இயந்திரமாக உருவாக்கின. அதன் தேடல் ஆற்றலை மீறி அல்டாவிஸ்டா எளிமையான முகப்புப் பக்கத்தையும் பெற்றிருந்தது. அல்டாவிஸ்டா அறிமுகம் ஆனபோது ‘சூப்பர் ஸ்பைடர்’ மூலம் இணையத்தில் சிறப்பாகத் தேடும் நுட்பம் என்றே வர்ணிக்கப்பட்டது. தனது தேடல் நுட்பம் பற்றிப் பெருமைப்பட்டுக்கொண்ட அந்த
டிஜிட்டல் நிறுவனம், இந்த நுட்பத்தை இலவச சேவையாகவே அறிமுகம் செய்தது.
குறுகிய காலத்தில் அது பெரும்பாலோர் பயன்படுத்தும் தேடு இயந்திரமானது. அந்தக் காலகட்டத்தில் முன்னணி வலைவாசலாக உருவாகியிருந்த யாஹு, அல்டாவிஸ்டா தேடல் சேவையை உரிமம் பெற்றுப் பயன்படுத்தியது. அல்டாவிஸ்டா பிரபலமான பிறகே, இணையத்தில் சிறப்பாகத் தேடுவது எப்படி எனும் வழிகாட்டிக் குறிப்புகள் பிரபலமாகின.
இத்தனை சிறப்புகளைப் பெற்றிருந்த அல்டாவிஸ்டா தேடு இயந்திரமாக நீண்ட காலம் நிலைக்கவில்லை. நிர்வாகக் கோளாறுகளால் தடுமாறிய அல்டாவிஸ்டா, பிறகு யாஹு நிறுவனத்தின் வசமானது. கூகுளின் எழுச்சிக்குப் பிறகு ஒரு கட்டத்தில் அல்டாவிஸ்டா மூடுவிழா கண்டது.
(வலை வீசுவோம்)
கட்டுரையாளர் தொடர்புக்கு: narasimhan@gmail.com