அன்று பிப்ரவரி 14, 2015. அந்தக் காதலர் தினத்தில், ஹைதராபாத் அக்சஞ்சரில் பணியாற்றிய சுப்ரியா விபரீதமான முடிவொன்றை எடுத்தார். அன்று அவருக்கு இரவுப் பணி. பகல் ஷிஃப்ட் முடித்து வீடு திரும்பிய தன் காதலுனுக்குக் காதலர் தின வாழ்த்து சொல்ல, நள்ளிரவு 12 அளவில் போனில் தொடர்புகொண்டார் சுப்ரியா.
எதிர்முனையில் பதிலேயில்லை. தொடர்ந்து முயன்றும் ஏமாற்றமே மிஞ்சியது. இருவருக்கும் ஏதோ பிரச்சினையாம். பொறுத்து, பொறுத்துப் பார்த்த சுப்ரியா, ஒரு கட்டத்தில் அலுவலகத்தின் 5 -வது மாடியிலிருந்து குதித்துவிட்டார். அந்த அளவுக்கு மன அழுத்தம். இது மாதிரி ஏராளமான சுப்ரியாக்கள் ஐ.டி. உலகில் உண்டு. நம்மூரிலும் முத்தையா, செண்பகம், அரவிந்த் என்று உறவுச் சிக்கலால் உயிரைவிட்டவர்கள் அநேகர்.
தற்கொலை எனும் சோகம்
கடந்த 2 ஆண்டுகளில் சென்னையில் மட்டுமே 30-க்கும் அதிகமான ஐ.டி. ஊழியர்கள் தற்கொலை, கொலை என்று இறந்துள்ளனர். தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் தகவல்படி கடந்த 2014-ம் ஆண்டில் நாடு முழுவதும் தற்கொலை செய்து கொண்டவர்களில் 4.7 சதவீதம் பேர் ஐ.டி. உள்ளிட்ட துறைகளைச் சேர்ந்த சம்பளதாரர்கள்.
ஊதியம், விடுப்பு, ஊதிய உயர்வு போன்ற பிரச்சினைகளுக்கு ஒரு தீர்வும், மாற்றும் இருக்கிறது. ஐ.டி.யில் வேலை போவதுகூடப் பரவாயில்லை, ஆனால், உயிர் போவதை எங்கு போய் சொல்வது. உறவுச் சிக்கல்கள் ஐ.டி.யில் பலரைத் தற்கொலைக்குத் தூண்டுகிறது.
உறவுச் சிக்கல் என்றதுமே காதல் சார்ந்த பிரச்சினைகள்தான் என்று பலரும் ஒரு முடிவுக்கு வந்து விடுகிறார்கள். ஆனால், காதலை தாண்டி ஒரு செக்யூரிட்டியைச் சமாளிப்பதில் தொடங்கி, மேனேஜருக்கு வணக்கம் சொல்வதுவரை ஏகப்பட்ட சிக்கல்கள் உள்ளன.
மேனேஜரால் பிரச்சினை
சமீபத்தில் திருமணம் செய்துகொண்ட தன் தோழி பற்றிய விஷயத்தைப் பகிர்ந்துகொள்கிறார் ஐ.டி. இளைஞர்கள் கூட்டமைப்பைச் சேர்ந்த பரணி.
“எனது தோழி மீது அவரது டீம் லீடருக்கு விருப்பம் இருந்தது. அவர் தனது விருப்பத்தைச் சொல்லப் போன நேரத்தில், திருமணப் பத்திரிகையை நீட்டிவிட்டார் தோழி. திருமண விடுப்பு முடிந்து தோழி அலுவலகம் திரும்பியபோது, அந்த டீம் லீடர் புராஜக்ட் மேனேஜராகப் பதவியுயர்வு பெற்றிருந்தார்.
கொஞ்ச நாட்கள் அமைதியாக இருந்த மேனேஜர், திடீரென ஒரு நாள் திருமணமானவர் என்றும் பாராமல் தனது விருப்பத்தைத் தோழியிடம் சொல்லிப் புலம்பியுள்ளார். பதற்றமான எனது தோழி மனித வள மேலாளருக்கு மின்னஞ்சல் அனுப்பினார். மனிதவள மேலாளரோ, ‘அவர் உயர் அதிகாரி. அவரைக் குறை சொல்லாதீர்கள். உங்களுக்குப் பிடிக்கவில்லை என்றால் அந்த புராஜக்ட்டிலிருந்து விலகிவிடுங்கள்’ என்று கூறியுள்ளார். உடைந்துபோன எனது தோழி பெரும் மன அழுத்தத்துக்கு ஆளானார்” என்கிறார் அவர்.
காதலும் சிக்கலாகும்
இது ஒருபுறம் என்றால் குழுவாகப் பணிபுரியும்போது நிறைய சிக்கல்கள் உருவாகின்றன என்கிறார் கார்த்திக் ரவிச்சந்திரன். நகரத்திலுள்ள கல்லூரிகளில் படித்தவர்களும் கிராமப்புறக் கல்லூரிகளில் படித்தவர்களும் ஒரே குழுவில் இருப்பார்கள். ஐ.டி. துறையின் சூழலுக்கு ஏற்ப சென்னைவாசிகளால் எளிதில் ஒத்துப்போக முடியும். மற்றவர்களுக்குக் கொஞ்சம் நாள் பிடிக்கும். அந்த இடைவெளியில் தனது குழுவில் சிலருக்குச் சிலர் மீது காதல் அரும்பிவிடும்.
காதலைச் சொன்னால் எங்கே வேலை போய்விடுமோ என்ற பயத்தில் சிலர் ஒளித்து வைத்துவிடுவார்கள். எனக்கும் அப்படி ஒரு அனுபவம் ஏற்பட்டது. உடன் பணிபுரியும் ஒருவருடன் காதல் அரும்பியபோது, வேலையைக் காத்துக்கொள்ள அதை மறைத்து வைத்தேன். சொல்லலாமா, வேண்டாமா என்று யோசித்த இடைவெளியில் அந்தப் பெண்ணுக்குத் திருமணமான இன்னொரு இளம் வயது அதிகாரி மீது காதல் வந்துவிட்டது.
என்னடா இது சோதனை என்று ஒரு நாள், என் காதலைச் சொன்னேன். அவரோ பேஸ்புக்கில் சீனியரை நினைத்து உருகி உருகி ஸ்டேட்டஸ் போட்டுக்கொண்டிருந்தார். சீனியருக்குக் குழந்தை பிறந்தபோது, கையைக் கிழித்துக்கொள்ளும் அளவுக்கு அவர் சென்று விட்டார். என்னால் வேலையில் கவனம் செலுத்தவே முடியவில்லை. வேறு வழியின்றி இப்போது அலுவலகமே மாறிவிட்டேன்” என்று நொந்துகொள்கிறார் கார்த்திக் ரவிச்சந்திரன்.
கார்த்திக்குக்குக் கிடைத்த மாதிரி எத்தனை பேருக்கு உடனடியாக இன்னொரு நிறுவனத்தில் வேலை கிடைத்துவிடும் என்பது பெரும் கேள்வியே.
தீர்வும் ஆலோசனையும்
“ஐ.டி. துறையில் எதிர்பார்ப்புகள் அதிகமிருக்கும். எதிர்பார்ப்புகள் இருக்கிற அளவுக்கு ஏமாற்றங்களும் அதிகமுள்ளன. ஏமாற்றங்களை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் இன்றைய தலைமுறையினருக்கு இல்லை” என்கிறார் மனோநல நிபுணர் மருத்துவர் ஜி.ராமானுஜம்.
ஐ.டி.யில் உள்ள உறவுச் சிக்கல்களுக்குக் காரணம் புரியாமைதான் என்பதையும், ஐ.டி. துறையினரிடையே மலரும் காதல் மற்றும் திருமண பந்தங்கள் உடனடியாக முடிவதற்கும், உறவுகளில் சிக்கல் ஏற்படுவதற்கும் தனிநபர் ஆதிக்கம்தான் காரணம் என்பதையும் அவர் சுட்டிக்காட்டுகிறார். “எந்த உறவுமே விட்டுக்கொடுத்தால் மட்டுமே நிலைத்திருக்கும். எதையும் பெரிதாக அலட்டிக் கொள்ளாமல், ரிலாக்ஸாக இருந்தால் இந்தப் பிரச்சினையைத் தீர்க்கலாம்” என்று தீர்வாகச் சொல்கிறார் ஜி.ராமானுஜம்.