இளமை புதுமை

வலை 3.0: அவன் வழி தனி வழி!

செய்திப்பிரிவு

சைபர்சிம்மன் 

அப்போது வலையின் ஆற்றலைப் பயன்படுத்திக்கொண்டு ஆன்லைன் புத்தக விற்பனையில் புதிய சக்தியாக உருவெடுத்திருந்தது அமேசான். புத்தக விற்பனையில் கொடி கட்டி பறந்த பார்னர்ஸ் & நோபல் நிறுவனத்துக்குக் கடும் போட்டியாளராகவும் இருந்தது. போட்டியைச் சமாளிக்கும் உத்தியாக அமேசானுடன் பேசிப் பார்த்தது பார்னர்ஸ் & நோபல் நிறுவனம். கூட்டு இணையதளம் நடத்துவது உள்ளிட்ட பல்வேறு யோசனைகளை அதன் நிறுவனர்கள் பெசோஸிடம் முன்வைத்தனர்.

ஆனால், பெசோஸ், ‘என் வழி தனி வழி’ எனப் பதில் சொல்லிவிட்டார். பெசோஸ் நிராகரிப்பால் ஆவேசம் அடைந்த பார்னர்ஸ் & நோபல் நிறுவனர்கள் ஆன்லைன் புத்தக விற்பனையைத் தொடங்குவோம்; அதன் பிறகு அமேசான் காணாமல் போய்விடும் என எச்சரித்தனர். ஆனால், பார்னர்ஸ் & நோபல் இணையத்தில் அடியெடுத்து வைத்தபோதும் அமேசான் வளர்ச்சியைத் தடுக்க முடியவில்லை. அதன் பிறகு அமேசான் பங்குகளை வெளியிட்டுப் பொது நிறுவனமாக உருவெடுத்தது.

அமேசான் என்ற பெயரைத் தேர்வுசெய்தபோது, பெசோஸ் பரந்து விரிந்த நதியைப் போலத் தனது நிறுவனமும் மிகப் பெரியதாக வளர வேண்டும் என ஆசைப்பட்டார். புத்தக விற்பனையிலிருந்து சிடிக்கள், வீடியோ கேம் போன்ற மற்ற பொருட்களுக்கு விரிவாக்கம் செய்து, படிப்படியாக முன்னேறினார். பின்னர் அனைத்துப் பொருட்களையும் விற்பனை செய்யும் உலகின் மிகப் பெரிய இணையக் கடையாக உருவானது.

இந்த வளர்ச்சியின் நடுவே அமேசான் பல சவால்களைச் சந்திக்க வேண்டியிருந்தது. அமேசான் வளர்ந்தாலும் லாபம் மட்டும் அதற்கு எட்டாக்கனியாகவே இருந்தது. தொடக்கத்தில் வளர்ச்சியைக் குறிவைத்து விரிவாக்கத்தில் கவனம் செலுத்தியதால், லாபம் ஈட்டுவது கடினமானது. வருவாய் அதிகரித்ததே தவிர லாபம் சாத்தியமாகவில்லை.
ஆனால், பெசோஸ் கவலைப்படாமல் வளர்ச்சியில் கவனம் செலுத்தினார்.

லாபம் வராவிட்டாலும், வளர்ச்சிக்கான வழிகளில் கவனம் செலுத்தினார். அமேசான் முதல் காலாண்டு லாபத்தைப் பார்க்கப் பல ஆண்டுகள் ஆனது. அதன் பிறகு உண்மையான லாபத்தைப் பார்க்க மேலும் சில ஆண்டுகள் ஆனது. அதுவரை தாக்குப்பிடிக்கும் ஆற்றலும் தொடர்ந்து வளரும் திறனும் அமேசானுக்கு இருந்தது.

லாபத்தைவிட வளர்ச்சியே பிரதானம், வளர்ச்சியை உறுதி செய்தால் லாபப் பாதையைச் சென்றடையலாம் எனும் இணைய யுகத்து நிறுவனங்களின் புதிய பொருளாதாரக் கருத்தாக்கத்தை உருவாக்கியதில் அமேசானுக்கு முக்கியப் பங்குண்டு. வாசகர்களை விமர்சகர்களாக்கிப் புத்தகங்களை மதிப்பிட வைத்தது, ஒருவர் ரசனைக்கேற்ப அவர் விரும்பக்கூடிய மற்ற புத்தகங்களைப் பரிந்துரைப்பது போன்ற உத்திகளையும் அறிமுகம் செய்து அமேசான் வலையின் மாபெரும் வெற்றியை நிலைநிறுத்திக்கொண்டது.

(வலை வீசுவோம்)
கட்டுரையாளர் தொடர்புக்கு: narasimhan@gmail.com

SCROLL FOR NEXT